முல்லைப் பெரியாறு: சர்ச்சையை உருவாக்கும் கேரளா!

மேகதாது அணை பற்றி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி முடித்ததும் இன்னொரு பிரச்சினை துவங்கி விட்டது.

பிரச்சினையைத் துவக்கியிருப்பவர் கேரள நீர்வளத்துறை அமைச்சரான ரோஷி அகஸ்டின்.

முகநூலில் அவர் போட்டிருந்த பதிவு தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

அப்படி என்ன இருக்கிறது அந்தப் பதிவில்?

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை மட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவுகள் எல்லாம் பெற்ற நிலையில் – “முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு. அப்படிப் புதிய அணையைக் கட்டத் திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது“ என்றிருக்கிறார் அந்தப் பதிவில்.

“கேரளாவுக்குப் பாதுகாப்பு. தமிழகத்திற்குத் தண்ணீர் என்பதே கேரளாவின் இலக்கு” என்றும் தெரிவித்திருக்கிறார்.

இவருடைய இந்தப் பதிவு தமிழகத்தில் முல்லைப் பெரியாறு நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஒரு பக்கம் மேகதாது அணைப் பிரச்சினை கர்நாடகத் தரப்பில்.

இன்னொரு பக்கம் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை கேரளத் தரப்பில்.

திராவிடம் என்று நாம் அணைத்துக் கொண்ட மாநிலங்கள் தான். இருந்தும் தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து எத்தனை பிரச்சினைகள்?

பிரச்சினைகளைக் கொடுப்பத்தில் தேசியக் கட்சிகள், தோழமையான மாநிலக் கட்சிகள் என்கிற பேதமில்லை. எல்லாமே தமிழ்நாடு விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கின்றன. தமிழ்நாடு தான் தொடர்ந்து இருபுறமும் குரல் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்!

*

Comments (0)
Add Comment