இந்தியாவில் தேவகவுடா: இலங்கையில் ரணில்!

ஒரு இடத்திலும் வெல்லாத கட்சி அரியணை ஏறிய அதிசயம்.

1996 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறியது.

அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

நம்ம ஊர் ஆட்கள் கருணாநிதி, ஜி.கே.மூப்பனார் பெயர்களும் கூட பிரதமர் பதவிக்கான பரிசீலனையில் இருந்தன.

‘’என் உயரம் எனக்கு தெரியும்’’ எனக்கூறி, பிரதமர் பதவியை நிராகரித்தார் கருணாநிதி.

மூப்பனாருக்கு போதிய ஆதரவு இல்லை. தேவகவுடாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

அவரது ஜனதா தளம் கட்சி கர்நாடக மாநிலத்தில் 16 எம்.பி. இடங்களைக் கைப்பற்றி இருந்தது.

தேவகவுடா பிரதமர் ஆனார்.

16 எம்.பி.க்களை மட்டும் வைத்துள்ள ஒருவர் பிரதமரா? என உலக நாடுகள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தன.

இதனை விட அதிசயம், அண்டை நாடான இலங்கையில் நேற்று அரங்கேறியுள்ளது.

இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ரணில் விக்ரம சிங்கேயும் தோற்றுப் போனார்.

அவரது கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ரணில் மட்டும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

இப்போது இலங்கையில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார்.

ஆளுங்கட்சியான ராஜபக்‌ஷே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி ஆதரித்ததால், உச்ச பொறுப்புக்கு வந்துள்ளார்.

73 வயதாகும் ரணில், ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் காரணமாகவே உயர் பதவிகளை எட்டியுள்ளார்.

நிருபர் டூ அதிபர்

6 முறை இலங்கை பிரதமராக இருந்த ரணில், அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து தான்.

ரணில் விக்ரமே சிங்கே – சட்டம் படித்தவர்.

அவரது தாத்தா விஜேவர்த்தனா பல பத்திரிகைகளை சொந்தமாக நடத்தியவர்.

அவரது அப்பா எஸ்மாண்டுவும் பத்திரிகை அதிபர்.

சட்டம் படித்தாலும், தங்கள் பத்திரிகையில் நிருபராக வேலை பார்த்தவர் ரணில்.

1973 ஆம் ஆண்டு அந்த பத்திரிகைகள் அனைத்தையும் தேசிய மயமாக்கியது இலங்கை அரசு.

இதன் பின்னரே அரசியல் களத்தில் குதித்தார் ரணில்.

’’எங்கள் பத்திரிகையை அரசு தேசிய மயமாக்கி இருக்காவிட்டால் நான் நிருபராகவே எஞ்சிய காலத்தை ஓட்டி இருப்பேன். ஒரு போதும் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்‘’ என அடிக்கடி சொல்வார் ரணில்.

முதன் முறையாக 1993 ஆம் ஆண்டு அவர் பிரதமர் ஆனார்.

அதுவும் கூட விபத்து தான்.

அப்போது அதிபராக இருந்த பிரேமதாசா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

இதனால் பிரதமராக இருந்த ராஜேதுங்கா அதிபர் ஆனார். தனது பிரதமர் நாற்காலியில் ரணிலை உட்கார வைத்தார். இதனை தொடர்ந்து ஐந்து முறை பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளார்.

அதிபர் பதவி தேர்தலில் 2 முறை போட்டியிட்டு இரு முறையும் தோற்றவர் ரணில் என்பது கூடுதல் தகவல்.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment