ஜூலை 20 – உலக செஸ் தினம்
மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் உத்வேகத்துடனும் ஒருமனதான சிந்தையுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள நினைப்பதில் தவறில்லை; ஆனால், அப்படித்தான் நிகழும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
சில நேரங்களில் எவரெஸ்ட் சிகரம் போலத் தன்னம்பிக்கையைக் குவித்து வைத்தவர்கள் கூட குப்புறடிக்கத் தரையோடு சாயும் தருணங்கள் வாய்க்கும்.
‘இனி மீளவே முடியாது’ என்ற எண்ணத்தில் தொடங்கி ‘இந்த நாள் ஏன் இப்படி வாய்த்திருக்கிறது’ என்று சிறிதான சலிப்பு வரை நம் மனம் பல்வேறு நிலைகளில் சோம்பிச் சுணங்கும்.
அந்நேரங்களில் நம்மை மீட்டெடுக்க உதவும் காரணிகள் ஒன்றாகத் திகழ்கிறது ‘செஸ்’.
எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’ விளையாட்டு.
பழமையான ஆட்டம்!
பிரிட்டன், ரஷ்யா, மத்தியதரைக்கடல் நாடுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் விளையாட்டுக்குத் தனி மதிப்பு உண்டு.
இந்த காலகட்டத்தில்தான் செஸ் தோன்றியது எனும் உறுதியான தகவல்கள் இல்லை எனினும், அது இந்தியாவில்தான் பிறந்திருக்க வேண்டுமென்று வாதிடுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் செஸ் விளையாடப்பட்டிருக்கிறது. கி.பி.600களில் குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் இது தோன்றியிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் எகிப்திலும் இது போன்றதொரு ஆட்டம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
இரண்டும் ஒன்றல்ல என்ற விவாதம் முன்வைக்கப்பட்டாலும், அதுவும் மூளைக்கு வேலை தரும் நோக்கத்துடன் ஆடப்பட்டதைப் புரிந்துகொள்ள முடியும்.
போர்க்களத்தில் வெறும் வீரத்தால் மட்டும் வெற்றியைச் சுவைக்க முடியாது. அதற்குப் பல உத்திகளும் நுணுக்கமான முடிவெடுக்கும் திறனும் தேவை. குறிப்பாக, ஒரு போரில் ஈடுபடுவதற்கு முன்பாகத் திட்டமிடல் மிக அவசியம்.
வியூகம் என்ற பெயரில் முன்னோர்கள் இதனைச் செயல்படுத்தியிருக்கின்றனர். எதிராளி இதைச் செய்தால் நாம் இதைச் செய்வோம் என்று முன்கூட்டியே திட்டமிடும் வியூகங்களைச் சாவகாசமாகச் சிந்திக்கும் ஒரு விளையாட்டுதான் ‘செஸ்’. சதுரங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லால் இது அழைக்கப்பட்டிருக்கிறது.
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, அமைச்சர்களுடன் ராஜாவும் ராணியும் சேர்ந்து மன்னராட்சியின் வரைபடத்தை நமக்கு வழங்கும் ஒரு சதுரங்கப் பலகை. அதில் இருக்கும் கறுப்பு வெள்ளை கட்டங்கள் நம் வாழ்விலும் இன்ப துன்பங்கள் சரிபாதி எனும் தத்துவத்தை உணர்த்தும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியாவில் செஸ் விளையாடப்பட்டாலும், குதிரைப்படை பயன்படுத்தும் வழக்கம் அங்கில்லை என்பதால் அந்நிலப்பகுதியில் தோன்றியிருக்க முடியாது எனக் கருதப்படுகிறது.
பெர்சியர்களிடம் இருந்து அரேபியர்களைத் தொற்றிய செஸ், அதன்பின் மீண்டும் முகலாயர் ஆட்சி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. அதன்பின், ஆங்கிலேயர்கள் இவ்விளையாட்டை பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றபோது ‘ராணி’க்கு அதிக அதிகாரத்தைத் தந்தனர்.
அதுவரை, செஸ் விளையாட்டில் போர் வீரர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட ராணிக்கு இல்லை என்றே சில குறிப்புகள் கூறுகின்றன.
பழைய சதுரங்க பலகை, பழைய காய்கள் என்று முழுக்க பழமையான விளையாட்டாக இருந்தபோதிலும், இது தரும் புத்துணர்ச்சியை வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாது.
அதனாலேயே, இன்றும் இவ்விளையாட்டு ’நிர்வாகக் கலை’க்கான அடித்தளமாகப் போற்றப்படுகிறது.
தலைநிமிர வைத்த ஆனந்த்!
சிற்றூரோ பெரும் நகரமொ, எப்படி வியர்வை சிந்தி விளையாடும் ஆட்டங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதற்கிணையாக செஸ் போன்ற உள்ளரங்கு விளையாட்டுகளுக்கும் குறிப்பிட்ட அளவில் ‘பாலோயர்கள்’ உண்டு.
1955இல் ராமச்சந்திர சாப்ரே என்பவர் தேசிய செஸ் சாம்பியன் ஆனதில் இருந்து, இவ்விளையாட்டு தேசிய அளவிலான முக்கியத்துவத்தைப் பெற்றது.
1961இல் முதல் சர்வதேச மாஸ்டர் எனும் பெருமையை மானுவல் ஆரோன் பெற, 1988இல் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்று இந்தியாவை செஸ் அரங்கில் தலைநிமிரச் செய்தார் விஸ்வநாதன் ஆனந்த்.
2000-2002 மற்றும் 2007-2013 காலகட்டங்களில் சர்வதேச செஸ் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
2001இல் எஸ்.விஜயலட்சுமி இந்தியாவின் முதலாவது பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் பெருமையை அடைந்தார்.
உலக அரங்கில் இதுவரை 72 கிராண்ட் மாஸ்டர்களை உலவச் செய்திருக்கிறது இந்தியா. அது மட்டுமல்லாமல், ஆண் மற்றும் பெண் இரு பிரிவிலும் முதல் 100 இடங்களை வகிக்கும் சாதனையாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. இது மேலும் பெருக வேண்டுமென்பதே செஸ் ரசிகர்களின் விருப்பம்.
செஸ் விளையாட்டை கொண்டாடுவோம்!
செஸ் என்பது வெறுமனே அறிவுஜீவிகளுக்கான விளையாட்டல்ல. நமக்கிருக்கும் புத்திசாலித்தனத்தை, சிந்தைக்கூர்மையை அது மேலும் வளர்த்தெடுக்கக்கூடியது. அந்த வகையில், அது ஒரு ஊக்கியாகவே விளங்குகிறது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு செஸ் கற்றுக்கொடுப்பதன் மூலமாக, வாழ்வின் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கான உத்வேகத்தை அவர்களிடம் உருவாக்க முடியும்.
மிக முக்கியமாக, வீழ்ச்சியும் எழுச்சியும் வாழ்க்கையில் சர்வ சாதாரணம் என்பதை போதனையாக அல்லாமல் விளையாட்டின் வடிவில் புரிய வைக்க முடியும்.
ஏதேனும் ஒன்றில் நாம் பெறும் வளர்ச்சி, மற்றொன்றிலும் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
அந்த வகையில் இன்ன பிற கலை, விளையாட்டு, வாழ்வியல் அத்தியாவசியங்களில் முன்னேற்றங் காணவும் ‘செஸ்’ உதவும்.
அந்த வகையில், தினசரி வாழ்வைத் திறம்பட கைக்கொள்வதற்கான ஒரு வழியாகவும் இது கருதப்படுகிறது. வெறுமனே வீடியோ கேம்களுக்கு புதைந்து உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்வதை விட, இதனால் கிடைக்கும் பலன் மிக அதிகம்.
1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று ‘சர்வதேச செஸ் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ‘உலக செஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் இவ்விளையாட்டு சில கோடி பேரைச் சென்றடைந்திருந்தாலும், இப்போதும் இது அறிவுஜீவிகளுக்கானது எனும் அடையாளத்தையே சுமந்து வருகிறது.
செஸ் விளையாட்டு என்பது வெறுமனே உத்திகளை யோசிப்பது மட்டுமல்ல அதனைச் செயல்படுத்துவது என்று புரிந்துகொண்டால் அது எல்லாருக்குமானதாக மாறும்.
வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அதற்கான விதையாக அமையுமென்று நம்பலாம்!
-உதய் பாடகலிங்கம்