ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கொரோனா பாதிப்புக்கு வரம்புகளோ, எல்லைகளோ இல்லை. அது முதல்வர் முதற்கொண்டு பலரையும் பாரபட்சமில்லாமல் தொற்றுகிறது. பிரபலமானவர்களுக்குத் தொற்று ஏற்படும் போது அது செய்தியாக வெளியே தெரிகிறது.
சாதாரண பொது மக்களுக்கு அதே பாதிப்பு வந்தாலும், அது பரவலாகத் தெரிவதில்லை.
இவ்வளவுக்கும் முன்பு தமிழ்நாட்டில் இங்கங்கே நடந்த கொரோனா பரிசோதனை முகாம்கள் இப்போது நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டதாக உணர்கிறவர்களே சென்று எடுத்தால் தான் உண்டு.
முன்பு முகக்கவசம் அணிவதில் இருந்த கவனம் இப்போது பரவலாக இல்லை.
அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அந்த உணர்வு இல்லை. பொது இடங்களில் கும்பலாகக் கூடுகிறார்கள்.
அரசியல் கூட்டங்களுக்கும், ஆடி மாதம் என்பதால் கோவில் வழிபாட்டுக்கும் கூட்டமாகக் கூடுகிறார்கள்.
இதனால், தொற்று பரவலாகப் பரவ வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
கல்விக் கூடங்களில் பரிசோதனைகள் நடத்தப்படுகிறபோது கொரோனா பாதிப்பை உணர முடிகிறது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை சராசரியாக இரண்டாயிரத்துக்கும் மேல் இருக்கிறது, இப்படிப் பாதிக்கப் படுகிறவர்களில் குழந்தைகளும் அடக்கம்.
எண்ணிக்கை குறைந்தும் ஏறியும் இருக்க, இடையிடையே பெய்கிற மழைச் சூழலும், ஈரமான தட்பவெப்பமும் கொரோனா பரவலுக்கு இன்னும் கூடுதலான காரணமாகலாம்.
இந்த முறை கொரோனா பரவலில் உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பதால் பொதுவெளியில் ஒருவித அலட்சியம் நிலவுகிறதா?
விழிப்பு தேவைப்படுவது அரசுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் தான்.