ஆக்ராவில் முகலாய மன்னன் ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காதலின் சின்னமாக, அழகின் சின்னமாக அது பார்க்கப்படுகிறது. தஞ்சையில் காதலின் சின்னம் – அழகின் சின்னம் என்பதோடு, பொது நோக்கமும் கொண்ட ஒரு தாஜ்மஹால் இருக்கிறது.
கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், உண்மை!
தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரை பலரும் அறிந்திருப்பார்கள். அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக பழகியவர்.
அதனால்தான், 1777-ல் பிறந்த இவரது பிறந்த நாள், இன்றும் (செப்டம்பர் 24) மக்களால் கொண்டாடப்படுகிறது.
சரபோஜி மன்னர் பலமொழிகளை அறிந்தவர், குறிப்பாக தமிழ் மொழி மீது தீராக் காதல் கொண்டவர்.
ஓலைச் சுவடிகள், அரிய நூல்களையும் சேகரித்தவர், உலக அளவில் கவனத்தை ஈர்த்த சரஸ்வதி மஹால் நூலகத்தில், தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய பல்வேறு மொழிகளில் இலக்கியம், இசை, மருத்துவம் என பல்துறைகளைச் சேர்ந்த ஓலைச் சுவடிகள், அச்சிலிடப்பட்ட நூல்களை இடம்பெறச் செய்தார்.
உலகெங்கிலும் இருந்து, சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வரவழைத்து, சரஸ்வதி மகால் நூலகத்தில் இடம்பெறச் செய்தார்.
தஞ்சாவூர் பகுதியில் இருந்து, ராமேஸ்வரம் மக்களுக்கு வழி நெடுக தனுஷ்கோடி வரை பல சத்திரங்களை உருவாக்கினார்.
அக்காலத்தில், ஆகப்பெரும்பாலான மக்கள் கால்நடையாகத்தான் வெளியூர் பயணம் மேற்கொள்ள முடியும். சிலர் மாட்டு வண்டிகளில் செல்வார்கள். அவர்களுக்கு இந்த சத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
தஞ்சை காஞ்சி வீடு சத்திரம், மீமிசல் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேஸ்வர சத்திரம், தனுஷ்கோடி சேதுக்கரை சத்திரம் உட்பட பல, இப்போதும் காணக் கிடைக்கின்றன.
இப்படி, இவரது புகழை இன்றும் சொல்வதுதான் முத்தம்மாள் சத்திரம்.
இந்த இரண்டாம் சரபோஜி மன்னர், தனது 22ம் வயதில் அரசராக பொறுப்பேற்றார். அற்கு முன்பாகவே அவருக்கு ஒரு காதல் இருந்தது.
அவரது, தஞ்சை அரண்மனையில் பணிபுரிந்த உயர் அதிகாரி ஒருவரின் தங்கையான பேரழகி முத்தம்மாள் மீதுதான் காதல்!
ஆனால், ‘அரசராக பொறுப்பேற்க இருப்பவர், ஒரு சாதாரண அதிகாரியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை.. அதுவும் மராட்டிய வம்சம் அல்லாத பெண்ணை மணமுடிப்பதா’ என்று உறவுகளுக்குள்ளே எதிர்ப்புகள் எழுந்தன.
மேலும், ‘மராட்டிய வம்சம், ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தாலும், சரபோஜி – முத்தம்மாள் உறவில் பிறந்த குழந்தை அரசுரிமைக்கு தகுதியில்லை’ என்று ஆங்கிலேய அரசு உத்தரவிடுமோ என்கிற அச்சமும் அரச அதிகாரிகளுக்கு இருந்தது.
ஆகவே, இரண்டாம் சரபோஜி மன்னர், முத்தம்மாளை திருமணம் செய்துகொண்டு ராணியாக அறிவிக்கவில்லை.
ஆனால், முத்தம்மாளின் சொந்த ஊரான ஒரத்தநாட்டில் மாளிகையும் அமைத்துக் கொடுத்ததோடு, பொன், பொருள் அளித்துவந்தார்.
இதற்கிடையே முத்தம்மாளுக்கு குழந்தை பிறந்து, சில நாட்களிலேயே இறந்துவிட்டது. மீண்டும் கருவுற்ற அவருக்கு, இறந்தே குழந்தை பிறந்தது. அந்த பிரசவத்தின்போது முத்தம்மாளும் மரணித்துவிட்டார்.
அதற்கு முன்பாக, முத்தம்மாள் மரணத் தருவாயில் இருக்க, சரபோஜி மன்னர் கதறி அழுதார்.
அவரிடம் முத்தம்மாள், “என் பெயரை என்றென்றும் சொல்லும்படியாக, ஒரு தர்ம சத்திரம் ஏற்படுத்துங்கள்.
அங்கு கர்ப்பிணிப் பெண்களுக்குச் சிறப்பு மருத்துவம் அளிக்க வேண்டும்.
என்னைப்போல் இன்னொரு பெண், பிரசவத்தின் போது இறக்கக் கூடாது” என கோரிக்கை வைத்தார்.
முத்தம்மாளின் கோரிக்கையை கேட்டு நெகிழ்ந்த சரபோஜி உடனடியாக ஒரத்த நாட்டில், மருத்துவனை போன்ற சத்திரம் கட்ட உத்தரவிட்டார். அதற்கு முத்தம்மாளின் பெயரையே வைத்தார்.
ஒரே சமயத்தில் 5,000 பேர் உண்டு, உறங்கி ஓய்வு எடுப்பதற்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட அந்த சத்திரத்தில், இலவச மருத்துவமும் அளிக்கப்பட்டது. அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு தனியாக மருத்துவ பிரிவு உருவானது.
மேலும், கல்விக்கூடமும் அமைக்கப்பட்டது. தனித்தனியாக அமைக்கப்பட்டன. ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்த சத்திரத்தின் கிழக்குப் பகுதி நுழைவு வாயிலுக்கு மேலே மராத்தி மொழியில் ஒரு கல்வெட்டு இருக்கிறது.
அதில், சத்திரம் கட்டப்பட்டதற்கான காரணத்தையும் ஆண்டையும் (1800) பதிவு செய்திருக்கிறார் சரபோஜி மன்னர்.
இங்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கிணறுகள், சத்திர அலுவலர்கள், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகள் என எதற்கும் குறையில்லை.
மருத்துவம், கல்வி, அன்னதானம் என மக்களுக்கான சத்திரமாக இருந்தாலும், அழகுக்கும் கண்கவர் சிற்பங்களுக்கும் குறைவில்லை.
குதிரையும், யானையும் சேர்ந்து தேரை இழுத்துச்செல்வது போன்ற கருங்கல் சிற்பங்கள், செங்கல் செதுக்குச் சிற்பங்கள், சுதைச் சிற்பங்கள் என அற்புதமாக இருக்கின்றன.
மேல்தளம் உள்ள ராஜஸ்தானி பாணியிலான மாடம், உருளை வடிவப் பெரிய தூண்கள், நடைபாதைகள், முற்றங்கள், பூஜை அறைகள், காய்கறித் தோட்டம், மாட்டுப் பண்ணை என்று அனைத்து வசதிகளுடன் அமைந்து கலைக்கூடமாக இருப்பதுடன், அன்னச் சத்திரமும் அழகுடன் திகழ்ந்திருக்கிறது.
சரபோஜி மன்னர், ஒரத்தநாடு பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் குறிப்பிட்ட நிலங்களை இந்த சத்திரத்துக்கு ஒதுக்கினார்.
மேலும்,ஊர் எல்லையில் வசூலிக்கப்படும் சுங்க வரியும், சாராயக் குத்தகை வரியும் சத்திரத்தின் நிர்வாகச் செலவுக்கு அளிக்க உத்தரவிட்டார்.
தவிர இந்த நிதிகள் போதாதபோது, அரண்மனையிலிருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்தார்.
காலப்போக்கில் அரச வம்சம் செல்வாக்கு இழக்க, இந்த முத்தம்மாள் சத்திரம் கண்டுகொள்ளப்டாமல் போனது. பிறகு, அரசு பள்ளி இயங்கியது. பிறகு அதுவும் மாற்றப்பட்டது.
மொத்தத்தில் இந்த முத்தம்மாள் சத்திரத்தின் வரலாறு – மக்கள் தொண்டு – உணர்ச்சி மிகு காதல்.. என எதையும் தற்போதைய சந்ததி அறிய முடியாத சூழல்.
இதற்கிடையேதான் வரலாற்று ஆய்வாளர் சிலர், அரசின் கவனத்துக்கு முத்தம்மாள் சத்திரம் பற்றிய தகவல்களை கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கவனத்தில் எடுத்தது. முத்தம்மாள் சத்திரம் குறித்த ஆவணங்களை, வருவாய்த் துறையிடமிருந்து பெற்றது.
முத்தம்மாள் சத்திரத்தை அதன் பழமை மாறாமல், சீரமைத்து, நினைவுச் சின்னமாக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. விரைவில் முத்தம்மாள் சத்திரம் புதுப்பொலிவு பெறும்.
தஞ்சை பகுதியில் பெருவுடையார் ஆலயம், மராட்டியர் அரண்மனை, சிவகங்கை பூங்கா போன்றவற்றுடன் மேலும் ஒரு சுற்றுலா தலமாக, முத்தம்மாள் சத்திரமும் அமையும்!
வெறும் காதல் சின்னமாக மட்டுமின்றி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட முத்தம்மாள் சத்திரத்தை வாய்ப்புள்ளோர் அவசியம் சென்று வாருங்கள்.
– யாழினி சோமு.