முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் காணொளி வழியாகத் தலைமை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியவற்றில் இருந்து ஒரு பகுதி.
‘’தமிழ், தமிழன் என்கிற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம். தமிழறிஞர்கள் பலர் இணைந்து மொழிச் சிதைவுக்கு எதிராகப் போராடினார்கள். அதில், பெண்களும், மாணவர்களும் பங்கேற்றனர். அப்படிப்பட்ட போராட்டம் தான் 1938-ல் நடந்த போராட்டம்.
அதன் பிறகு 1967-ம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா தான் சென்னை மாகாணத்தின் பெயரை ‘’தமிழ்நாடு‘’ என்று மாற்றினார். அந்த நாளைத் தான் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
சங்கரலிங்கனார், ம.பொ.சிவஞானம் என்று எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாடு உருவாகப் போராடியிருக்கிறார்கள். அத்தனை தலைவர்களையும் நான் தலைவணங்குகிறேன்.
நீங்கள் விரும்பிய ஆட்சியை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
1967க்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தெற்கு நிமர்ந்திருக்கிறது. 9.22 விழுக்காடு அளவுக்கு ஜி.டி.பி.யில் நாம் உயர்ந்திருக்கிறோம். இந்தியாவில் பெரும்பான்மையான சிறந்த கல்வி நிறுவனங்களில் 32 தமிழ்நாட்டில் இருக்கின்றன.
சிறந்த பொறியியில் கல்லூரிகள் 3 தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடாக இருக்கிறது.
சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியதால், திராவிட இயக்க ஆட்சி அமைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் இவை.
அமைதியான தமிழகம் தான் அனைவருக்குமான தமிழகம் என்பதை உணர வேண்டும். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசுவது குறுகிய எண்ணம் கொண்டதல்ல, பரந்து விரிந்த எண்ணத்துடன் தான் மாநில சுயாட்சியை கேட்கிறோம்.
‘’தமிழ்நாடு வாழ்க’’, “வாழ்க தமிழ்,’’ என்ற முழக்கங்களுடன் தமிழ்நாடு முதல்வர் தனது பேச்சை நிறைவு செய்ய, அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று அந்த முழக்கங்களை முழங்கி வழிமொழிந்தனர்.