இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவர் யார்?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமார் 4,800 பேர் வாக்களிக்க உள்ளனா். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம்சிவப்பு நிறத்திலும் வாக்குச் சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரண்டு நிறத்தில் வாக்குச் சீட்டு அளிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாடாளுமன்றத்தில் வரும் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதேபோல், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

மொத்தமுள்ள 10,86,431 வாக்குகளில் திரௌபதி முா்முவுக்கு சுமார் 6.67 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அவா் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment