பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் நடித்த படங்கள் பற்றிய ரசனையை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன்.

இதோ அந்தப் பதிவு…

நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய திரைப்பட நினைவுகள் வந்துசென்ற வண்ணமிருந்தன.

தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த நடிப்புப் பாங்கைக் கொண்டிருந்த அரிய நடிகர்களுள் ஒருவர்.

அவரது கதாபாத்திரங்களை ஞாபக இழையோடும்போது, முதலில் வருவது ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் அவர் ஏற்ற நாடக இயக்குநர் பாத்திரம்.

தேவியை (ஸ்ரீதேவி) தீவிரமாக காதலிப்பதை உணர்த்த மிகு உணர்ச்சி வெடிப்புக்களோடு கலந்த சற்றே மனம் சிதைவுற்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்தப் படத்தின் கதையோட்டத்திற்கு உயிர் சேர்த்தவர்.

இந்தப் படம் வெளியான 1980ஆம் ஆண்டிலேயே அவரை முதன்மைப் பாத்திரத்தில் சித்திரித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த ‘மூடுபனி’ படத்திலும் பாலியல் பணியாளிகளை வெறுப்பில் கொலை செய்யும் மனோகதி சிதைவுற்ற பாத்திரத்தை ஏற்று பார்வையைக் கவர்ந்திருந்தார்.

1984 இல் அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ யிலும் மனம் நலிவுற்ற சவால்மிக்க கதாபாத்திரம்.

தன் உருவத்திற்கும் நடிப்புப் பாங்கிற்கும் ஒத்த எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்க அவர் என்றும் தயங்கியதில்லை. அது மிகச் சரியான தேர்ந்தெடுப்பும்கூட.

தமிழில் ஓர் இயக்குநராக அவர் சில காலம் வலம்வந்தாலும் அவர் நடித்த படங்களே நம் எண்ணத்தில் நிற்கின்றன என்பதற்கு, கடந்த 10 ஆண்டுகளில் மலையாள சினிமா அவரது திறமையை துல்லியமாக பயன்படுத்திக்கொண்டிருப்பதை உதாரணமிடுகின்றன ’22 ஃபீமேல் கோட்டயம்’, ‘இடுக்கி கோல்ட்’ போன்ற பல படங்கள்.

2021-ல் தமிழில் வெளியான ‘கமலி ஃப்ரம் நடுக்காவிரி’ படமும் அவரது நடிப்பை வெளிக்கொணர்ந்த படங்களில் சிறப்பிடம் வகிப்பது. இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதும்போது இவ்விதம் குறிப்பிட்டிருந்தேன்.

“படத்தின் அனைத்தையும் தன் பின்னுக்குத் தள்ளி செறிவம்சமாக ஒருவர் தோன்றியிருக்கிறார். அவர், கமலியின் சென்னை ஐஐடி கனவை நனவாக்க பக்கபலமாயிருக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அறிவுடைநம்பி கதாபாத்திரத்தில் வரும் பிரதாப்போத்தன்.

இப்படத்தின் மிகப்பெரிய ஈர்ப்புக்கலனாக இவரைப் பார்க்கிறேன். கதாபாத்திரத்தின் உள்ளுணர்வை உடல் பாவனையில் தக்கவைத்து மனிதன் என்னமாய் நடிக்கிறார்.

விஸ்வாமித்திரன்

தமிழில் வழமைப்பட்ட நாயகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அதிநாயகத்துவம் அடைந்துவிட்ட ரசனை வீழ்ச்சியில்,

பிரதாப்போத்தன் போன்ற குணச்சித்திர நடிகர்களுக்கென மையங்கொள்ளும் தனித்த படைப்புகளுக்கு இங்கே இடமில்லாமல் போனது ஆற்றுப்படுத்தமுடியாத சோகம்”.

அன்னாருக்கு என் ரசனையில் அரும்பிய மலர்களை காணிக்கையாக்குகிறேன்” என்று விஸ்வாமித்திரன் நினைவுகூர்ந்துள்ளார்.

Comments (0)
Add Comment