ஊமை விழிகளை 7 நாளில் எடுக்கத் திட்டமிட்டோம்!

ஜோதி இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு

ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபாரம் மாலில் சிறப்பாக நடந்தது.

முக்கிய திரையுலக பிரபலங்களும் படக்குழுவினரும் கலந்துகொண்ட விழாவில் ஜேசுதாஸ் பாடிய அன்பின் வழி, பல்ராம் பாடிய ஆரிராரோ, கார்த்திக் பாடிய போவதெங்கே மற்றும் ருத்ரம் பாடல்களை வெளியிட்டனர்.

மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் பாடல் காட்சிகளை கண்டுகளித்து கைதட்டி ரசித்தனர்.

நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான இளங்கோ குமரவேல், “ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படம் ஒன்று. அதுக்கு காரணம் இந்த படத்தோட கதை அந்த மாதிரி.

திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தை இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக எடுத்திருக்காங்க. ஜோதி நிச்சயம் வெற்றியடையும்” என்று வாழ்த்தினார்.

“ஜோதி எனக்கு ரொம்ப பிடித்த தலைப்பாகிவிட்டது. கதையில் சொல்லியிருக்கக் கூடிய விசயத்தின் சாரமாகத்தான் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும்.

சுடர் என்றும் கீழ்நோக்கிப் போவது கிடையாது. மேல்நோக்கியே செல்லும். அதுபோலதான் இந்த ஜோதி படமும் மேலே மேலே போய்கிட்டே இருக்கும்” என்று பாராட்டினார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

இயக்குனர் சங்க செயலாளர் ஆர்வி. உதயகுமார், “திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஜோதியை ஏற்றியிருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் என்பது ஊமை விழிகள் படம் முதற்கொண்டு பல படங்களில் பார்த்துள்ளேன்.

ஊமைவிழி படத்தை ஏழு நாளில் படமாக்கத் திட்டமிட்டு நான்கு இயக்குநர்களைக் கொண்டு உருவாக்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்புத் தந்தது திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஆஸ்தான நடிகர் கேப்டன் விஜயகாந்த்.

ஒரு நண்பரை நம்பி ஒரு படத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுத்து, அந்த நம்பிக்கை மாறாமல் ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்குவது திரைப்படக்கல்லூரி மாணவர்களால்தான் முடியும். அப்படி இந்த டீம் அமைந்திருக்கிறது” என்று பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தார்.

– பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment