ஜெயகாந்தன் படத்தை ரசித்த காமராஜர்!

ஜூலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்

காமராஜரும், பாலதண்டாயுதமும் பார்த்த ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம்.

[கம்யூனிஸ்ட் பேரியக்க ஆளுமைகள் பற்றி ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இன்று காங்கிரஸ் பேரியக்கத்தின் பேராளுமையான பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இங்கே ஜெயகாந்தன் எழுதிய இந்தக் கட்டுரை – இது ஒரு மீள் பதிவுதான்].

“… ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் முடிந்து அதை மற்றவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தீர்மானித்தேன்.

எனது முயற்சிகளுக்கு, முழு ஆதரவு தந்து எங்கள் நலனில் மிக நாட்டம் கொண்டிருந்த தோழர் பாலதண்டாயுதத்தைப் படம் பார்ப்பதற்கு அழைத்தேன். அவர், தலைவர் காமராஜரையும் அழைக்கும்படி என்னிடம் சொன்னார்.

ஒரு நாள் இரவு… நானும் தோழர் பாலதண்டாயுதமும் சென்று தலைவர் காமராஜரைச் சந்தித்தோம்.

’உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் குறைபாடுகள் என்று நான் எண்ணி மனச்சுருக்கம் கொண்ட விஷயங்கெளல்லாம் பெரும் நிறைவாகவே பலராலும் பாராட்டப்பட்டன.

தலைவர் காமராஜரை, முதன் முறையாக ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தைப் பார்க்க வேண்டும் என்று அழைக்கப் போயிருந்தபோதுதான் சந்தித்தேன்.

ஆனல், அவரோ என்னை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார். எனது உறவினர்களைப் பற்றியெல்லாம் விசாரித்தார்.

அப்போது காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் அக்கிராசனராக இருந்தார். பெரும்பாலும் டெல்லியிலேயே வாசம் செய்தார்.

அவருக்கு அகில இந்தியப் பிரச்சினைகள், நேரு மறைந்த முதலாண்டில் மிக அதிகமாய்க் கனத்தன.

இத்தனை வேலைகளுக்கிடையே இந்தியாவின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கண்டு கொண்டிருக்கும் அவருக்கு, ’உன்னைப் போல் ஒருவன்’ படத்தைப் பார்க்க விருப்பமிருந்தாலும் நேரமிருக்குமா என்று நியாயமாகவே நான் சந்தேகம் கொண்டேன்.

தோழர் பாலதண்டாயுதத்தின் வார்த்தைக்கு இணங்கி மரியாதை கருதியே, அவர் வருவார் என்ற நம்பிக்கை இல்லாமல் நான் அவரை அழைக்கப் போயிருந்தேன்.

இரவு 9 மணிக்கு மேல் திருமலைப் பிள்ளை ரோடில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரைச் சென்று பார்த்தோம்.

இரவு 1 மணி வரை நாங்கள் நகரவே இல்லை. சினிமா தவிர, அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் குறித்து அந்த முதல் சந்திப்பிலேயே அவரோடு மனம்விட்டுப் பேசலாம் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது.

’மறுநாள் அதிகாலையிலேயே படக் காட்சியை வைத்துக் கொண்டால் தனக்கு வந்து படம் பார்க்கச் சவுகரியமாய் இருக்கும்’ என்றார் காமராஜர்.

மறுநாள் காலை 8 மணிக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தலைவர் காமராஜர், பாலதண்டாயுதம் ஆகிய விசேஷ அழைப்பாளர்கள் உள்பட நாங்கள் அனைவரும் ’உன்னைப் போல் ஒருவன்’ முதல் பிரதியைப் பார்த்தோம்.

படம் பார்க்கும்போது காமராஜர் விம்மியதையும் மனம் நெகிழ்ந்ததையும் கண்டு நான் மகிழ்ந்தேன்.

’இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாகக் காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம், நமது ரசனை கெட்டுப் போனதுதான்’ என்றார்.

அவரது அந்த வாசகங்களை என்னைப் பாராட்டும் முகத்தான் அவர் சொல்கிறார் என்று கருதினேனேயன்றி, இதுமாதிரி முயற்சிகளுக்குப் பிறரது உதவியை நாடிப் பெறுவது இல்லை என்ற தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவில்லை…’’ – ஜெயகாந்தன்

[ஜெயகாந்தனின் ’ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் இருந்து…]
நன்றி: நடராஜன். ஆர்

Comments (0)
Add Comment