அப்பா மீன், அம்மா மீனாக மாற முடியுமா?

நூல் அறிமுகம்:

கும்பகோணத்தில் பிறந்த நாராயணி சுப்ரமணியன் எழுதிய நூல்தான்  ‘விலங்குகளும் பாலினமும்’.

உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டமும், கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் நூலாசிரியர்.

இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் கட்டுரைக்கான அருணா ராஜகோபால் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் கடல்சார் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பிரபல இதழ்களிலும், சிறுவர் அறிவியல் இதழ்களிலும் அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

“அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க அதிகரிக்க, விலங்குகளின் பழக்க வழக்கவியல் குறித்த பல்வேறு வழக்கமான பார்வைகள்கூட கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன.

மனித சமூகத்தின் பால் வேறுபாடு மற்றும் கட்டமைப்புகளை நாம் விலங்குகள் உலகத்துக்குள்ளும் புகுத்துகிறோமா? என்று பல பெண் விஞ்ஞானிகள் கேள்வி கேட்டு, தரவுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே வெளியிட்டு வருகிறார்கள்” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாராயணி.

“எப்படிப் பார்த்தாலும், மனித இனத்தின் பார்வையிலிருந்து நாம் சொல்லும் “பாலினம்” என்பதற்கும் விலங்குகளின் பால்சார்ந்த சமூகப் பங்களிப்புக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு.

எல்லா பெண் விலங்குகளும் சற்றே நாணத்துடனும் அமைதியாகவும் தாயன்பின் ஊற்றாகவும் நடந்துகொள்வதில்லை, ஆண் விலங்குகள் எல்லாம் மூர்க்கமானவையும் அல்ல.

பிரசவித்து பிள்ளை பெறும் ஆண் விலங்குகள், ஆண் பாலே இல்லாமல் பெண்கள் மட்டுமே கொண்ட விலங்கினங்கள், உடலளவில் பெரிய பெண்களைக் கொண்ட விலங்கினங்கள், பெண் வழி சமூகமாக இயங்கும் விலங்குக் கூட்டங்கள் என்று விலங்கியல் உலகில் பல்வேறு பாலின நெகிழ்தன்மைகள் உண்டு.

பாலினப் பண்புகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன” என்றும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

புதுடெல்லியில் உள்ள விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்ப துறை முதுநிலை அறிவியலாளர் த. வி. வெங்கடேஸ்வரன் எழுதியுள்ள அணிந்துரையில் சிறு பகுதிதாய் வாசகர்களுக்காக இங்கே…

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபைண்டிங் நீமோ (Finding Nemo) ஆங்கில கார்ட்டூன் சிறார் திரைப்படத்தில் தன் பெற்றோர்களைத் தேடி உலகங்கும் செல்லும் நீமோ இறுதியில் திரும்பி வந்து பார்க்கும்போது, அறிவியலின்படி அப்பா மீன் மார்லின் பால் இனம் மாறி அம்மா மீனாக மாறி இருக்கவேண்டும்.

கதைக்குக் காதும் கண்ணும் இல்லை என்பது போல திரைப்படத்தில் இந்த அறிவியல் தவறு உள்ளது. எப்படி ஆண் அப்பா மீன் ஒன்று, பெண் பால் அம்மா மீனாக மாறியிருக்க முடியும்?

‘தேனீ போல சுறுசுறுப்பு’ எனும்போது உள்ளபடியே இது உவமை;தன்மை நவிற்சி அல்ல. பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது தமிழ் இலக்கியத்தில் உவமையணி ஆகும்.

ஒன்றை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவது இது. உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறுவது தன்மை நவிற்சி. ஆயினும் விலங்கு உலகில் நாம் புகுத்தும் உவமையை தன்மை நவிற்சி என மயங்கி விடுகிறோம்.

எனவே தான் திருமிகு நாராயணி அவர்கள் இந்த நூலில் கூறுவது போல தேனீயின் கூட்டு வாழ்கையை மனித சமூக மாண்புகளோடு திரித்து “ஐயே! ஒரு ராணிக்கு அடிமையா, முட்டையும் இடமுடியாம எல்லாரையும் கவனிச்சிட்டு என்ன வாழ்க்கை” என்று கூறுகிறோம்.

அவர் விளக்குவதுபோல “இது சமூகக் கட்டமைப்பில் வேலைக்காரத் தேனீக்களின்மீது திணிக்கப்பட்ட பொறுப்பு இல்லை. தேனீக்களின் மரபணுவிலேயே இது பொதிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வேலையே செய்யாத ராணித் தேனீ ஒரு சர்வாதிகாரி என்றோ, உணவைக் கூடத் தேட முடியாத ஆண் தேனீக்களை ஒட்டுண்ணிகள் என்றோ, பொறுப்புகளில் உழலும் வேலைக்காரத் தேனீக்களை தியாகிகள் என்றோ சொல்லிவிட முடியாது.

அவை மனித மதிப்பீடுகள், விலங்குகளின் உலகில் இது செல்லுபடியாகாது.”

ஆண் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளனவா? மனித இனத்திலும் இயல்பாக இயற்கையாக திருநர்கள் இருக்கிறார்கள்.

விலங்கு உலகத்திலும் இதுபோன்றே பல பாலினங்கள் உள்ளன.

சில உயிரினங்களில் ஏழுக்கும் மேற்பட்ட பாலின வகைகள் உள்ளன என்கிறது ஆய்வு.

மேலும் சமீபத்தில் 500 க்கும் மேற்பட்ட விலங்குகளில் ஒரே பாலின சேர்க்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய மனித சமூக விருப்பு வெறுப்புகளை விலங்குகள் உலகத்தில் புகுத்தி; “பார்! விலங்கு உலகமும் நமது அதே நியதியை தான் கடை பிடிக்கிறது” – என நமது போலிகளை இயற்கை என நியாயப்படுத்துகிறோம்.

நாராயணி

இணை சேர்ந்ததும் பெண் பூச்சி ஒன்று, தான் உறவு கொண்ட ஆண் இணையை தின்றுவிடும். இதை விளக்கும்போது, விலங்குகளின் உலகில் பரிணாம ரீதியாக இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆண் பூச்சிகள் தியாகிகள் அல்ல, இணையைத் தின்னும் பெண் பூச்சிகள் யட்சிகளோ மோகினிகளோ அல்ல. அது வேறு உலகம் என்பதைப் புரிந்துகொண்டால்தான் இதில் தேவையற்ற பாலின ஏற்றத்தாழ்வுகளைப் புகுத்தாமல் இருக்கமுடியும்.

விலங்குகளும் பாலினமும்.
ஆசிரியர்: நாராயணி சுப்ரமணியன்.
வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை.
விலை ரூ. 160/-
தொடர்புக்கு: 75500 98666

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment