தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

அ. மார்க்ஸ் வேதனை

சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ்.

“தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம் சார்பு தொழிற்சங்கத்தின் கிளைச் செயலாளர் மற்றும் பல பதவிகளில் இருந்து செயல்பட்டவர். தொழிலாளர் யூனியன் அமைத்துப் போராடியதற்காகப் பழிவாங்கப்பட்டவர்.

10 ஆண்டுகள் 124 அம் நம்பர் டிப்போவிலும், 121, 114 ஆகிய டிப்போக்களில் ஒவ்வொன்றிலும் 5 ஆண்டுகளும் என மொத்தம் 20 ஆண்டுகள் (2002 – 2022) தற்காலிகப் பணியாளராகவே இருந்த தோழர் சென்ற 6 மாதங்களுக்கு முன் ’செப்டிக் டாங்க்’ சுத்தம் செய்ய வந்தக் குழாயில் இருந்த அதி அழுத்த நீர் குழாயின் ‘நாசில்’ வெடித்துப் படுகாயமுற்றார்.

ராயப்பேபேட்டை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முடியாமல் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது உயிர் பிழைத்திருந்தாலும் எந்தப் பணியும் செய்ய இயலாத வகையில் அவரது வலப்புற மண்டை ஓடு தகர்ந்துள்ளது (படத்தில் காண்க).

தற்போது 5,000 ரூ நிதி உதவி மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது சக ஊழியர்கள் 2 இலட்ச ரூ நிதி உதவி செய்துள்ளனர்.

வாரியத் துணைப் பொறியாளர் அனந்தராமன் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூ கடந்த 6 மாதகாலமாக வழங்கிவருகிறார்.

மீண்டும் கபாலத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த உதவித் தொகை இன்னும் எத்தனை மாதங்கள் தொடரும் எனத் தெரியவில்லை. தோழர் ஜானகிராமனால் தெளிவாகப் பேசமுடியவில்லை.

சொற்களை உச்சரிப்பதில்தான் தடுமாறுகிறாரே தவிர தெளிவாகச் சென்னை மெட்ரோ வாட்டர் துறையின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

மலக் குழிகள் (septic tank) தூய்மை என்பது ஆகக் கொடூரமான ஒரு பணி. ஆபத்தான பணி. அது குறித்து விளக்கமாக எங்கள் அறிக்கையில் அடுத்த 2 நாட்களில் வெளியிடப்படும்.

நான் தோழர்கள் ரமணி மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு அறிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும்.

அ.மார்க்ஸ்

மலக்குழிக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது என்பது இந்தியச் சட்டங்களின் படியே குற்றம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முற்றிலும் நவீன முறையில் எளிதாக மனிதர்களை இறக்காமலே அவற்றைச் சுத்தம் செய்ய முடியும்.

புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்கள் அத்தகைய தன்மையுடனேயே கட்டப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக வேண்டும்.

இதுகுறித்து விரிவாக எங்கள் அறிக்கை பேசுகிறது” என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார் அ. மார்க்ஸ்.

பா.மகிழ்மதி

Comments (0)
Add Comment