அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் – 33
தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சிய பெண்கள் மிகச் சிலரே. அதில் மிக முக்கியமானவர் சச்சு. குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, ஹீரோயினா நடித்து, காமெடியில் ஒரு ரவுண்ட் வந்தவர் பின்னர் குணசித்திர வேடங்களிலும் முத்திரை பதித்தார்.
‘கலையரசி’யில் தொடங்கி ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை புரட்சித் தலைவருடன் பல படங்களில் நடித்துள்ள சச்சு, ‘ஆயிரத்தில் ஒருவன்’னுக்காக தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுல தான் என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது. டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் ‘ராணி’ என்ற படம் தான் என் முதல் படம்.
அடுத்தது அறிஞர் அண்ணா எழுதின ‘சொர்க்கவாசல்’ படத்தில் உடனே வாய்ப்பு கிடைத்தது.
அதில் பத்மினியம்மா, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், அஞ்சலி தேவி, பி.எஸ்.வீரப்பானு பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் சின்ன பொண்ணா நானும் நடிச்சேன்.
வீரப்பாவின் மகளா, இளவரசி கேரக்டர் எனக்கு. ஏ.காசிலிங்கம் தான் அந்தப் படத்தை இயக்கினார்.
“சொர்க்கவாசல்’ படப்பிடிப்பு 3 வருஷம் நடந்தது. அதே நேரத்துல எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி அம்மாவை வச்சு ‘நாம்’ என்ற படத்தையும் காசிலிங்கம் இயக்கிக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர்., ஏ.காசிலிங்கம், வீரப்பா, கருணாநிதி எல்லாரும் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனி ஆரம்பிச்சு அந்தப் படத்தை தயாரிச்சாங்க. ரெண்டு படப்பிடிப்பும் அடுத்தடுத்த ஃப்ளோர்ல ஒரே நேரத்துல நடந்துகிட்டு இருந்துச்சு.
நான் அப்ப படுசூட்டிகையா இருப்பேன். டைரக்டர் காசிலிங்கம் என்னை நாம் படப்பிடிப்பு நடக்குற ஃப்ளோருக்கு தூக்கிட்டு போவார். நான் துறுதுறுனு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருப்பேன்.
அப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் என்னை கூப்பிட்டு மடியில உட்கார வச்சுப்பார். எம்.ஜி.ஆர். யாருன்னே அப்ப எனக்குத் தெரியாது. யாரோ ஒரு மாமானு நினைச்சுப்பேன். 6 வயசுல என்ன தெரியும்?
“ஏய்… அவர் பெரிய நடிகர்”னு பாட்டி தான் சொல்லுவாங்க. அதுதான் நான் எம்.ஜி.ஆர். அண்ணனை முதல் முதலா சந்திச்சது. அதுக்கு அப்புறமும் அவர் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு ஏனோ எனக்கு அமையவே இல்லை.
அந்த நேரத்துல தான் கோயமுத்தூர் சரோடி பிரதர்ஸ் என்கிற கம்பெனி ‘கலையரசி’ படத்தைத் தயாரிச்சாங்க.
அவங்க பெரிய டெய்லர்ஸ்.
டெக்னிக்கலா எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திட்ட இந்த காலத்துல சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் பண்றது ஈஸி.
ஆனா அந்த காலத்துலயே பறக்கும் தட்டு என்ற கான்செப்டை முதல் முதலா திரையில காட்டின படம் ‘கலையரசி’ தான்.
டெக்னிக்கலா எல்லேரையும் மிரள வச்ச படம் அது. அந்த படத்தோட ஷூட்டிங்கை பார்க்கவே அவ்வளவு பேர் வருவாங்க. அதுவும் காசிலிங்கம் டைரக்ஷன் தான்.
நான் எம்.ஜி.ஆருக்கு தங்கச்சியா நடிச்சேன்.
“நீல வான பந்தலின் மேலே… நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா”னு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதின பாட்டை நான் பாடிட்டே மாட்டு வண்டி ஓட்டிட்டு வர்ற மாதிரி சீன்.
நீ தனியா தான் ஓட்டிட்டு வரணும் ஏறு வண்டியிலனு சொல்லிட்டாரு காசிலிங்கம்.
பாட்டு மனப்பாடம் பண்ணிட்டு வண்டியில ஏறி உட்கார்ந்துட்டேன். கேமரா ஸ்டார்ட் பண்ணா, மாடு ஒரு பக்கமா போகுது, என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியல.
இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த எம்.ஜி.ஆர். அண்ணன்,
“பாவம், சின்ன பொண்ணு… அவளால வண்டி ஓட்ட முடியாது. நான் ஓட்டுற மாதிரி சீன் வச்சுக்குங்க. அவ என் பக்கத்துல உட்கார்ந்து வரட்டும்”னு சொல்லி சீனை மாத்தினார்.
அந்தப் படத்துல அண்ணன் கூட நடிச்ச அனுபவத்தை மறக்க முடியாது.
அதுக்கு அப்புறம் என் அக்கா மாடி லட்சுமி, மதுரை வீரன் படத்துல குறி சொல்ற மாதிரி ஒரு கேரக்டர் பண்ணியிருப்பாங்க.
நானும் அக்காவும் அடிக்கடி லாயிட்ஸ் ரோட்டுல இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு போவோம்.
அப்ப அவருடைய அம்மா இருந்தாங்க. அவருடைய ரெண்டாவது மனைவி கூட உயிருடன் இருந்தாங்க, சக்கரபாணி அண்ணன் ஃபேமிலியும் அங்க தான் இருந்தாங்க. பெரிய கூட்டுக் குடும்பமா அவர் அங்க வாழ்ந்துட்டு இருந்தாரு.
அந்த நேரத்துல நான் ஏ.வி.எம். நிறுவனத்துடன் ரெண்டு வருட கான்ட்ராக்ட்டில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதனால வெளிப் படங்கள்ல நடிக்கக் கூடாது.
கான்ட்ராக்ட் முடிஞ்சதும், எம்.ஜி.ஆர். அண்ணனை பார்த்து சான்ஸ் கேட்க ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்துப் போனார் பாட்டி. அப்ப எனக்கு 15 வயசு.
“சச்சுவை நம்பித் தான் ஃபேமிலியே இருக்கு. நீங்க உங்க படத்துல ஹீரோயின் சான்ஸ் கொடுக்கணும்”னு பாட்டி கேட்டதும், சரி சொல்றேன் என்று அனுப்பி வைத்தார்.
கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் நினைவுபடுத்தபோன போது, “சச்சு ரொம்ப சின்ன பொண்ணா இருக்கு. கொஞ்சம் போகட்டும்” என்றார்.
எனக்கு பெரிய ஏமாற்றமா போச்சு. படார்னு எழுந்து அறையைவிட்டு வெளியேறி காரில் வந்து அமர்ந்து கொண்டேன்.
பாட்டிக்கு தர்ம சங்கடமா போச்சு. அந்த மாதிரி நீ செஞ்சிருக்கக் கூடாதுனு எல்லாரும் அட்வைஸ் செஞ்சாங்க.
அந்த நேரத்துல பத்மினியம்மா, சாவித்திரி மாதிரி சீனியர் ஆர்டிஸ்ட் தான் எம்.ஜி.ஆர். உடன் ஜோடியா நடிச்சுகிட்டு இருந்தாங்க.
நான் ரொம்ப சின்ன பொண்ணு. அந்த வயசுல எனக்கு அது புரியல.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் ‘குமரிக்கோட்டம்’ படத்துல தான் அவரை சந்திச்சேன்” என்று சொல்லிவிட்டு சற்று இடைவெளிவிட்ட சச்சு, சில பழைய புகைப்படங்களை காட்டியபடி அந்த நாளை நினைவுகூர்ந்தார்.
“எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. என்னை கூப்பிட்டு, “நான் அன்னிக்கு அப்படி சொன்னேன்னு கோவமா?” என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
“நீ கொஞ்சம் காத்திருந்து வந்து பார்த்திருக்கலாம்ல, பாரு இப்ப நீ காமெடி பண்ண ஆரம்பிச்சுட்ட, இனிமே எப்படி உன்ன ஹீரோயினா போடமுடியும் சொல்லு?” என்றார்.
நான் என்னண்ணே பண்றது? எங்க குடும்பத்துல என்னை முன்னால தள்ளுறாங்க. நான் சம்பாதிச்சே ஆகணும். அதான்… பரவாயில்லணே என்றேன்.
“காமெடி பண்றது சுலபமில்ல. அது உனக்கு நல்லாவே வருது. அதுல பெரிய அளவுல வருவ” என்றார்.
சினிமாவை தாண்டி பர்சனலா அவர் செய்த பல உதவிகளை மறக்கவே முடியாது.
என்னோட அக்கா ‘மாடி’ லட்சுமி எம்.ஜி.ஆரை சந்திச்சு, “எனக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்ல. தொடர்ந்து என்ன பண்றதுன்னு புரியல. நீங்க தான் ஏதாவது வழி பண்ணனும்” என்று கேட்டபோது,
”உன்கிட்ட நல்ல பேச்சுத் திறமை இருக்கு. உன் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு. நீ என் ரசிகர் மன்ற சார்பா கூட்டங்கள்ல கலந்துகிட்டு பேசுறியா?” என்று கேட்டார்.
அப்ப எம்.ஜி.ஆர். தி.மு.க.வுல இருந்தார். அதனால தி.மு.க. கூட்டங்களில் கலந்துகிட்டு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பா லட்சுமி அக்கா பேச துவங்கினாங்க.
நாளடைவில் அக்காவை தி.மு.க. உறுப்பினராக்கி நிறைய கூட்டங்களில் பேசும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார்.
அக்காவை முழு நேர அரசியல்வாதி ஆக்கினார். ஆனால் அதே மேடைகளில் எம்.ஜி.ஆரை பற்றியே அக்கா கடுமையாக தாக்கிப் பேசிய சம்பவமும் நடந்தது!
(சரித்திரம் தொடரும்…)
-அருண் சுவாமிநாதன்.