சித்த மருத்துவ உணவியல் என்பது தங்களுக்கு அருகாமையில் உள்ளவற்றை மட்டும் உணவாக, அவ்வுணவையே மருந்தாக… பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்தது. எளிமையான வாழ்க்கைக்கான இனிய சூத்திரமும் அதுவே!
மூலிகைகளின் இலை, தழை, வேர், காய், கனி, விதை இவற்றில் எது உடலின் சீரணத்திற்கு ஏற்றதோ… ஊறு விளைவிக்காததோ… உடலுக்கு வலுவூட்டம் தருகிறதோ… உயிரை வளர்க்கிறதோ… ஆன்மாவை மலரச் செய்கிறதோ அதுவே சிறந்த உணவு! இதுவே மனித இனத்தின் உணவியல் கோட்பாடு என்றும் சொல்லலாம்.
இந்தக் கோட்பாடினை தவறாமல் பின்பற்றுபவர்கள் பழங்குடி சமுதாயத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை! இயற்கையோடு பிணைந்த உணவியலாகட்டும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் வாழ்வியலாகட்டும் பழங்குடி சமுதாயத்தில் இவ்விரு அழகியலையும் கண்கூடாக பார்க்கலாம்.
உணவியல் கோட்பாடு:
ஒரு சமுதாயத்தின் உணவு பழக்கம், தாவரங்களை மட்டுமே சார்ந்தது அல்ல! மற்ற பிற உயிரினங்களையும் சார்ந்தது. அருகாமையில் வாழக்கூடிய ஆடு, கோழி, மாடு, மீன், நத்தை, நண்டு. காட்டுப்பன்றி… எனப் பலவற்றை உள்ளடக்கியது. இருளர்கள் உணவு என்றாலே அவர்கள் வயல் எலிகளையும், உடும்பையும், பன்றியையும் இன்னபிற ஊர்வனவைகளையும் பறப்பவைகளையும் சுட்டுச் சாப்பிடுவார்கள் என்றே சமூகம் எண்ணுகிறது.
விலங்கினங்களைத் தவிர்த்து பல்வேறு வகையிலான மூலிகை உணவுகள், அவர்களின் உணவியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பொதுவாக மூலிகைகள் குறித்த அனுபவ அறிவு, பல பழங்குடி சமூகத்தில் அதிகளவில் இருப்பதைப் பார்க்க முடியும்.
இன்றும் பல மலைப்பகுதிகளில் சுரத்திற்கும், வேறு உடல் உபாதைகளுக்கும் தயாரிக்கப்படும் முதல் மருந்து, மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாய வகைகளே! மூலிகைகளை கீரைகளாக… மருந்துகளாக… விஷ முறிவுப் பொடியாக பயன்படுத்தும் வித்தை இருளர்களுக்கே உரித்தானது.
பாம்புக்கடி மருத்துவம்:
பாம்புக் கடிக்கான மருந்தாக ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிடப்படும ஆகாச கருடன், விராலி, நிலவேம்பு, எட்டி, வெள்ளெருக்கு, குன்றிமணி, காட்டுச் சீரகம், தும்பை… போன்றவை சித்த மருத்துவ விஷ முறிவு மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை!
திரைப்படத்தில் குறிப்பிடப்படும் அறிவொளி இயக்க காட்சி… ‘நிலவேம்பு செடியின் (ஆனால் படத்தில் காட்சிப்படுத்ததப்பட்டிருக்கும் மூலிகை மலைவேம்பு) கசப்பு தெரியலனா, விஷம் தலைக்கு ஏறிடிச்சுனு அர்த்தம்…. உஷாராத் தான் காப்பாத்தணும்…’ என செங்கேணி சிறுவர்களுக்கு பாடம் எடுக்கும் காட்சி, அறிவுக்கான எடுத்துக்காட்டு! பாம்புக்கடிக்கு மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்கு மூலிகை மருந்துகளை பயன்படுத்தும் கலை அவர்களுக்கு பரம்பரையாகத் தெரிந்திருக்கிறது. அவர்களின் உணவியல் முறைகளிலும் மூலிகைகளின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும்.
இருளர், நரிக்குறவர் போன்ற பழங்குடியினரை ஆழ்ந்து கவனித்தால், அவர்களின் பெரும்பங்கு உணவுகள் விலங்கினங்களாகவும் மூலிகைகள் சார்ந்தும் அமைந்திருக்கலாம். அவ்வுணவுகள் அவர்களின் கடின உழைப்புக்கு ஏற்றதாக…. அவர்களது செரிமானத்திற்கு உகந்ததாக அமைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு இயற்கை உணவுகளை, சுவைபட சமைத்து நன்கு உண்ணும் விதமாக அவர்களின் உணவியல் முறை தானாக பண்பட்டிருக்கும்.
இப்போதெல்லாம் செங்கல் சூலை, இரும்புப் பட்டறை போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருளர்கள் இருக்கிறார்கள். காலை முழுவதும் கடினமான வேலை! மாலை வேளையில் நிதானமாக உணவை சமைத்து உண்ண அவர்களுக்கு நேரம் கிடைக்கும். மீறும் உணவு மறுநாள் பகல் பொழுதுக்கு நுராகரம் ஆக… பழைய சோறு ஆக உருமாறி அவர்களுக்குப் புஷ்ஷ கொடுக்கும்!
அவர்களின் ராஜ்ஜியமான வனத்திற்குள் அப்பகுதி மக்களுக்கு பணிகளில் அதிக முன்னுரிமை அளித்தால், செங்கல் சூலை மற்றும் இருப்புப்பட்டறைகளுக்கு செல்லும் அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
‘மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாது… அது பாவம் என்று நீங்கள் சொன்னால், ஐயா நாங்க மாட்டுக்கறியை விரும்பியா தின்கிறோம். ஆட்டுக்கறி விலை அதிகம். அதனால் எங்களுக்கு ஏற்ற விலையில் கிடைக்கும் மாட்டுக்கறியை உண்கிறோம்…’ என்பார்கள் நாடோடிகள்.
இக்காலத்தில் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் கூட ஒரு சமுதாயத்தின் உணவைத் தீர்மானிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
இயல்பில் மாறாத மக்கள்:
சில நாடோடி சமூகங்களில் தமக்கென தனி இருப்பிடம் இல்லாமல், ஊரின் ஒதுக்குப்புறமாக… செங்கல் சூலைகளின் ஓரமாக… ஊரின் பாழடைந்த மண்டபங்கள் என அவர்கள் வசிக்கும் பகுதிகள் ஆபத்து மிக்கவை!
வாழ்க்கை வசதிக்குறைவு… கல்வி முறையாக கிடைக்காதது… போன்ற சிக்கல்கள் இருந்தாலும் அவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக இயற்கையை அதன் இயல்பு மாறாமல் பயன்படுத்திக்கொள்ளும் திறன் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மற்றவர்களை விட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்கிறது மருத்துவ உலகம்!
மூலிகை அறிவல் அவர்களை மிஞ்ச இயலாது. மனிதாபிமானத்தில் அவர்களோடு போட்டி பெரும்பாலனோருக்கு சிரமமே!
ஜெய்பீம் படத்தில் வரும் காட்சியை மனிதாபிமானத்துக்கான எடுத்துக்காட்டாக சுட்டலாம்! வயல் எலிகளை கோணிக்குள் பிடித்துப் போடும் செங்கேணி, எலிக்குஞ்சு ஒன்றை மட்டும் எடுத்து அதன் போக்கில் செல்ல விடுவதும், காரணம் கேட்கும் ராஜாக்கண்ணுவிடம் ‘இம்மாத்துண்டு எலிக்குட்டியத்தின்னு நம்ம பெருங்குடல் நிறையப் போகுதாக்கும்…. என அதற்கு ராஜாக்கண்ணு ஆமாம்ல… என ஆமோதிப்பதும் மெச்சத்தக்க மனித அபிமானம்.
வானுயர்ந்த கட்டிடங்களில் கிடைக்காத நேயம்:
இன்னொரு தருணத்தில் செங்கேணி கதாபாத்திரம் பேசும் ஓர் உரையாடல்… “சார்… அந்த போலிஸ்காரங்களே பாம்பு கடிச்சு உயிரோடு போராட்ற நிலையில எங்கிட்ட வந்தாலும் அந்த விஷத்த முறிச்சி காப்பாத்த பார்ப்பேன்…” என அவர்களின் அறத்தை அழகாக பதிவு செய்திருப்பார் இயக்குநர்.
உண்மையில் பாம்புகடி பட்டு இருளர்களிடம் செல்பவர்களிடம் ‘இவ்வளவு பணம் வைத்தால்தான் சிகிச்சை’ என்று இதுவரை ஒரு இருளர் கூட வாதம் செய்திருக்கமாட்டார்கள் என்பதே உண்மை. வானுயரக் கட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்றிலாவது பணம் செலுத்தாமல் உள்ளே நுழைய அனுமதி கிடைக்குமா!
உளவியல் கலந்த உணவியல்:
‘உங்க அப்பாவ அடிச்சே கொன்னவங்க தந்த காசுலதான் உங்கள வளர்த்தேன்னு, பின்னால எங்க பசங்ககிட்ட எப்படிச் சொல்வேன் சார்… அந்த பாவக் காசுல வயித்த நிரப்பறதா சார்… என பேரம் பேசிய பணத்தை மறுத்து உயர் அலுவலரின் அடுத்த வார்த்தைக்கு கூட காத்திராமல் அங்கிருந்து வெளியேறும் செங்கேணியின் நடை மெய்சிலிர்ப்பை உண்டாக்கும் காட்சியமைப்பு!
விளிம்பு நிலைக்கும் அப்பால் திக்கற்ற நிலையில் உள்ள எளிய மனிதர்களை பணத்தால் வாயை அடைத்து அவர்களை எடுப்பார் கைப்பிள்ளையாகவே வைக்கலாம் என்று காலம் காலமாக யோசிக்கும் ஆணவத் திமிரை அடியோடு முறிக்கும் காட்சி சான்று அது.
எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் பணத்தால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியாது. சுயமரியாதை. தன்மானம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். மனிதத் தன்மை அற்று மிதமிஞ்சிய திமிரால் செய்த கொடுமைகளை… அவமானங்களை விழுங்கி…. இழப்பீடாகத் தூக்கி பொறுக்கி அதனால் எறியும் பணத்தைப் கிடைக்கும் உயர்ரக உணவும் வாழ்க்கை வசதிகளும் ஒருபோதும் ஆனந்தம் தராது. உளவியல் சார்ந்த உணவியலுக்கு அந்த காட்சியும் செங்கேணியின் கம்பீரப் பேச்சும் சிறந்த உதாரணம்.
நண்டுக்குழம்பு… நண்டுச்சாறு… நத்தை மசியல்… ஈசல் வறுவல்… காட்டுப்பன்றி இறைச்சி… போன்றவை மருதம், முல்லை, குறிஞ்சி சார் வாழும் பழங்குடிகளின் உணவுப் பெட்டகத்தில் இடம்பெறும் தவிர்க்க முடியாத உணவு வகைகள்!
சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் குறைக்க, உடலுக்கு ஊட்டம் தரும் உணவாக, மூலம் போன்ற நோய்களைக் குணமாக்க அவர்கள் மேற்சொன்ன ஜீவப்பொருட்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
விலங்கினங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு ரகங்களில் மூலிகைகளின் வாசம் அதிகம் இருப்பதையும் நாம் உணர முடியும்! அவர்களின் வாழ்க்கை… தனித்துவமானது! எடுத்துக்காட்டாக அவர்களின் நண்டு ரசம் முறையும் பார்க்கலாம்.
நண்டு ரசம்:
உரலிலிட்டு இடித்த நண்டுகளை (தேவையான அளவு) பெரிய மண்பானையில் போட்டு, பொடித்த மிளகு, சுக்கு, தனியா, சிற்றரத்தை, அதிமதுரம், மஞ்சள் போன்ற அஞ்சறைப்பெட்டி பொருட்களை கலந்து, நான்கு லிட்டர் தண்ணீர் சேர்த்து, அடுப்பேற்றி மெல்லிய தீயில் எரித்து நான்கில் ஒரு பாகமாக சுருக்கி மருந்தாக பயன்படுத்தலாம்.
சுரம், உடல்வலி, கபம் சார்ந்த குறிகுணங்களுக்கு இந்த நண்டு ரசம் நற்பலன்களை வழங்கும். குளிர் மற்றும் மழைக் காலங்களுக்கான சிறப்பான மருத்துவ பானம் நண்டு ரசம்!
மொத்தத்தில் ஜெய்பீம்களும் இருளர் போன்ற பழங்குடியினர்களும் உச்சத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்!
– நன்றி மரு.வி. விக்ரம்குமார்., எம்டீ (எஸ்) படச்சுருள் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி