அதிமுக அலுவலகம் உண்மையில் யாருக்குச் சொந்தம்?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது – சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம்.

அண்மையில் அங்கு நடந்த மோதலால் அந்த அலுவலகம் வருவாய்த் துறையால் பூட்டிச் சீல் வைக்கப்பட்டிருக்கிது. அதோடு காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.

அது யாருக்குச் சொந்தம்? – இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அ.தி.மு.க.வில் மோதிக் கொண்ட இரு அணிகளைச் சேர்ந்தவர்களை வரும் 27 ஆம் தேதியன்று விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

உண்மையில் யாருக்கு இந்த அலுவலகம் சொந்தமானது தெரியுமா?

அ.தி.மு.க.வில் இன்றைக்கு மோதிக்கொள்ளும் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் கூட இதன் பின்னணி தெரியுமா?

இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி.ஆரின் மனைவியுமான திருமதி. ஜானகி அம்மாள் தான்.

சுமார் பத்து கிரவுண்டு பரப்பளவுள்ள இந்தக் இடத்தை 1950 களில் அவர் வாங்கினார். அப்போது அவர் திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நேரம்.

துவக்கத்தில் இந்த இடத்தில் தான் தென்னிந்திய நடிகர் சங்கம் இயங்கியிருக்கிறது.

1962 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாரும் திருமணம் நடந்த பிறகு அவர்கள் இருவரும் ராமாபுரம் இல்லத்திற்கு மாறிய பிறகு, இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் மன்றம் இயங்கியிருக்கிறது,

எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு முன்பு, தன்னுடைய கணவருடைய கட்சியான அ.தி.மு.க. இயக்கத்திற்கான அலுவலகமாக அந்த இடம் இயங்க, அதைத் தானமாக வழங்கினார் ஜானகி அம்மையார்.

1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று அ.தி.மு.க துவங்கப்பட்டபோது, இந்த இடத்தைத் தனது கட்சி அலுவலகமாகப் பயன்படுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர். அதற்கு முன்பு வரை இந்தக் கட்டடம் திருமண மண்டபமாக இயங்கியிருக்கிறது. அதை ஜானகி அம்மையாரின் சகோதரர் நாராயணன் என்கிற மணி தான் இதை நிர்வகித்து வந்துள்ளார்.

1973 முதல் இந்தக் கட்டிடமே அ.தி.மு.க. தலைமை அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்பிறகு ஜானகி அம்மையார் பெயரில் இருந்த இந்தக் கட்டடம் 1987-ல் அதிமுக இயக்கத்திற்காக மாற்றி எழுதிக் கொடுத்தார் ஜானகி அம்மையார்.

தனக்குச் சொந்தமான இடத்தை இயக்கத்திற்கென்று வழங்கி தனிப்பெருமை சேர்த்திருக்கிறார்கள் திருமதி ஜானகி அம்மையாரும், எம்.ஜி.ஆரும்.

மற்ற எந்தக் கட்சி அலுலகமும் தனிப்பட்ட ஒருவரின் சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டதல்ல. அப்படிப்பட்ட பரந்துபட்ட மனப்பான்மை அன்று அவர்களிடம் இருந்தது.

வெகுகாலம் கழித்துச் சிலர் கோரிக்கை வைத்த பிறகே எம்.ஜி.ஆர் மாளிகை என்று அந்தக் கட்டிடத்திற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இன்னும் அந்தக் கட்டிடத்தைத் தானமாக வழங்கிய திருமதி. ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு நெருங்கும் இந்த வேளையில், அவரை நினைவுபடுத்தும் அடையாளங்கள் எதுவும் அவர் வழங்கிய அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இல்லை என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம், இன்றும் அதே நோக்கத்தோடு செயல்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.

பொன்விழாக் கண்ட இயக்கத்தின் பல முக்கியமான நிகழ்வுகளுக்குச் சாட்சியமான இந்த அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் அதற்குப் பின்னிருக்கிற வரலாற்றையும், கொடை உள்ளத்தையும் சற்றே நினைவுகூரட்டும்.

Comments (0)
Add Comment