உறவுகளின் வலியைப் பேசிய பெருங்கவிஞன்!

கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்தநாள் ஜூலை – 12 (12.07.1975)

பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக தன் திரைப் பயணத்தை தொடங்கிய நா.முத்துக்குமார், தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் என்கிற கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமாருக்கு சிறுவயதில் இருந்தே புத்தகங்களோடு நெருங்கிய உறவை உருவாக்கிக் கொடுத்தார், அவரது அப்பா.

1975 ஜூலை மாதம் 12-ம் தேதி பிறந்த நா.முத்துக்குமார், 2016-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 14-ம் தேதி, தன்னுடைய 41-வது வயதில் நம்மை விட்டு, இந்த உலகத்தை விட்டு அவரது உறவை துண்டித்துக் கொண்டார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்ற நா.முத்துக்குமார், சிறந்த கவிஞன், சிறப்பான பாடலாசிரியன், நல்ல நண்பன், என தன் தனித்தனி அடையாளங்களை தன் வாழ்நாள் முழுமைக்குமான அடையாளங்களாக மாற்றிக் கொண்டார்.

எந்த வகையான பாடல் என்றாலும் அந்தப்பாடலை எளிமையாகவும் இனிமையாகவும் கவித்துவமாகவும் எழுதுகின்ற ஆற்றல் படைத்தவர் நா.முத்துக்குமார்.

இளையராஜாவின் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய முதல் பாடலின் தொடக்க வரிகளே இனிமைதான்.

“எனக்குப்பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே”
என்று தொடங்கும் அந்தப்பாடலில்,

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

-என்று காதலும் காமமும் இணைந்த தேடலை மிக மென்மையாக தன் பாடல்களில் சொன்னவர் நா.முத்துக்குமார்.

“எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே” என்று எழுதியவர் எல்லோருக்கும் பிடித்த பாடலாக இருந்தார்.

“செலவுக்கு காசில்லை… உன்னைத்தேடி வருவதற்கு பஸ்ஸிற்கு கூட காசு இல்லை என்று தொலைபேசியில் சொன்னால் போதும், இருக்குமிடம் தேடி யாரிடமாவது பணம் கொடுத்து அனுப்புவான் நண்பன் நா.முத்துக்குமார். 500 ரூபாய் கேட்டால் 1000 ரூபாய் கொடுத்து அனுப்புவான் என் நண்பன்” என்று கண்ணீர் வடிக்கிறார், நா.முத்துக்குமாரின் நண்பனும் பத்திரிகையாளரும் பாடலாசிரியருமாகிய நெல்லை பாரதி.

நண்பர்கள் உதவி கேட்டால், கடன் வாங்கியாவது உதவி செய், என்று தன் அப்பா சொன்னதாக “அணிலாடும் முன்றில்” தொடரில் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் நா.முத்துக்குமார்.

அப்பாவின் சொல்படியே நடந்தார் நா.முத்துக்குமார். அதனால் தான் நெல்லை பாரதி போல அவரின் புகழ்பாடும் நண்பர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

சினிமா மேடைகளில் மட்டுமல்ல, இலக்கிய மேடைகளிலும் தன்னை அடிக்கடி இருத்திக் கொண்டார் நா.முத்துக்குமார். எங்களது எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுப்பார், பங்கெடுக்க விரும்புவார் நா.முத்துக்குமார் என்று அவரது பெருமை பேசுகிறார்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நண்பர்கள்.

சமகாலத்தில் ஒரு கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு பேர் கலந்து கொண்ட நிகழ்வு நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமாகத்தான் இருக்கும்.

ஏன், எனில் நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் அவர் மீதான அன்பில் கலந்து கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

ஆம், “அன்பின் விழியில் எல்லாம் அழகே” என்று எழுதிய கவிஞர் அவர். அதற்காக தேசிய விருதும் பெற்றவர் அவர்.

அழகே அழகே எல்லாம் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே

– என்று சைவம் படத்தில் எழுதிய வரிகளுக்காகத்தான் இரண்டாவது தேசிய விருது பெற்றார், நா.முத்துக்குமார். முதல் தேசிய விருது, “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்காக பெற்றார்.

பாடலாசிரியர் என்பதைத் தாண்டி கிரீடம் மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார் நா.முத்துக்குமார்.

நா.முத்துக்குமார் எழுதிய புத்தகங்கள்…
தூசிகள் (கவிதைகள்)
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைகள்),
கிராமம் நகரம் மாநகரம் (கட்டுரைகள்)
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைகள்)
ஆணா ஆவண்ணா (கவிதைகள்)
என்னை சந்திக்க கனவில் வராதே (கவிதைகள்)
சில்க் சிட்டி (நாவல்)
பால காண்டம் (கட்டுரைகள்)
குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)

தான் எழுதுவது மட்டுமில்லாமல் “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி தன் நண்பர்களின் புத்தகங்களை அந்த பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு அழகு பார்த்தார் நா.முத்துக்குமார்.

தன்னுடைய முதல் பாடலை சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்திற்காக 2000த்தில் எழுதிய நா.முத்துக்குமார், 15 வருடங்களில் 1500 பாடல்கள் எழுதியிருக்கிறார் என்பது அவரது தனிச்சிறப்பு.

தொடர்ந்து பல வருடங்களாக, வருடத்தில் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையை தன்னோடு வைத்துக் கொண்டார், நா.முத்துக்குமார்.

கல்லறை மேலே பூக்கும் பூக்கள், கூந்தலைப்போய்த்தான் சேராதே… என்று எழுதிய இந்த கவிதைப்பூ கல்லறை தேடிச் சென்றுவிட்டது என்பது இன்னும் நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

“அணிலாடும் முன்றில்’ என்ற தொடரில்… தொடர்ச்சியாக உறவுகளின் பெருமையையும் வலிமையையும் பேசிய பெருங்கவிஞன், இன்று தன் அத்தனை உறவுகளையும் பாதி வழியில் அறுத்துக் கொண்டு அணைக்க முடியாத பெருந்தீயாய் கொடுமையான வலியை தன் குழந்தைகள் நடமாடும் வீட்டுக்குள் எறிந்து விட்டு தீயோடு தீயாய் தானும் எரிந்து கரைந்து போனான், காலத்தால் அழிக்க முடியாத பாடல்களின் சொந்தக்காரன், கவிஞர்களே வியக்கும் கவிதைக்காரன்.

நா.முத்துக்குமார், கடைசியாக கத்திச்சண்டை படத்திற்கு பாடல் எழுதினார் என்று சொல்கிறார்கள். ஆனால் இனிமேல் காலத்தின் காதுகளில் தொண்டை கிழிய கத்திக் கத்தி சண்டை போட்டாலும் நா.முத்துக்குமார் நமக்கு திரும்பக் கிடைக்கப் போவதில்லை.

பாடல்கள், கவிதைகளில் இரண்டு வகை என்று நா.முத்துக்குமார் ஒரு முறை சொன்னார். தமிழ்ப் புலமையையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுவது ஒரு வகை… அதை Intellectual Poetry என்பார்கள்.

எளிமையான வரிகள், வார்த்தைகளால் எழுதுவது இரண்டாவது வகை… அதை Emotional Poetry என்பார்கள்.

எனக்கு எப்போதும் எமோஷனல் போயட்ரி தான் பிடிக்கும். நான் அந்த வகை பாடல்களையே அதிகம் எழுத விரும்புகிறேன் என்பார்.

அதனால் தான்,

உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

– என்று எல்லோருக்கும் புரியும் வகையில் தன் பாடல்களில் எளிமையாய் வலிமை செய்தார் நா.முத்துக்குமார்.

  • நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment