ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம்
திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை.
மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல். எல்லாமுமாகச் சேர்ந்து ‘இவ்ளோ ஜனம் பெருகுனா இந்த பூமி என்னத்துக்கு ஆவும்’ என்று மக்களைப் புலம்ப வைக்கின்றன.
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு, எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட வைக்கின்றன.
புகைய காத்திருக்கும் எரிமலையாக ‘மக்கள்தொகை’ எனும் இமயமலை காத்திருக்கலாம்.
ஆனாலும், வேறொரு திசையின் மீதேறி ’உண்மையிலேயே மக்கள்தொகை பெருக்கம் அவ்வளவு பெரிய பிரச்சனையா’ என்று எதிர்கேள்வி கேட்பவர்களும் நம் மத்தியில் உண்டு.
முப்பது கோடி முகமுடையாள்!
பாரத தேவிக்கு முப்பது கோடி முகங்கள் உண்டு என்று பாடினார் மகாகவி பாரதி. 1947இல் 33 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை, இன்றைய தேதியில் 134 கோடிக்கும் அதிகமிருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.
உலகின் மக்கள்தொகை 800 கோடியை நெருங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 140 கோடியாக இருந்தது என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்.
2050இல், 2100இல் நமது மக்கள்தொகை எவ்வளவு இருக்குமென்று கேட்டால், வெறுமனே புள்ளியியல் விதிகளைக் கொண்டு மட்டும் பதிலளித்துவிட முடியாது.
ஆனால், அதுதான் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 2057இல் உலகின் மக்கள்தொகை 10 பில்லியனாக இருக்குமென்றும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மிக அதிகமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சராசரி வெகுவாக குறைகிறது; குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளும் கூட பெருகி வருகின்றனர்.
தீய போதை பழக்கங்களால் மனித இனப்பெருக்கமே அருகிப்போக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் சுகாதார வளர்ச்சி காரணமாகவும் ஆயுளைக் கூட்டும் சிகிச்சைகள் மூலமாகவும் மனிதனின் சராசரி ஆயுள் பெருமளவு கூடியிருக்கிறது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட, இன்று முதியோர்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகம் என்று சொல்ல முடியும்.
பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு உரிய சிகிச்சைகளைக் கண்டறிந்ததும் கூட இதற்கொரு காரணம். இதனாலேயே, கடந்த நாற்பதாண்டு காலமாக குடும்பக் கட்டுப்பாடு எனும் சொல் நம் நாட்டில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கல்வியறிவு அதிகமுள்ள சமூகங்களில் அதிக குழந்தைகள் பெறுவது தாய்மார்களின் உடல்நலனுக்கு உகந்ததல்ல என்ற புரிதல் அதிகமாயிருக்கிறது.
கூடவே, வாழ்க்கை தரத்தைப் பகிர்வதில் பங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணமும் பெருகியிருக்கிறது.
சூழும் பிரச்சனைகள்!
உணவு, நீர், இருப்பிடம், உடைகள், கல்வி, சுகாதாரம் ஆகியன இடைவிடாமலும் தேவையான அளவிலும் கிடைக்க மக்கள்தொகை முக்கியக் காரணமாக அமைகிறது.
அப்படியான வாழ்க்கைதரம் அமையாதபோது வேலைவாய்ப்பின்மை பெருக பொருளாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்கிறது.
இதன் தொடர்ச்சியாக, சமூகச் சமநிலை தவறி குற்றச்செயல்கள் பெருகும் நிலை கூட ஏற்படுகிறது.
சுகாதாரச் சீர்கேடுகளும் நோய் பரவலும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவிப்பதும் அதிகமாவது ஒட்டுமொத்த வாழ்வையும் கேள்விக்குறியாக்குகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த சீர்கேடுகளும் கூட பெருகுகின்றன.
காடுகள் அழிப்பும் கட்டட பெருக்கமும் பல்லுயிர் ஆக்கத்தின் அடிப்படையையே சிதைக்கின்றன.
இந்த உலகை அழிவுப்பாதைக்குக் கொண்டு போக வைத்திருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை பெருக்கம் மட்டுமல்லாமல் பணம் படைத்த சில மனிதர்களின் பேராசைகளும் அதன் பின்னிருக்கின்றன.
முறையான திட்டமிடல் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த மனித உழைப்பையும் பயன்படுத்தினால் இவ்வுலகையே அடியோடு மாற்றலாம் என்று சொல்பவர்களும் உண்டு.
எந்திரமயமாக்கலுக்கு எதிரான மனவுணர்வு கொண்ட இவர்கள், மக்கள்தொகை பெருக்கத்தை ஒரு வரமாகவே பார்க்கின்றனர்.
ஒருவரோ இருவரோ தனித்தனியாகப் பொருளீட்டுவதை விட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் சேர்ந்து உழைக்கும்போது கிடைக்கும் பலன் அபாரமாக இருக்கும் என்கின்றனர்.
வேளாண் உற்பத்தி தொடங்கி பலவற்றில் இந்த கூட்டுழைப்பை முன்மொழிகின்றனர். உடலுழைப்பு மட்டுமல்லாமல் மூளை சார்ந்த செயல்பாடுகளிலும் கூட திறன் பெருகும்போது பலன்களும் பெருகுமென்பது மறுக்க முடியாத உண்மை.
மாறிவரும் சூழல்!
கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்க விகிதம் வெகுவாகக் குறைந்தாலும் அரசின் திட்டங்கள் முழுதாக மக்களைச் சென்றடைவதில்லை. மாநிலங்களின் மக்கள்தொகைக்கேற்ப திட்ட மதிப்பீட்டுத் தொகையில் மாற்றங்கள் மேற்கொள்ள்ளப்படுவது இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், மக்கள்தொகை விகிதம் அதிகமிருக்கும் வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்னிந்திய மாநிலங்கள் பெறுவது குறைவாக இருக்கின்றன.
தனிமனித அளவில் பார்த்தால், கடின உழைப்பைக் கைவிட்டு ‘ஸ்மார்ட் வொர்க்’கை நம்புபவர்களால் நாம் வாழும் நிலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களால் அவை நிரப்பப்பட, குறைந்தபட்ச கூலியும் உரிய சலுகைகள் தரப்படாமல் மறுப்பதும் காரணங்களாகின்றன.
இதெல்லாம் முதலாளித்துவத்த்திற்குச் சாதகமாக அமைய சாதாரண மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
ஒரு வீக்கம் போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படும் சூழலில், கொரோனா பெருந்தொற்று மனிதர்களின் அடிப்படை வாழ்விலும் மாற்றங்களைப் புகுத்தியது.
அக்காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மையாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் அவதிப்பட்டபோதும், கூட்டாகச் சேர்ந்து பகிர்ந்து வாழும் மனநிலை வார்த்தெடுக்கப்பட்டது.
கூடவே, கணவன் மனைவி இடையே அதிகரித்த மன நெருக்கமானது குழந்தைப் பேறு விகிதத்திலும் நல்ல விளைவை ஏற்படுத்தியதாகச் சொல்கின்றன தகவல்கள்.
ஆனால், மக்கள்தொகை பெருக்கத்தைப் பொறுத்தவரை இது மோசமான விஷயம்தான்.
இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை என்ற நிலை மாறி தம்பதிகள் தேவையென்றால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த உலகில் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கருதும் மனநிலை பெருகியிருக்கிறது.
தனிப்பட்ட மனநிலை, உடல்நலம் தாண்டி உலகைக் காக்க இப்படியொரு முடிவுக்கு வருபவர்களும் இருக்கின்றனர். உடலுறவு என்பது இனவிருத்திக்கானதல்ல என்று நம்புபவர்களும் கூட உண்டு.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகள் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைப் பெறும் நாடுகள் என்று கணிக்கப்பட்டிருக்கின்றன.
ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள், அதிக குழந்தைகள் பெறும் குடிமக்களுக்குப் பரிசுகள் தந்து ஊக்குவிக்கின்றன.
இந்த சூழலே, இந்த புவியில் மக்கள்தொகை பெருக்கத்தை சாபமாக கருதுவது போல வரமாக எண்ணி மகிழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமென்பதைச் சொல்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் மக்கள்தொகை பெருக்கம் என்பது ஒரு மாபெரும் பிரச்சனைதான்.
அதேநேரத்தில், கடந்த தலைமுறையினர் போன்று இப்போது டஜன் கணக்கில் குழந்தைகள் பெறுவதெல்லாம் நடவாத காரியம்.
தனியாளாக வாழும் ஒற்றைக் குழந்தைகள் எத்தகையை சிக்கல்களுக்கு ஆளாகும் என்ற ஆய்வுக்குப் பிறகே, இப்படியொரு முடிவு நோக்கி தம்பதிகள் பலர் நகர்கின்றனர்.
மக்கள்தொகை தினம்!
எது எப்படியானாலும், போதிய ஊட்டச்சத்தின்றி சரியான பராமரிப்பின்றி குழந்தைகள் வளர்வதைத் தடுக்க மக்கள்தொகை கட்டுப்பாடுகள் மிக அவசியம்.
குறிப்பாக, தொடர்ச்சியாகக் கருத்தரித்து உடல்நலன் சிதையும் பெண்களின் நலனைக் கவனிப்பது அத்தியாவசியம்.
அந்த வகையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அவற்றைச் செயல்படுத்துவதும் நமது வாழ்க்கையின் தரம் எப்படி இருக்குமென்பதை முடிவு செய்யும்.
அந்த வகையில், 1987 முதல் கொண்டாடப்பட்டு வரும் ‘உலக மக்கள்தொகை தின’த்தை, 2022இல் 36ஆவது முறையாக கொண்டாடுவோம்! நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் பரவலைச் சீர்மைப்படுத்துவோம்! நமது வாழ்க்கை தரத்தை ஒவ்வொரு நாளும் உயர்த்துவோம்!
- உதய் பாடகலிங்கம்