நியூயார்க்கில் நடந்து முடிந்த தமிழ்ப் பெருவிழா!

ஜூலை மாதம் 1 முதல் 4 ஆம் தேதி வரை 4 நாட்கள் நியூயார்க்கில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகத்தில் வடஅமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய தமிழ்ப் பெருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

உலகளவியல் பல்வேறு நாடுகளிலிருந்து பல தமிழ் உணர்வாளர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழில் உணவு மரபில் உபசரிக்கப்பட்டது. நவீன தமிழும், சங்கத் தமிழும், கீழடி தொன்மத் தமிழும் அலசப்படுகிறது.

விழாவில் இரண்டு மலர்கள் தொகுக்கப்பட்டு செரிவாக வெளியிடப்பட்டுருக்கின்றன.

‘தலைமுறை தாண்டியும் தமிழ்’ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள மலரிலிருந்து ஒரு கட்டுரை உங்க பார்வைக்கு.

****

மேற்கு ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்தின் லெய்டன் நகரில் அமைந்திருக்கும் லெய்டன் பல்கலைக்கழகம் 1575-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகப் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்ற சிறப்புக்குரியது இது.

ஆணைமங்கலம் செப்பேடுகள், அல்லது பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள் என அழைக்கப்படும் சோழர்காலச் செப்பேடுகள், சோழ மன்னர்களின் பரம்பரை,

சோழ மன்னர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஆகியவற்றைக் கூறும் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகத் திகழ்பவை தமிழர் மட்டுமன்றி தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுபவை.

இன்று நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய ஆவணங்களின் பகுதியில் இவை பாதுகாக்கப்படுகின்றன.

இந்தச் செப்பேடுகள் கூறும் செய்திகள் ஆய்வாளர்களால் ஆய்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரிய லெய்டன் சிறிய லெய்டன் என அழைக்கப்படும் இச்செப்பேடுகள் இங்கு Or.1687 மற்றும் Or. 1688 என அடையாள எண்ணிட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு ஆனை மங்கலம் செப்பேடுகளையும் இந்தியாவிலிருந்து நெதர்லாந்துக்குக் கொண்டு வந்தவர் ஃப்லோரெண்டியூஸ் காம்பெர் (Mr. Florentius Camper) என்பவராவார்.

கிழக்கிந்திய டச்சுக் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்டிருந்த பட்டாவியா அரசு என்பது இந்தோனேசியா மற்றும் மலாயா தீவுக்கூட்டங்கள் அடங்கிய ஒரு பெரும்பகுதி.

ஃப்லோரெண்டியூஸ் காம்பெர் 1702-லிருந்து 1713 வரையிலான காலகட்டத்தில் இந்த பட்டாவியா அரசில் சமயத்துறைக்கான அமைச்சராகப் பொறுப் பேற்றிருந்தார்.

அக்காலகட்டத்தில் அவர் தமிழ்நாட்டிலிருந்து சேகரித்தவைதாம் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள்.

ஃப்லோரெண்டியூஸ் காம்பெர், ஹமாக்கர் (Hamaker) பரம்பரையில் திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இச்செப்பேடுகள் பேராசிரியர் ஹெச்.ஏ. ஹமாக்கர் (H.A.Hamaker) கைவசம் வந்தன.

இவர் லெய்டைன் பல்கலைக்கழகத்தின் முதல் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இவர் 1835 -ஆம் ஆண்டு காலமானார். இவரது வாரிசுகள் இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை 1862-ஆம் ஆண்டு லெய்ன் பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.

Or. 1687 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெரிய லெய்டன் செப்பேடுகள், 21 செப்புப் பட்டயங்களை உள்ளடக்கிய தொகுதி.

இவற்றுள் செப்புப்பட்டயங்கள் தமிழிலும் ஏனைய 5 சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தனிச்செப்பேடும் செப்பு வளையத்தால் பிணைக்கப்பட்டு சோழச் சின்னம் பொறிக்கப்பட்டச் செப்பு முத்திரையுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

முத்திரையை இணைக்கும் வளையம் அமைந்திருக்கும் பகுதியில் தெளிவாக வாசிக்கக் கூடிய வகையில் வளையத்தின் மேற்பகுதியில் தமிழில் ‘ஆனைமங்கலம்‘ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பெரிய லெய்டன் செப்பேட்டுத் தொகுதி ஏறக்குறைய 30 கிலோ எடைக்கொண்டது.

இது மாமன்னன் ராஜராஜன் ஸ்ரீவிஜய பேரரசின் மன்னனுக்கு நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரையும் பள்ளியும் உருவாக்க வழங்கிய ஆனைமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்கள் அடங்கிய நன்கொடை பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

Or. 1688 என அடையாளப்படுத்தப்படும் சிறிய லெய்டன் செப்பேட்டுத் தொகுதி மூன்று செப்பேடுகளைக் கொண்டிருக்கின்றது.

செப்பேட்டில் உள்ள வாக்கியங்களுக்கான எண்கள் குறிப்பிடப்படவில்லை. இது முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பேடாகும்.

இது முழுமையாகத் தமிழில் செதுக்கப்பட்ட செப்பேடு. மூன்று தனிச்செப்பேடுகளும் செப்பு வளையத்தால் பிணைக்கப்பட்டு, சோழர் முத்திரை பதிக்கப்பட்டுப் பிணைக்கப்பட்டுள்ளன.

இச்செப்பேடு சோழன் ராஜகேசரிவர்மன், அதாவது முதலாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.

இச்சிறிய லெய்டன் செப்பேடு சூடாமணி விகாரை பௌத்த பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையை முதலாம் குலோத்துங்கன் காலத்தில் உறுதிப்படுத்தும் வகையிலும்,

மேலும் கடாரத்து அரையனின் தூதன் ராஜவித்யாதர ஸ்ரீசாமந்தனும் அபிமானதுங்க ஸ்ரீசாமந்தனும் விண்ணப்பித்தபடி,

முன்னர் சாசனத்தில் கொடுக்கப்பட்ட தானத்தைப் பள்ளிச்சங்கத்தாருக்கே வழங்கும் வகையிலும் இச்செப்பேட்டு அரசாணை (தாமிரசாசனம்) செய்யப்பட்டுள்ளது.

இச்செப்பேடுகள் கூறும் வரலாற்றுச் செய்திகள் பொ.ஆ 11-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்கும் இடையேயான உறவை விளக்கும் ஆவணங்களாகும்.

1938-ஆம் ஆண்டு Archeological Survey of India வெளியிட்ட Epigraphia Indica and record of the Archaeological Survey of India Vol XXII 1933-34 நாவில் பெரியம் லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகளில் உள்ள செய்திகள் ஆய்வறிக்கையாக கே.வி. சுப்ரமணியன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டடன.

இந்த ஆய்வுக்குத் தேவைப்பட்ட இச்செப்பேடுகளின் மைப்படிகளை நெதர்லாந்திலிருந்து Prof. J.Ph. Vogel படியெடுத்து அனுப்பியிருந்தார். செப்பேட்டிலுள்ள ஒவ்வொருவரிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்த அறிக்கையில் அவர் வழங்கியிருக்கின்றார்.

ஸ்ரீவிஜயப்பேரரசு பொ.ஆ 7-ஆம் நூற்றாண்டு தொடக்கம் பொ.ஆ 13 வரை இன்றைய தென்கிழக்காசியாவில் இந்தோனேசியாவின் சுமத்ராவிலிருந்து, மலேசியத் தீபகற்பத்தையும் உள்ளடக்கிய தெற்கு தாய்லாந்து வரை பரந்து விரிந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரு பேரரசு.

ஸ்ரீவிஜயப் பேரரசுடன் இருந்த நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்ட செய்திகளை லெய்டன் செப்பேடுகள் மிக விரிவாக விவரிக்கின்றன.

அந்தப் பௌத்த விகாரையைப் பாதுகாக்கவும் அதனைப் பராமரிக்கத் தேவையான அடிப்படை பொருளாதாரச் செலவுகளை ஈடுகட்டவும் சோழப் பேரரசு வழங்கிய சலுகைகளையும் இச்செப்பேடுகள் துல்லியமாகப் பதிந்துள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சான்றுகள் தமிழகம் மட்டுமன்றி உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் ஏதோ ஒரு வகையில் கொண்டு செல்லப்பட்டு தமிழகத்திற்கு வெளியே அவை பாதுகாக்கப்படுகின்றன.

இவ்வரலாற்றுக் கலைப்பொருட்களில் பெரும்பாலானவை செம்பு, வெள்ளி, கல் ஆகிய பொருட்களால் ஆனவை மட்டுமல்லாமல், ஆசியாவின் சிறப்பு சேகரிப்புகளாக ஐரோப்பிய, அமெரிக்க அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

இவை மட்டுமன்றி பனை ஓலைகளாலான ஓலைச்சுவடிகளும், தாள் சுவடிகளும் உலகின் பல்வேறு ஆவணப் பாதுகாப்பகங்களில் ஆவணங்களாகப் பாதுகாப்பில் உள்ளன.

இவற்றோடு செப்புப்பட்டயங்களும் இணைகின்றன.

தமிழ்நாட்டு வரலாற்றுக்கு மேற்குறிப்பிட்ட வகையில் முக்கியத்துவம் பெறுகின்ற இச்செப்பேடுகள் இன்று தமிழ்நாட்டைக் கடந்து ஐரோப்பாவில் நெதர்லாந்தில் பாதுகாக்கப்படுகின்றன என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளிவந்த பத்திரிகைச் செய்தியில் நெதர்லாந்து அரசாங்கம் ஏற்கனவே தாங்கள் வாக்களித்தபடி, கடந்த நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் கையகப்படுத்தி நெதர்லாந்துக்குக் கொண்டு வந்த முக்கிய அரும்பொருட்களைத் தாங்கள் ஆட்சி செலுத்திய முன்னாள் காலனித்துவ நாடுகளுக்கே திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையினைத் தொடங்கி இருப்பதை வெளியிட்டிருந்தது.

(https://news.artnet. com/art-world/netherlands-restitution-guide lines-1941734) நெதர்லாந்து அருங்காட்சியகங்கள் தாம் பாதுகாக்கின்ற அரும் பொருட்களைக் காலனித்துவ நாடுகள் மீண்டும் முறையாக வேண்டுகோள் விடுத்துக் கேட்கும் நிலையில் அவற்றை அந்நாடுகள் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதையும், அதற்கு அருங்காட்சியகங்கள் உடன்படுவதையும் வெளியிட்டிருந்தது (https://news.artnet.com/art-worldl netherlands-report-cultural-objects-restitution-191438)

இந்த அறிக்கை கூறும் தகவல்களின் படையில் லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தின் அரும் பொருட்காட்சிப் பகுதியில் வைக்கட்பட்டிருக்கின்ற தமிழர் வரலாற்றுச் சிறப்பு சேர்க்கும் பெரிய, சிறிய லெய்டன் செப்பேடுகளைத் தமிழக அரசு தக்க முறையில் மீட்டுக் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாகக் கரு முடிகின்றது.

தமிழர் வரலாற்றுக்கும் தமிழ்நாட்டு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இச்செப்பேடுகளை இருநாடுகளுக்கிடையேயும் அதிகாரப்பூர்வச் செயல்பாடுகளின் வழி தமிழகத்திற்குக் கொண்டு வரவேண்டியது நமது முக்கியமான கடமையுமாகும்.

– நன்றி: நியூயார்க் தமிழ்ச்சங்கப் பொன்விழா பேரவையின் 35-ம் தமிழ்விழா, ஜூலை 2022.

Comments (0)
Add Comment