தன்னம்பிக்கைத் தொடர்:
காதலின் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. ‘ஒருவருக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது… எதனால் பிடிக்கிறது… இந்த ஈர்ப்பு எத்தனை காலம் நீடிக்கும்… தொலைநோக்கில் சரியாக வருமா..?’ என்றெல்லாம் யோசிக்க நேரமில்லாமல், கௌதம் மேனன் படத்தின் நாயகர் போல பார்த்த உடனே, ஒருவரைப் பிடித்து விடுகிறது.
‘அழகாய் இருக்கிறாய்… பயமாக இருக்கிறது…!’ என்று கவிதை சொல்லி கல்யாணத்தை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.
அதன் பிறகு வரும் அன்றாட அவஸ்தைகள்..? காதலில் ஜெயிப்பதன் பின்னணியிலும் பணம் இருக்கிறது.
சமீபத்தில் அப்படியான திடீர்த் திருமணத் தம்பதியை சந்திக்க நேர்ந்தது. காதலித்து திருமணம் செய்தவர்கள்.
ஒருவர் பற்றி மற்றவர் பாராட்ட வார்த்தைகள் குறைந்து போய், குறை சொல்ல அதிக வார்த்தைகள் வைத்திருந்தார்கள்.
காதல் திருமணங்கள் தோல்வி அடைவதற்கு என்ன காரணம்? நம்ம ஊர் சினிமாக்கள் காதலை இனிமையானதாகக் காட்டுகின்றன.
காதல் எல்லாம் திருமணத்தில் முடிவதாகவும், திருமணத்தில் முடிந்த காதல் எல்லாம் வெற்றி பெற்றதாகவும் காட்டுகின்றன. ஆனால், யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?
காதல் செய்யும்போது, காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால், சின்ன தகரம் கூட தங்கமாகத் தான் தெரியும். அதுவே திருமணமான பின்? கேக்கை நீட்டினால் கூட, ‘என்ன… பிரட் கருகிடுச்சா..?’ என்று எரிச்சலாக வார்த்தைகள் வந்து விழும்.
அந்தக் காதலை, அந்த அன்பை தக்க வைத்துக் கொள்வது எப்படி? திருமண வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வெறும் அன்பு மட்டும் போதுமா?
திருமணத்திற்கு முன்பு காதலியிடம் அல்லது காதலனிடம் நீங்கள் என்னென்ன எதிர்பார்த்திருந்தீர்களோ அதெல்லாம் திருமணத்திற்கு பிறகும் கிடைக்கிறது.
ஆயினும், திருமணங்கள் தோல்வியில் முடிகிறதே, என்ன காரணம்?
வாழ்க்கையின் ஆதாரமே, பொருள்… அதுதான் பொருளாதாரம், இன்றைக்கு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டுமானால், சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்க்கையைத் தொடங்க மட்டும் 3 லட்சம் ரூபாய் வரையிலாவது தேவை.
3 லட்சம் ரூபாயா என்று கேட்கலாம். ஆமாம், 3 லட்சம் ரூபாயாவது வேண்டும். இது இல்லையென்றால், திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாது.
பணமின்மை என்பது வெவ்வேறு விதமாக மாறி வெவ்வேறு சண்டைகளாக மாறி கசப்பை உருவாக்குகின்றன. இதுதான் நகர வாழ்வின் யதார்த்தம். ஒரு வீட்டில் காதல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
காதலனும், காதலியும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச் செலவேதும் இருப்பதில்லை என்பதுதான் பலரது நினைப்பு, ஒரு சின்னக் கணக்குப் போடுவோம்.
திருமணத்திற்கு புது துணிகள் எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 ஆயிரமாவது தேவைப்படும். தாலி ஒரு பவுனிலாவது செய்ய வேண்டும். தாலி செய்ய 40 ஆயிரம் ரூபாய். போக்குவரத்து, நண்பர்கள் சாப்பாடு.
அவர்களுக்கு ட்ரீட், சின்னதாக ஒரு ஹனிமூன் ட்ரிப். இதெற்கெல்லாம் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆகிவிடாதா..? வேலைக்குப் போய்விட்டால்கூட செலவு இருக்காது. லீவில் வீட்டில் இருந்தால், ஏகப்பட்ட செலவு ஆகும்.
‘ஒரு வீடு எடுக்க வேண்டும் என்றால், 8 ஆயிரம் வாடகை என்றாலும் கூட, முன்பணமாக ஒரு 75 ஆயிரமாவது கொடுக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறி என முதல் மூன்று மாத வீட்டுச் செலவு ரூ. 50 ஆயிரம் இதுவரைக்குமே 2 லட்சம் ரூபாய் காலி.
வீட்டுக்குத் தேவையானவை அடுத்த லிஸ்ட்… ‘கட்டின புடவையோடு வருகிறேன்’ கதையெல்லாம் இரண்டே நாள்தான் தாங்கும். வெறும் பாயில் படுத்தால், தூக்கமே வரவில்லை என்பது தெரிவதற்குத் தான் அந்த இரண்டு நாட்கள்.
அந்த வகையில், அடுத்தடுத்து வாங்கியே ஆக வேண்டிய லிஸ்ட்… ஒரு கட்டில், மெத்தை. புழங்க பாத்திரங்கள், மாற்றுத் துணிகள், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி. கிரைண்டர், ஏ.சி. வாட்டர் ஹீட்டர்… இதெல்லாம் வாங்கியே ஆக வேண்டும். அதற்கு ஒரு லட்சம் தேவை. ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே வாழ்ந்த வீடுகளில் இதெல்லாம் இருந்திருக்கும்.
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறவர்களாலேயே இதனைச் சமாளிக்க முடியாது. ஆகவேதான், மாதச் சம்பளம் அதிகமாக இருந்தால், காதல் திருமணத்தில் பிரச்சினை குறைவு.
வருமானம் குறைந்தால், வசவுகள் அதிகரிக்கும். இரு பக்கமும் வாய் நீண்டால், காதல் டமால்!
இங்கே பணம் இல்லை என்பதுதான் பிரதானம். அன்பு இருந்தாலும், பணம் முந்தி நின்று, பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இந்தப் பணம் இல்லாத காரணத்தால் தான் நிறைய திருமணங்கள் கசப்பில் முடிகின்றன.
ஆக காதலிப்பவர்கள், திருமணத்துக்கு அவசரப்படுவதை விட்டு, திருமணத்துக்குப் பிந்தைய காலத்துக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு கையில் தாலியை எடுங்கள்.
இதுவே, பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணம் என்றால், எல்லா பின்னுதவிகளும் அவர்கள் மூலமும், உறவினர்கள் மூலமும் கிடைத்து விடும். திகட்டத் திகட்ட திருமண வாழ்வை அனுபவிக்கலாம்.
நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று குருட்டாம்போக்கில் காதல் திருமணம் செய்து கொண்டால், நண்பர்கள் ஒரு மாதம், 2 மாதம் உதவி செய்வார்கள்.
பிறகு கொஞ்சம் பிஸிடா மச்சான்!’ என்று போனை எடுக்காததற்குக் காரணம் சொல்வார்கள். அடுத்து, கடன்தான் வாங்க வேண்டும்.
இந்தக் கடன்காரனைக் கட்டினதுக்கு சும்மா இருந்திருக்கலாம்!’ என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவார் காதலி.
எனவே, காதலில் வெற்றி பெற வேண்டும் என்றால், காசு பணம் மிக மிக முக்கியம்.
காதல் ஜெயிக்க வேண்டுமானால், முதலில் நீங்கள்தான் ஜெயிக்க வேண்டும்.
ஜெயிக்கும் ரசனை!
அதைத் தான் உங்கள் காதலனோ, காதலியோ விரும்புவார். பொருளாதாரம் என்ற விஷயமே வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், திருமணத்துக்குத் தயாராகும் முன் இந்த அடிப்படை முதலீட்டையும் மனதில் கொள்ளுங்கள். அல்லது, அபரிமிதமான வருமானம் இருவரில் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
பொருளாதாரத்தை சரி செய்து வீட்டீர்களானால், அதற்கு பிறகு, அன்பை நிலைக்க வைப்பதற்கு, குணங்கள்தான் தேவை. காதலில் அதற்குப் பஞ்சமே இருக்காது. அதை மேனேஜ் செய்து கொண்டு போக முடியும்.
ஆனால் பணத்தை மேனேஜ் செய்ய முடியாது. பணம் ரொம்ப ரொம்ப முக்கியம். பொருளாதாரத்தை மேம்படுத்தியதற்கு பிறகு வாழ்க்கையை தொடங்குவதற்கு யோசியுங்கள்.
‘உன்னைவிட உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லே… யாருமில்லே!’ என்ற பாடலை காதல் கீதமாக வைத்துக் கொள்பவர்களே, இந்த வரிகள் கரன்ஸிக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பணமில்லாக் காதல் தோற்றால், அதற்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் ஜெயித்தால்தான், காதல் ஜெயிக்கும்!
– இராம்குமார் சிங்காரத்தின் ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.