சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துவங்கிய பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து ஈ.பி.எஸ் ஆதரவாளர்களை வெளியேற்ற சிறு கலவரமே நடந்து முடிந்தது.
பொதுக்குழுவில் பேசியவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை ஒரு நம்பிக்கையாகச் சொன்னார்கள். நம்பிக்கை நாயகனாக உருவகப்படுத்தினார்கள்.
வைகைச் செல்வன் தொகுத்து வழங்கப் பேசிய வளர்மதி வழக்கம் போல எம்.ஜி.ஆர் பாடல்களை நினைவூட்டினார். “மாறாதய்யா மாறாது” என்கிற பாடல் வரிகளை எதனாலோ பாடிக் காட்டினார்.
அடுத்து சில முன்னாள் அமைச்சர்கள் தீர்மானங்களை வாசித்தார்கள். ஜெயக்குமாருக்குப் பிறகு பேச வந்த உதயகுமார், ராமர் பட்டாபிஷேகத்தைச் சுட்டிக் காட்டி ஓ.பி.எஸ்.ஸை ‘எட்டப்பன்’ என்றார்.
ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்கப்பட வேண்டும் என்பது ஒரு தீர்மானமாக நிறைவேறப்பட்டது. இரட்டைத் தலைமை பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அடிப்படைத் தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரட்டைத் தலைமை கொண்டு வந்ததால், பல தடுமாற்றங்கள் ஏற்பட்டதால், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது காலத்தின் கட்டாயம் என்றொரு தீர்மானம் நிறைவேறப்பட்டது.
நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்கிற பொறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது.
கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்கிற பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகத்தில் உள்ள ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் சார்பில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“இந்த நாடே எதிர்பார்க்கிற வெற்றித் தலைமை அந்த ஓற்றைத் தலைமை” என்றார் உதயகுமார்.
கழகத்திற்குத் தேர்தல் நடத்த குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் கழகத்தின் வரவு செலவு கணக்கைச் சமர்ப்பித்தார்.
“அடுத்து எழுச்சி உரை ஆற்றுவார்கள்” என்று சொல்லப்பட்டபிறகு உரையாற்ற வந்தார்கள் பல தலைவர்கள். பேசிய பலரும் எடப்பாடியாரின் தியாகத்தையும், ஓ.பி.எஸ்.ஸின் துரோகத்தைப் பற்றியும் ஒரு சேரப் பேசினார்கள்.
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொதுக்குழு என்றார்கள். ராஜதந்திரமாக சிக்ஸர் அடித்தவர் எடப்பாடி என்றார்கள்.
ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் நல்ல தலைமைக்காக ஏங்கித் தவித்தபோது அதற்கென்று கிடைத்த ஒன்றைத் தலைமை தான் எடப்பாடியார் என்றிருக்கிறார்கள்.
“இதனை இவன் கண்” என்று துவங்கும் குறளைக்கூட எடப்பாடியுடன் ஒப்பிட்டார்கள்.
இனி – இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி நிரந்தரப் பொதுச் செயலாளராக ஆவார்.
தி.மு.க.வின் வீழ்ச்சிக் காலம் துவங்கி விட்டது என்றார்கள்.
ஓ.பி.எஸ்.ஸின் இன்னொரு முகம் கொடூரமான முகம் என்று வர்ணித்தார்கள். துரோகத்தின் இன்னொரு பெயர் அவர் என்றார்கள்.
எப்படியோ – ஊடகங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு நடந்து முடிந்திருக்கிறது.