மனம் விரும்புதே உன்னை உன்னை…!

பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை-9).

****

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் மறக்க முடியாத பல பாடல்களை பாடியவர். ரசிகர்களை அன்றும், இன்றும் தனது மாயக் குரலில் கட்டி வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

மெல்லிசை உலகின் தனித்த அடையாளமாகவும், மென்மையான, இனிமையான குரலுக்கும் சொந்தக்காரர். கர்நாடக இசை உலகில் இளம் வயதிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றார் உன்னிகிருணன்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக தனக்கென்று தனித்துவத்துடன் முத்திரை பதித்துவருபவர் பாடகர் உன்னிகிருஷ்ணன்.

இவர் 1966, ஜூலை 9ஆம் தேதி கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் பிறந்தார். தனது 12 வது வயது முதல் வி.எல்.சேஷாத்ரி என்பவரிடம் கர்நாடக சங்கீதம் முறையாக கற்றுக் கொண்டார்.

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் கட்டுப்பாட்டுல் இயங்கும் விவேகானந்தா கல்லூரியில் படித்து, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஆரம்ப காலத்தில், அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

சினிமாவில் அறிமுகம்

கர்நாடக இசைப் பாடகராக இருந்த அவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர்.ரகுமான். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பக்தி பாடல்கள் என்று இசைத்துறையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார் உன்னிகிருஷ்ணன்.

என்னவளே அடி என்னவளே – காதலன்

தென்மேற்கு பருவக்காற்று – கருத்தம்மா

மீனம்மா அதிகாலையிலும் – ஆசை

காலமெல்லாம் காதல் வாழ்க – காதல் கோட்டை

மனம் விரும்புதே – நேருக்கு நேர்

சோனியா சோனியா – ரட்சகன்

மயிலு மயிலு மயிலம்மா – வி.ஐ.பி

சேலையில வீடு கட்டவா – அவள் வருவாளா

இன்னிசை பாடிவரும் – துள்ளாத மனமும் துள்ளும்

ஆகா… எத்தனை பாடல்கள் 90 களில் மறக்க முடியாத நினைவுகளுடன் ஒன்றிவிட்ட இந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் உன்னிகிருஷ்ணன்.

இன்னும் சொல்லில் அடங்காத எத்தனையோ பாடல்கள் வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

‘லஷ்மன் சுருதி’ இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் பாடி வருகிறார்.

விருதுகள்:

ஷங்கர் இயக்கத்தில் ’காதலன்’ படத்தில் முதன் முதலாக சினிமாவில் பாடினார் உன்னிகிருஷ்ணன். அந்த படத்தில் ‘என்னவளே அடி என்னவளே’ என்ற பாடல் வழியாக பட்டித் தொட்டி எல்லாம் அவரது மாயக் குரல் பரவியது.

இந்தப் பாடலின் வெற்றி அவரது வாழ்க்கையை மாற்றியது. அவர் பாடிய முதல் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் உச்சத்துக்கு சென்றார் உன்னிகிருஷ்ணன்.

அவரது திறமைக்கு நிறைய விருதுகள் கிடைத்தன. கலைமாமணி, இசைப் பேரொளி, யுவகலா பாரதி, இசைச் செல்வம், சங்கீதகலா சாரதி, சங்கீதச் சக்கரவர்த்தி என்று பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

அவருக்கு பிடித்த தெய்வம்

உன்னிகிருஷ்ணனுக்கு இஷ்ட தெய்வம், கேரள மாநிலம் குருவாயூரில் குடிகொண்டு இருக்கும் குருவாயூர் கிருஷ்ணன் தான். எப்போது வெளியில் சென்றாலும் அவரை வணங்கி விட்டுத் தான் செல்வாராம்.

பாடல் பாடுவதற்கு முன்பு அவரை மனதார வேண்டிய பிறகு பாடத்தொடங்குவாரம்.

ராயப்பேட்டையில் இருக்கும் அவரது தாத்தா குருவாயூர் கிருஷ்ணனுக்காக ஆண்டுதோறும் பெரிய விழா எடுப்பாராம். அதிலிருந்து கிருஷ்ணன் மீது ஈர்ப்பு வந்ததாக ஒரு போட்டியில் கூறியிருப்பார் உன்னிகிருஷ்ணன்.

மாயக் குரலுக்கு சொந்தகாரரான உன்னிகிருஷ்ணனுக்கு அவரது பிறந்தநாளில் நாமும் வாழ்த்துவோம்.

-யாழினி சோமு

Comments (0)
Add Comment