அ.தி.மு.க. பொதுக்குழு நடப்பது யாருக்காக?

தலைவர்களுக்காகவா? தொண்டர்களுக்காகவா?

*

அ.தி.மு.க பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதே ஒரு சஸ்பென்ஸ் மாதிரி ஆகிவிட்டது.

உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத் தடையின்றி நடத்தச் சம்மதித்து விட்டாலும், கூட ஓ.பி.எஸ். தொடர்ந்த இன்னொரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை பொதுக்குழு நடக்கிற நாளன்று காலை 9 மணிக்கு ஒத்தி வைத்திருப்பது பெரும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.

இதற்குள் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சென்னை காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் புகுந்துவிட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லிப் பாதுகாப்புக் கேட்டிருக்கிறார்.

சென்ற பொதுக்குழுவுக்கு முன்பு ஓ.பி.எஸ். புகார் அளித்திருந்தார். இம்முறை ஈ.பி.எஸ். தரப்பில் புகார்.

அதோடு ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இரு தரப்பிறருக்கும் இடையே கைகலப்பு உருவாக்கி மண்டை உடைப்பு வரை சென்றிருப்பது நல்ல அறிகுறியாகப் படவில்லை.

சென்ற முறை ஓ.பி.எஸ் தரப்பினர் பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டதை அடுத்து இந்தமுறை போதுமான முன்னேற்பாடுகளுடன் அவர்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஓ.பி.எஸ்.ஸை பொறுப்பை விட்டு வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வெளிப்படவும் வாய்ப்பிருக்கிறது.

நிலைமை முற்றினால் ராமநாதபுரத்தில் நடந்த மாதிரி கைகலப்பு நடக்கவும் சாத்தியம் இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த பாதுகாப்பைக் காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

தலைமைக்காக நடக்கும் உட்கட்சிச் சண்டையில் தொண்டர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

அ.தி.மு.க பற்றி அசலாக கவலைப்படுகிறவர்கள் அவர்கள் தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

– யூகி

Comments (0)
Add Comment