ஒவ்வொரு பிரச்சனையும் அதற்குரிய தீர்வுகளுடனேயே பிறக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தெரிந்த விஷயம் இது.
ஆனால், அதே மனிதர்கள் பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு சுழலும்போது இது அவர்களது அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது.
இதனை வெறுமனே ‘போலி’ தத்துவமாகப் போதிக்காமல் வாழ்வின் யதார்த்தங்களோடு சொல்லும் படைப்பு கொண்டாட்டமாகிப் போகும்.
மேற்சொன்ன வரியை அடியொற்றி அமைக்கப்பட்டிருக்கிற ‘பன்னிகுட்டி’ அப்படியொரு கொண்டாட்டத்தை தியேட்டர்களில் உருவாக்குகிறதா?!
மாற்றமே நிரந்தரம்!
கணவனுடன் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வரும் தங்கை, அந்த கவலையால் குடிகாரரான தந்தை, இந்த பிரச்சனைகளால் எரிச்சலில் திளைக்கும் தாய்,
இது போதாதென்று ஒருதலைக்காதலுக்கு ஆளாக்கிய அழகிய காதலி என்று தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் பிரச்சனைகளையும் எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் தற்கொலைக்கு முயல்கிறார் உத்ராபதி (கருணாகரன்).
புரூனே நாட்டில் மளிகைக்கடை வைத்திருக்கும் வெள்ளைச்சாமி (ராமர்), கார் டிரைவர் பாண்டி (தங்கதுரை) இருவரும் அவரைக் காப்பாற்றுகின்றனர்.
தன்னை வெளிநாட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்திய சாமியாரிடம் (திண்டுக்கல் லியோனி) கேட்டால், உத்ராபதிக்கும் ஒரு வழி கிடைக்கும் என்று நினைக்கிறார் வெள்ளைச்சாமி.
ஆனால், ஒரு வாகனத்தை அதன் உரிமையாளர் கண் முன்னே திருடினால் இதற்கொரு தீர்வு கிடைக்கும் என்கிறார் சாமியார். வேறு வழியில்லாமல் வெள்ளைச்சாமியும் உத்ராபதியும் ஒரு வாகனத்தை திருடுகின்றனர்.
உடனடியாக, அவரது நான்கு பிரச்சனைகளும் தீர்கின்றன. இதனைச் சொல்லி சாமியாரிடம் நன்றி தெரிவிப்பதற்காகச் செல்கையில், வழியில் குறுக்கே ஒரு பன்றிக்குட்டி வருகிறது. அதனால், இருவருக்கும் காயங்கள் பரிசாகக் கிடைக்கின்றன.
நடந்ததைக் கேட்ட சாமியார், அந்த பன்றிக்குட்டி மீது மீண்டுமொரு முறை வாகனத்தை மோதினால் மட்டுமே உத்ராபதியின் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக முடிவு வரும் என்கிறார்.
இதனைக் கேட்டதும், அந்த பன்றிக்குட்டியை எங்கு தேடுவது என்று இருவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
அந்த பன்றிக்குட்டியோ திட்டானி (யோகிபாபு) என்பவருக்குச் சொந்தமானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதற்கான பரிசாக, பெண் வீட்டாரால் அது வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால், அந்த பன்றிக்குட்டிக்கு எவ்விதச் சேதாரமும் இல்லாமல் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் திட்டானி இருக்கிறார்.
பன்றிக்குட்டி மீது வாகனத்தை ஏற்ற வேண்டுமென்று உத்ராபதி முயற்சிக்க, அதற்கு சிறு தீங்கும் வந்துவிடாமல் காக்கத் துடிக்கிறார் திட்டானி. இருவரில் யார் வெற்றி பெற்றார்? அந்த பன்றிக்குட்டி என்னவானது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
மொத்தக் கதையையும் கேட்டவுடன், ‘அடடே’ என்று சொல்லத் தோன்றும். அத்தனையும் திரைக்கதையின் போக்கில் அடியோடு நசுங்கிப் போயிருக்கிறது.
இந்த படத்தின் அடிநாதமாக இருக்க வேண்டியது அவல நகைச்சுவையா, அதிசயிக்கத்தக்க கடவுள்தன்மையா, சமூக யதார்த்தமா அல்லது சாதாரண மனிதர்கள் கொண்டிருக்கும் அசாதாரணமான நம்பிக்கையா என்பதைத் தெளிவுபடுத்துவதில் குழம்பியிருக்கிறார் இயக்குனர் அனுசரண்.
திரைக்கதையில் இருக்கும் ‘சவசவ’’ தன்மை அதனை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
எங்கே யதார்த்தம்?
தற்கொலைக்கு முயற்சிப்பதற்கான காரணங்களை உத்ராபதி பாத்திரம் விளக்குவது போன்று ‘பன்றிக்குட்டி’யின் தொடக்க காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த காரணங்கள் எதுவுமே நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குவதாக இல்லை. போலவே, அவை எப்படித் தீர்கின்றன என்பதும் சொல்லப்படவில்லை.
சாமியார் சொல்லும் ‘விதி’ப்படி திரைக்கதையில் பல திருப்பங்களுக்குப் பிறகு உத்ராபதியின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கன்றவா என்றால் அதுவும் இல்லை.
சரி, அந்த பன்றிக்குட்டியினால் அதனைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடம் மாற்றங்கள் உருவாகிறதா என்றால் அதுவும் இல்லை.
ஒரு நாய் அல்லது பூனை அல்லது மாடு போன்று பன்றியை அனைத்து மக்களும் வீடுகளில் வளர்க்க மாட்டார்கள் என்ற யதார்த்தத்தை திரைக்கதை எழுதிய ரவி முருகையா மற்றும் அனுசரணும் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.
மிக முக்கியமாக, பன்றியை இப்போதும் அருவெருப்பாகவே மக்கள் நோக்குகின்றனர் என்பதோ, அதன் பின்னணியில் சாதி வேறுபாடு நிறைந்திருக்கிறது என்பதோ திரைக்கதையில் மருந்துக்கு கூட இடம்பெறவில்லை.
பன்றிக்குட்டியை வளர்ப்பது மட்டுமல்ல, அதனைத் திரையில் காட்டுவதும் சாதாரண விஷயமல்ல என்பதை உணரத் தவறியிருப்பது வருத்தத்திற்குரியது.
’எங்கே யதார்த்தம்’ என்று கேள்வி கேட்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், மூலக்கதையில் இருக்கும் பேண்டஸி தன்மையோ நகைச்சுவையோ தாக்கம் ஏற்படுத்தவில்லை. கூடவே, ‘என்ன சொல்ல வருகிறது இந்த படம்’ என்ற கேள்வி எழுகிறது.
‘ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ எனும் விதியும் கூட எந்தவகையிலும் திரைக்கதைக்கு உதவவில்லை.
ஆங்காங்கே அழகு!
முக்கால்வாசி காட்சிகளில் தலைகாட்டியிருக்கும் கருணாகரன், இதிலும் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பூட்ட முயற்சித்திருக்கிறார்.
அவருடனேயே வலம் வரும் ராமர், தங்கதுரை, சிங்கம்புலி ஆகியோர் ஆங்காங்கே மிகச்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் லியோனி சீரியசாக காமெடி பண்ண முயற்சித்திருந்தாலும், அதற்கேற்றவாறு வசனங்கள் அமையவில்லை.
டி.பி.கஜேந்திரன், அவரது மனைவி, மகன், மருமகனாக நடித்தவர்களும் நம் மனதில் இடம்பிடிக்கின்றனர்.
குறிப்பாக, அவரது மகளாக நடித்த ஸ்வாதிகா பச்செக்கென்று ஒட்டிக்கொள்கிறார்.
இடைவேளைக்கு முன்பாக அறிமுகமாகும் யோகிபாபுவும் சிரிக்க வைக்க முயன்று தோற்றிருக்கிறார்.
சந்தானம், சதீஷ் போன்றவர்கள் கவுண்டமணியை ‘இமிடேட்’ செய்தாலும் கூட, அவரைப் போலவே குணசித்திர பாத்திரங்களிலும் வெளுத்து வாங்கும் திறமை யோகிபாபுவிடம் உண்டு.
‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ பாணியில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் அருவெருப்புகள் பற்றியும் இதில் விமர்சிக்கும் வாய்ப்பிருந்தும், அதனை நழுவ விட்டிருக்கிறார் யோகிபாபு.
அவ்வாறு வாய்த்திருந்தால், இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்டே அடியோடு மாறியிருக்கும். இதற்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பாக முடியும்.
கருணாகரன் ஜோடியாக லட்சுமிப்ரியாவும், யோகிபாபு ஜோடியாக ஆஷ்னா சுதீரும் வருகின்றனர்.
லட்சுமிப்ரியாவுக்கு நிமிடங்களில் முகம் காட்ட கிடைத்த வாய்ப்பு, ஆஷ்னாவுக்கு நொடிகளாக மட்டுமே வாய்த்திருக்கிறது.
இருவருமே நாயகிகளாக காட்சியளிக்காமல் கதாபாத்திரங்களாகத் தோன்றியிருப்பது சிறப்பு.
இயக்குனரே படத்தொகுப்பாளர் என்பதால், அவர் ‘வேண்டாம்’ என்று நினைத்த எந்த காட்சியும் இதில் இடம்பெறவில்லை என்று நம்பலாம்.
ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கும் சதீஷ் முருகன், தொடக்க காட்சிகளில் சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்.
ஆரம்பத்திலேயே படத்தின் பட்ஜெட் என்னவென்று தெரிந்துவிடுவதால், டிஐ பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை என்பதும் புரிந்துவிடுகிறது.
இசையமைப்பாளர் கே காட்சிகளுக்குத் தகுந்தவாறு பின்னணி இசையைத் தந்தாலும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறார். ஆனால், அதற்குச் சேர்த்து வைத்து பாடல்களை அற்புதமாகத் தந்திருக்கிறார்.
தான் எழுதிய கதைக்கு, இயக்குனர் அனுசரணுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் ரவி முருகையன்.
எதிர்ப்புகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்ற மெனக்கெடலுடன் திரைக்கதையை எழுதியிருப்பது, எந்த வகையிலும் யதார்த்தமான சமூகநிலையைப் பிரதிபலிக்கவில்லை.
’பன்னிக்குட்டி’ பாடலை துண்டித்திருப்பது போன்று இன்னும் எத்தனை விஷயங்கள் திரைக்கதையில் தவிர்க்கப்பட்டனவோ தெரியவில்லை. சர்ச்சை வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பதன் மூலமாக, கதையின் ஆன்மா சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
இயக்குனர் அனுசரண் முன்னதாக ‘கிருமி’ படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான ‘சுழல்’ வெப் சீரிஸின் பின்பாதி எபிசோடுகளையும் உருவாக்கியிருந்தார்.
அப்படிப்பட்டவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், கிட்டத்தட்ட 4 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் வெளியாகியிருக்கிறது.
இப்போது இந்த படத்தை அவர் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தால் கண்டிப்பாக அதிருப்தியடைவார்.
படத்தில் வரும் பன்றிக்குட்டியைப் பார்த்தவுடன் வேறொரு கதையை யோசிப்பார். அது மட்டுமே ‘பன்னிகுட்டி’யின் சிறப்பு!
-உதய் பாடகலிங்கம்