சாக்லேட் தினம்: ஸ்வீட் எடு, கொண்டாடு!

சாக்லேட் என்று சொல்லும் போதே நாவில் எச்சூறும் எல்லோருக்கும் பிடித்த டைம்பாஸ் தீனி. அடம்பிடிக்கும் குழந்தை முதல் பெரியவர் வரை சமாதானப்படுத்த ஒரு சாக்லேட் போதுமானது.

அந்த அளவுக்கு உணவியலோடு ஒன்றி விட்டது இந்த சாக்லேட். பிறந்தநாள், தேர்வில் வெற்றி, குழந்தை பிறப்பு, வேலை உயர்வு, சைக்கிள் முதல் கார் வரை புதிதாக வாங்கினால் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள நாம் எடுக்கும் இனிப்பு வகையில் எளிதாக கிடைக்கக் கூடிய சாக்லேட். இதற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.

நமது மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும் சாக்லேட் பெருமை சேர்க்கும் விதமாக கடந்த 2009 முதல் ஆண்டுதோறும் ஜூலை 7 ’உலக சாக்லேட் தினம்’ கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாள் இனிப்பு கொடுத்து நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சாக்லேட்களுக்கு ஜூலை 7 இன்று பிறந்த நாள் கொண்டாப்படுகிறது.

சாக்லேட் வரலாறு…

சாக்லேட் மால்வேசி குடும்பத்தை சேர்ந்த தியோபுரோமா கோக்கோ என்ற தாவரத்தின் விதைகளில் இருந்து பெறப்படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் ஆல்கஹால் உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒரு பானமாகத்தான் இருந்து வந்தது. காலபோக்கில் மீசோ அமெரிக்க மக்களின் கடவுளான ”க்வெட்சால்கோட்ல்”-க்கு வழங்கும் பொருளாக சாக்லேட்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.

முதலில் குளிர் பானமாகவும், உற்சாகமூட்டும் பானமாகவும் இருந்து வந்த சாக்லேட் சர்க்கரையின் வருகைக்கு பின் இனிப்பு சேர்க்கப்பட்டு பானமாக, நொறுக்குத் தீனியாக மாறியது.

மேலும் இது1550-ல் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமான பிறகு அதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது. அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சாக்லேட் பிரபலமானது.

சாக்லேட் நன்மைகள்…

சாக்லேட் நமது உடலில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. இரத்த சுத்திகரிப்பு அமைப்பு கட்டுப்படுத்துவது, கார்டியோ வாஸ்குலர் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுவதாக கூறுகின்றனர்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது. ஹார்மோன் சீராக இயங்குவதற்கு, மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகம் சுரக்க காரணமாக அமைகிறது.

மேலும் நீர் இழப்பை தடுத்து தோல் பராமரிப்பில் உறுதுணையாகவும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாப்பதாக ஆய்வு கூறுகிறது.

சாக்லேட் வகைகள்…

மக்களால் விரும்பி சுவைக்கப்படும் சாக்லேட்டுகளில் இந்த வகைகள் அதிகம் விரும்பப்படுகிறது.

வெள்ளை நிற சாக்லேட், கோக்கோ வால் தயாரிக்கப்பட்ட டார்க் சாக்லேட், கருப்பு நிற சாக்லேட், ஹேண்ட் மேட் சாக்லேட் போன்றவை மக்களால் அதிகம் விரும்பும் சாக்லேட்டாக இருக்கிறது.

உள்ளூரில் எத்தனை விதமாக சாக்லேட் சாப்பிட்டாலும் வெளிநாட்டு சாக்லேட் என்றால் அதில் இருக்கும் மோகமும், தனி சுவையும்,வடிவமும் அனைவரும் விரும்பும் வகையில் ஈர்த்து வருகிறது.

சாமனிய மக்கள் வரை பிரபலமாக இருக்கும் சாக்லேட்கள் தயாரிப்பில் இன்றும் அமெரிக்க நாடுகள் தான் முன்னிலை வகிக்கின்றன.

டார்க் சாக்லேட்: உடலுக்கு புத்துணர்ச்சியை அதிகப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் துத்தநாகத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் உடலில் சுமார் 300 என்சைம்களை செயல்படுத்துவதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக பார்க்கப்படுகிறது.

டார்க் சாக்லேட் இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவை அதிக உள்ளதாகவும், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் அளவோடு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு பல நன்மைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் சாக்லேட்கள் 1 ரூபாய் தொடங்கி லட்சங்களில் விற்கப்படுகிறது. நாம் நினைத்து பார்க்க முடியாத அதிக விலை உயர்ந்த சாக்லேட் களின் பட்டியலை பார்க்கலாம்.

விலை உயர்ந்த சாக்லேட்கள்:

டிரபிள்ஸ்

இது உலகின் மிக ஆடம்பரமான சுவை கொண்ட சாக்லேட்டாக கருதப்படுகிறது. தங்கத்தையும் உலகின் விலையுயர்ந்த மினரல்களையும் கிறிஸ்டல்களையும் இந்த சாக்லேட்டில் சேர்க்கப்படுகிறது.

இந்த சாக்லேட்டுகள் ஒரு பாக்ஸின் விலை ரூ. 20,580-க்கு விற்கப்படுகிறது.

டெலாஃபி

இந்த சாக்லேட்டுகள் தரமான கோகோ பீன்ஸ், தங்கத்துகள் சேர்த்து தயாரிக்கப்படுகின்றனவாம்.

இந்த சாக்லேட்டை சுவிட்சர்லாந்து சாக்லேட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை 35,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெபாவ் மற்றும் கல்லாய்ஸ்

இதில் முழுக்க முழுக்க 99% கோகோ டார்க் சாக்லேட்டுகள் மட்டுமே கிடைக்கிறது. விலையுயர்ந்த கோகோ கொண்டு தயாரிக்கப்படுவதால் இதன் விலை 63,000 ரூபாய்.

கேட்பரி விஸ்பா கோல்ட் சாக்லேட்

கேட்பரி உலகின் மிகவும் பிரபலமான நிறுவனமாகும். அதில் இருந்து வெளியான தங்க சாக்லேட் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தங்க சாக்லேட்டுகள் தங்க இலைகளால் மூடப்பட்டு இருக்குமாம்.

இதன் விலை 1,12000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சோகோபாலஜி சாக்லேட் டிரஃபிள்

இந்த சாக்லேட் கடையில் கிடைக்காது ஆர்டர் கொடுத்து தான் வாங்க வேண்டுமாம். சாக்லேட் வாங்கி 7 நாட்களுக்குசள் சாப்பிட்டு விட வேண்டுமாம். அதன் விலை 1,82,000 ரூபாய்.

அப்பாடியோ. விலையை கேட்டதுமே மெல்ல ஹார்ட் பீட் எகிறுது. நமக்கு 5 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்தாலே ஹேப்பியா போயிடுவோம்… சாக்லேட் பிறந்த நாளான இன்று அதன் அதிக பட்சமான விலை தெரிஞ்சுக்க வேண்டியது தான்.

-யாழினி சோமு

Comments (0)
Add Comment