கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களான நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், “அதிமுகவில் பொதுக்குழுவின் முடிவே முதன்மையானது. செயற்குழு, பொதுக் குழுவில் எடுக்கும் முடிவுகள் கட்சி சார்ந்த பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒருமித்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மீறி தலையிட்டது கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல். எனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர்கள் பாலாஜி சீனிவாசன், வினோத் கண்ணா ஆஜராகி முறையிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று 6-ம் தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.