அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 8
‘ஆசை’ படத்துல சுவலட்சுமி வீட்டு பின்னாடி ஒரு அழகான ரயில்வே டிராக் இருக்கும். ஞாபகம் இருக்கா? அந்த ரயில்வே டிராக்குக்கும், அந்த வீட்டுக்கும் உண்மையில சம்மந்தமே கிடையாது.
ஹீரோயின் வீட்டு பின்னாடி எலெக்ட்ரிக் டிரெயின் போற மாதிரி இருந்தா விஷ்வலா அழகா இருக்கும்னு நினைச்சு கன்சீவ் பண்ணிட்டார் டைரக்டர் வஸந்த் சாய்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி ஒரு வீடு கிடைக்கவே இல்லை. அவர்கள் நினைத்த மாதிரி வீடு கிடைத்தால், ரயில்வே டிராக் இருக்காது. ரயில்வே டிராக் இருந்தால் வீடு நன்றாக அமையாது.
‘‘ஆசை’ படத்துல நீங்க பார்க்குற வீடு தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டுலயும், அந்த ரயில்வே டிராக் இருக்குற வீட்டின் பின்புறம் சைதாப்பேட்டையிலும் வேறவேற இடத்துல ஷூட் பண்ணி ரெண்டையும் ஒண்னா சேர்த்தோம்.
ஒரு மாதிரி ரெண்டு லொகேஷனுக்கும் பெயின்டிங் மேட்ச் பண்ணி சமாளிச்சோம்.
படத்துல பார்க்கும்போது அது தெரியவே தெரியாது. அதான் சினிமா. இதை ஸ்க்ரீன்ல பார்த்த அஜித் ரொம்பவே ஆச்சரியப்பட்டார். “எப்படி சார்… கொஞ்சம்கூட தெரியாம எடுத்தீங்கனு’’ டைரக்டரிடம் கேட்டுக் கேட்டு வியந்திருக்கிறார்.
தமிழ் சினிமா ஹீரோக்களில் பெருந்தன்மையான மனம் படைத்தவர் அஜித் என்று பரவலாக சொல்லப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், அவர் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு முன்னாலேயே பரந்த மனம் படைத்தவராகத் தான் இருந்திருக்கிறார்.
இல்லையென்றால் தன்னைத் தேடி வந்த வாய்ப்பு இன்னொருவருக்கு போகப்போகிறது என்று தெரிந்தும் அவரை அழைத்து வந்து டைரக்டருக்கு அறிமுகப்படுத்தும் அந்த மனம் யாருக்கு வரும். அந்த இன்னொரு நபர் வேறு யாரும் அல்ல அஜித்தின் தம்பி தான்.
ஆசை படத்துக்காக டைரக்டர் வஸந்த்தை சந்தித்த போது, அஜித் ரொம்பவே ஒல்லியாக இருந்திருக்கிறார். கொஞ்சம் சதைப்பிடிப்போட இருந்தா ஓ.கே. என்று தயாரிப்பு தரப்பில் சிலர் ஒபீனியன் சொல்லி இருக்கின்றனர்.
பேச்சு வாக்கில் தன் தம்பியைப் பற்றி டைரக்டர் வஸந்திடம் சொல்லி இருக்கிறார் அஜித். அவரைப் பார்க்க முடியுமா? என்று டைரக்டர் கேட்டதும், சூழ்நிலையை நாசூக்காக புரிந்து கொண்டிருக்கிறார் ‘தல’.
ஒய் நாட்…? கண்டிப்பா வர சொல்றேன் ஸார்… என சொன்னதோடு, அன்றே தன் தம்பியை அழைத்து வந்து டைரக்டர் வஸந்துக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
ஆனால் அஜித் தான் தன் நாயகன் என்று தன் மனதளவில் டைரக்டர் முடிவுசெய்துவிட்ட காரணத்தினால், அஜித்தின் தம்பிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றோ அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
இப்படி பல தடைகளைத் தாண்டி வந்து தான் இன்றைக்கு தமிழ் ரசிகர்களின் ‘தல’ என்ற மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் அஜித். ஆனாலும் ஆரம்ப காலத்தில் இந்த டான்ஸ் தான் அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கிறது.
சினிமாவுக்கு வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் இல்லாததால், மற்றவர்களைப்போல் டான்ஸ் கிளாஸெல்லாம் போகவில்லை அஜித்.
அதனால் ‘ஆசை’ படப்பிடிப்பின்போது பாடல் காட்சிகள் அவரை பெரிதாக வேலை வாங்கி இருக்கிறது.
‘‘ஒருத்தருக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் சரியா வரலைங்கிறதே இவ்வளவு க்யூட்டா இருக்குமானு எனக்கு ஆச்சரியமா இருந்தது. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா…’ பாட்டு பீச்சுல நைட் ஷூட் பண்ணோம்.
ராஜூ சுந்தரம் மாஸ்டர் அஜித்துக்கு சில ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். ரொம்ப ஷார்ப்பா கவனிச்சுட்டு தன்னோட ஸ்டைலுக்கு அதை மாத்தி ஆடினார் அஜித். நானும் மாஸ்டரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். இதுவும் நல்லாதான் இருக்குஜி என்றார் ராஜூ.
ஸ்டெப்ஸ் சரியா வர்லைங்கறதே நல்லாதான் இருக்குல்ல என்று அவரிடம் நான் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது என்று சொன்ன டைரக்டர் வஸந்த் சாயை இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் முதல் சந்திப்பில் பார்த்த அதே மரியாதையுடன் பழகுகிறார் அஜித். அந்த சிம்ப்ளிஸிட்டி தான் ‘தல’!
ஆசை வெளியாகி 285 நாட்கள் ஓடியது. அஜித்தின் சினிமா கிராப் ஏற்றத்தை நோக்கி பாயத் தொடங்கியது. அந்த நேரத்தில் அவரது வாழ்க்கையின் இன்னொரு முக்கியமான நபரை சந்தித்தார் அஜித்.
(இன்னும் தெறிக்கும்…)
-அருண் சுவாமிநாதன்