மேரி கியூரி எனும் தியாகச் சுடர்!

கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று..

ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் பணியாற்றி இருக்கிறார்.

வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக வேலை செய்து வீட்டின் கஷ்டம் துடைத்தார்.

அப்பொழுது அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரி” என்று சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் நிராகரித்தார்கள் தங்கப் பதக்கம் பெற்று மேலே படிக்கலாம் என்று முயன்றால், ”பெண்களுக்கு இடம் கிடையாது!” என்று பல்கலைகள் பல் இளித்தன.

பறக்கும் பள்ளிக் கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி.  பின்னர் பிரான்ஸ் நோக்கி மேற்படிப்புக்கு போனார்.

அங்கே பசியோடும்,வறுமையோடும் வாழ்ந்து கொண்டே ஆய்வுகள் செய்தார், பேராசிரியர் பியரியை சந்தித்தார். இருவரும் இணைந்து இயற்பியலிலும் தங்களுக்குள் காதல் வேதியியலிலும் செழித்து ஓங்கினார்கள். எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.

மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக்கொண்டு இருக்கும் ஆய்வகத்தில் ஆய்வுகள் செய்தார்கள். பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு சொன்பார்.

முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு செய்ய முடிவு செய்தார். அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வந்தார் பியரி.

அணுக்கருவில் இருந்தே அந்த கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார் உலகை.

பிட்ச்ப்ளேண்டே எனும் உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை இவர்கள் கண்டார்கள் ;அதை உண்டாக்கும் தனிமத்தையும் கண்டுபிடித்தார்கள்.

அதற்கு மேரியின் அன்னை நாட்டின் பெயரை கொண்டு பொலோனியம் என பெயரிட்டார்கள்; பின் ரேடியம் எனும் தனிமத்தையும் கண்டறிந்தார்கள் அதற்கு நோபல் பரிசு கிடைத்தது.

அதை வாங்கக்கூட நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். ரேடியத்தை உடம்பில் தேய்த்த பொழுது முதலில் சிறு சிராய்ப்பு பின்னர் காயம் உண்டாவதை கண்டார்கள். அதை கேன்சர் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று புரிந்தது.

பின் அவரின் கணவர் ஒரு விபத்தில் இறந்து போக தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார் அதற்கு வேதியியலில் நோபல் பரிசு கிடைத்தது அவருக்கு.

அந்த பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டு இருந்தார்.

அவருக்கு இடம் தரமாட்டேன் என்ற போலாந்து பல்கலை அவரின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை அவருடையது தான் ரேடியத்துக்கு காப்புரிமை பெற சொன்னார்கள் பலபேர்.

எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் அதிலிருந்து பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி. கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற ‘பாந்தியன்’ (Pantheon) அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது .

வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. மூன்று நோபல் பரிசுகளை அவரின் குடும்பம் வென்று வரலாறாகத்தான் இருக்கிறது.

அறுபத்தி ஏழு வயதில் மரணமடைந்தார் மேரி அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளாமல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான்.

ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை அவர் முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.

– பூ.கொ.சரவணன்

  • நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment