கட்டடங்கள் பெரிதாகப் பெரிதாக, அதில் இருக்கும் காலி அறைகள் குறித்து பேய்க்கதைகள் கிளம்பும்.
சாதாரண சம்பவங்கள் கூட அமானுஷ்யத்தின் முகமூடிகளை அணிந்துகொள்ளும். ஒவ்வொரு ஊரிலும் இது போன்று பல கதைகளைக் கேட்க முடியும்.
மாறாக, சில நேரங்களில் விடை கண்டறிய முடியாத புதிர்கள் பீதியூட்டும் சக்திகளாக உருவெடுக்கும்.
அவற்றைச் சற்றும் பொருட்படுத்தாதவாறு, வேறொரு சாயத்தை அதன் மீது பூசி மொழுகிவிடுவோம். அதனால், அபாயங்களின் விளைவுகள் முழுமையாகப் புரியாமல் போகும்.
விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டி பிளாக்’ திரைப்படத்தின் கதை, மேலே சொன்னவற்றில் இரண்டாவதைக் கைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களைச் சுற்றும் புதிர்!
படத்தின் டைட்டிலும் ட்ரெய்லரும் இது ஒரு கல்லூரி வளாகத்திற்குள் நடக்கும் கதை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டது.
அங்குள்ள பெண்கள் விடுதியில் தொடர்ச்சியாகச் சில பெண்கள் மர்மமான முறையில் இறந்து போகின்றனர்.
ஆனால், அப்பெண்களின் உடலிலுள்ள காயங்களைப் பார்த்துவிட்டு ‘சிறுத்தை அடித்துக் கொன்றதாக’ அவ்வழக்குகள் எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன.
அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் என்பதால், கல்லூரி நிர்வாகமும் இம்மரணங்கள் பற்றி வெளியே தகவல் பரவுவதை விரும்பவில்லை.
மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள் உட்பட எல்லாமே இருந்தாலும், ஏதேனும் ஒரு தேவை என்றால் சில கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தே அருகிலுள்ள ஊரைச் சென்றடைய வேண்டிய நிலை.
இந்த சூழலில், நாயகனும் நாயகியும் அக்கல்லூரியில் சேர்கின்றனர்.
நாயகியின் அறைத்தோழி, பெண்கள் விடுதியில் ஒரு மர்ம உருவத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார். அடுத்த சில நாட்களில், அவர் இறந்து போகிறார்.
அப்பெண் வரைந்த ஓவியத்தைப் போலவே, இரண்டாண்டுகளுக்கு முன்னர் வேறொரு மாணவி ஒரு ஓவியம் வரைந்திருக்கிறார்.
இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதோடல்லாமல், அவற்றில் காட்டுமிராண்டி போன்ற உருவமொன்று இடம்பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, கல்லூரிக்குள் நிகழும் பெண்களின் மரணத்திற்குக் காரணம் சிறுத்தையல்ல என்று நாயகனுக்குப் பிடிபடுகிறது.
அதேநேரத்தில், நாயகனும் அவரது நண்பர்களும் ஓவியத்தில் பார்த்த அதே உருவத்தை நேரடியாக காணும் சந்தர்ப்பமும் வாய்க்கிறது. அதன் அடுத்த குறியாக நாயகி இருப்பதும் தெரிய வருகிறது.
யார் அந்த மர்ம மனிதன்? பெண்கள் விடுதி அமைந்திருக்கும் ‘டி பிளாக்’கில் நடமாட என்ன காரணம்? அபாயத்தில் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினாரா? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது மீதமுள்ள திரைக்கதை.
பயமுறுத்துகிறதா திரைக்கதை?
நாயகனாக அருள்நிதியும் நாயகியாக அவந்திகா மிஸ்ராவும் திரையில் தோன்றுகின்றனர். த்ரில்லர் கதை என்றாலும், அதன் ஒவ்வொரு கிளையாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறன் அருள்நிதிக்கு இருப்பது சிறப்பு.
ஆனால் கல்லூரி இளைஞன் வேடத்தில் நானா என்ற சந்தேகத்துடனே படம் முழுக்க வந்திருப்பது சறுக்கல். மற்றபடி காதல், மோதல் காட்சிகளில் அவரது பெர்பார்மன்ஸ் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறது.
நாயகி அவந்திகாவுக்குத் திரையில் தோன்ற பெரிதாக வாய்ப்புகள் தரப்படவில்லை. ‘முகத்துல பீதியைக் காண்பிக்கணுமா… அப்படின்னா..’ என்றவாறே அதிர்ச்சியூட்டும் காட்சிகளிலும் அமைதியாக வந்து போயிருக்கிறார்.
அருள்நிதியின் நண்பர்களாக வரும் ’ஆதித்யா’ டிவி கதிர், விஜயகுமார் ராஜேந்திரன் இருவரும் வருகின்றனர். மூன்றாவதாக வரும் நண்பருக்குப் பெரிதாக முகம் காட்ட வாய்ப்பில்லை.
சந்தானம் பாணியில் கதிர் கலாய்த்துக் கொண்டிருக்க, மலையாள நடிகர் அஜு வர்கீஸை பிரதியெடுத்தது போல திரையில் அப்பாவித்தனத்தையும் பயத்தையும் வெளிப்படுத்தி சிரிப்பூட்டுகிறார் விஜய். இவர்தான் இப்படத்தின் இயக்குனர்.
கௌரவமாக ஒரு காட்சியில் தலைகாட்டியிருக்கும் கரு.பழனியப்பன், தன் பங்குக்கு ‘அனுமதி மீறி காட்டுக்குள்ள காலேஜ் கட்டுனா விடறதுக்கு நாம யாரு சாமியாரா’ என்று தன் பங்குக்கு வசனம் பேசி ‘மைலேஜ்’ ஏற்றுகிறார்.
ரமேஷ் கன்னா, தலைவாசல் விஜய், உமா ரியாஸ் மட்டுமே இதில் இடம்பெற்ற மூத்த கலைஞர்கள். அவர்கள் பங்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கேற்ப அமைந்திருக்கிறது.
மர்ம மனிதனாக வரும் சரண்தீப், மிக எளிதாக நம்மை பயமுறுத்துகிறார். அதைத் தாண்டி, அவருக்குப் பெரிதாக வேலையில்லை.
நாயகியின் தோழியாக வரும் ஜனனி துர்காவுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம். போதுமான தாக்கத்தை உண்டாக்காத திரைக்கதையிலும் அது பிரதிபலிக்கிறது.
திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் விஜயகுமார் ராஜேந்திரன், ‘எருமசாணி’ சேனல் மூலம் யூடியூப் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.
ஆனால், அவர் புகழ் பெறக் காரணமான நகைச்சுவை இப்படத்தில் அதிகமாக இடம்பெறவில்லை.
படத்தின் கதாபாத்திரங்களுக்கு எவ்வித முன்கதையும் இல்லாமல் நேரடியாக கதை சொல்லியிருப்பது நல்ல விஷயம். ஆனால், படத்தின் முக்கிய முடிச்சாக அவர் சொல்லும் ’பிளாஷ்பேக்’ தொடர்ச்சியான காட்சிகளாக அமைக்கப்படாதது பட்ஜெட்டை குறைக்க உதவியிருக்கலாம். திரைக்கதை தாக்கத்தைப் பொறுத்தவரை அது பின்னடைவே!
சிறுத்தைக்கும் மனித தாக்குதலுக்குமான வித்தியாசத்தை போலீசாரின் விசாரணையிலோ பிரேதக் கூறாய்விலோ கண்டறியாதது, சம்பந்தப்பட்ட பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டனர் என்பதை பிளாஷ்பேக்கில் மட்டும் சொல்லியிருப்பது,
தன்னை விட பலசாலியை மடக்க நாயகன் திட்டமிடுவதைத் திரையில் காட்டாமல் விட்டிருப்பது என்று பல விஷயங்கள் திரைக்கதையின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கின்றன.
’டி பிளாக்’கை ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்திருக்கிறார் அரவிந்த் சிங். தனது திறமையினால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான தரத்தைத் தந்தால் போதுமென்று நினைத்திருக்கிறார். சில இடங்களில் மட்டுமே அது உதவியிருக்கிறது.
படத்தொகுப்பு செய்த கணேஷ் சிவாவுக்கு இது கடினமான பணியாக இருந்திருக்கும். அதையும் மீறி இயக்குனர் சொன்னதைச் செய்திருக்கிறார்.
ரான் ஈதன் யோகனன் இசையில் ஞானகரவேல் எழுதிய ‘ஐஸ்கட்டி குருவி’ பாடல் மனதுக்குள் வழுக்கிக் கொண்டு நுழைகிறது. பின்னணி இசை அமைத்திருக்கும் கவுசிக் கிரிஷ் நிறைய இடங்களில் பயமுறுத்தியிருக்கிறார்.
ஆனால், ஒரு மனிதனுக்குப் பின்னிருக்கும் மர்மத்தை, புதிரை முன்கூட்டியே உணர்த்தும் இசைத்துணுக்கொன்றை தந்திருந்தால் அதுவே டி பிளாக்கின் ‘தீம்’ ஆகவும் அமைந்திருக்கும்.
இது உண்மைக்கதையா?
அமெரிக்கா, கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுக்கப் பல்வேறு மொழிகளில் பிரமாண்ட திரைப்படங்களோடு சில ‘பி கிரேடு’ படங்களும் அதிக எண்ணிக்கையில் வெளி வருகின்றன.
அவை ஹாரர், த்ரில்லர், புலனாய்வு சார்ந்தவையாக இருக்கும். கிட்டத்தட்ட அப்படியொன்றாகவே காட்சியளிக்கிறது ‘டி பிளாக்’கின் காட்சியமைப்பும் உள்ளடக்கமும்..!
கோவை வட்டாரத்திலுள்ள வெள்ளியங்கிரி மலையில் இப்படத்தின் கதை நடப்பதாகக் காட்டப்படுவதும்,
இது இயக்குனர் கல்லூரி பயின்ற காலத்தில் நடந்த உண்மை நிகழ்வு என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் ஆரம்பத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
ஆனால், ’டி பிளாக்’கில் ஒரு காட்சி கூட யதார்த்தம் என்று சொல்லும்படியாக இல்லை.
அதனால், எத்தனை முறைதான் ’சும்மா சும்மா’ பயமுறுவது என்று சோர்ந்து விடுகிறோம்.
இதைக் கூடிய மட்டும் தவிர்த்திருந்தால், இன்னொரு ‘டிமாண்டி காலனி’யாக ‘டி பிளாக்’ அமைந்திருக்கும்..!
- உதய் பாடகலிங்கம்