எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல்!

எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்துக்களில் கட்டுண்ட ரசிகர்கள், பல லட்சக்கணக்கானவர்கள். கடந்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த புதிய படங்கள் எதுவும் வராமல் போனாலும், அவர் நடித்த பழைய படங்கள் இன்றும்
தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் நாள்தோறும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

பெரிய விளம்பரங்களுடன் வரும் இன்றைய சில புதிய படங்கள், அவருடைய பழைய படங்கள் பெறும் வசூலில் பாதியைக்கூடப் பெறமுடியாமல் தடுமாறுகின்றன.

1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி, ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி நகரில் பிறந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். தந்தை மருதூர் கோபால் மேனன் – ஒரு நீதிபதி. தாயார் சத்யபாமா. நல்ல வசதியுடன் வாழ்ந்த அந்தக் குடும்பம், கோபாலமேனனின் மறைவுக்குப் பிறகு வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டது.

வேறு வழியின்றி பிழைப்பைத் தேடி தன் அன்னை, அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியுடன் தமிழ்நாட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். வேலை தேடி அலைந்த அவரை, கலைத்தாய் அழைத்துக் கொண்டாள்.

தன் அன்பு அன்னையைக் காப்பாற்ற, தனது ஏழாம் வயதில் நடிகர் எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார் நடத்தி வந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அப்போது அவருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க எம்.ஜி.ராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வேதனை ததும்பும் அனுபவங்களாக இருந்தன.

ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் அவர் பெற்ற துயர் அனுபவங்கள், எதிர்கால வெற்றிகளை அடையும் மனப்பக்குவத்தை அவருக்குத் தந்தன.

‘சதிலீலாவதி’ படம் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் அறிமுகமானார். எம்.கே.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா போன்ற பல பிரபல நடிகர்களுக்கும் ‘சதிலீலாவதி’ தான் முதல் படம்! இதைத் தொடர்ந்து சிறு வேடங்களையே எம்.ஜி.ஆர். ஏற்க நேர்ந்தது.

முருகனாக, அர்ஜுனனாக, சிவனாக புராணப்படங்களில் நடித்த அவர், ‘அசோக்குமார்’ படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நண்பராக வந்து சிறப்பாக நடித்திருந்தார்.

பின்பு, பி.யூ.சின்னப்பா நடித்த ‘ரத்னகுமார்’ படத்தில் சில காட்சிகளில் வில்லனாக வந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்தார். இதற்கிடையில் எம்.ஜி.ராமச்சந்திரன் பலவித நடிப்புப் பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்தார். மற்போர், வாள் வீச்சு, சிலம்பாட்டம் அனைத்தையும் பயின்றார்.

எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக ஒப்பந்தமான முதல் படம் ‘சாயா’. ஆனால், இந்தப் படம் வெளிவரவில்லை. ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ஷனில், கலைஞரின் வசனத்தோடு, ஜூபிடர் நிறுவனத்தாரின் ‘ராஜகுமாரி’ படம்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வந்த முதல் வெற்றிப்படம்!

ஆயினும், ரசிகர்கள் நடுவில் எம்.ஜி.ராமச்சந்திரனை நன்கு அறிமுகப்படுத்திய படம், கலைஞர் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரகுமாரி தான்.

மருதநாட்டு இளவரசி, எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில் மட்டுமல்ல, இல்லற வாழ்க்கையிலும் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் தன்னுடன் நாயகியாக நடித்த வி.என்.ஜானகியை அவர் தன் இல்லத் துணைவியாக ஆக்கிக் கொண்டார்.

பின்னர் ‘ஜெனோவா’, ‘மோகினி’, ‘மர்மயோகி’, ‘சர்வாதிகாரி’ – இப்படிப் பல படங்கள் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தன. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய அசுர வேகம் பலரை மலைக்க வைத்தது. அவர் நடித்த படங்களைக் காண ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர்.

இவ்வேளையில் தான் பக்ஷிராஜாவின் ‘மலைக்கள்ளன்’ வந்தான். ரசிகர்களின் மனத்தை வென்றான்.

மலைக்கள்ளனில் பல வேடங்களைத் தாங்கி எம்.ஜி.ஆர். சிறப்பாகவே நடித்திருந்தார். 1954-ல் சிறந்த தமிழ்ப்படம் என்பதற்கான ஜனாதிபதி பரிசு பெற்ற படம் அது.

தமிழில் தயாரான முதல் வண்ணப் படம், எம்.ஜி.ஆரின் அலி பாபாவும் 40 திருடர்களும்.

பழங்கதைகளில் ஒன்றான ‘குலேபகாவலி’ கதையை ராமண்ணா படமாக இயக்க, எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் அது வெளிவந்தபோது வசூல் சாதனை படைத்தது.

திரையரங்குகளில் வெற்றி உலா வந்தது. இதன்பின், 30 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 100 நாள் வெற்றி கண்டான் ‘மதுரை வீரன்’.

தேவரின் முதல் தயாரிப்பான ‘தாய்க்குப்பின் தார’த்தில் ரசிகர்களை உருக வைக்கும் மாறுபட்ட நடிப்பைத் தந்தார் எம்.ஜி.ஆர். ‘எந்தத் திசையிலும், எந்தக் கோணத்திலும் தமிழ்ப்பட வசூல் நாயகன் எம்.ஜி.ஆர்தான்’ என்று ஒருமுகமாகப் பேசப்பட்ட வேளை அது.

அந்தக் காலகட்டத்தில்தான் எம்.ஜி.ராமச்சந்திரனின் லட்சியத் திரையீடாக ‘நாடோடி மன்னன்’ வந்தது. தமிழ்த் திரைப்படவுலகில் எம்.ஜி.ராமச்சந்திரனின் புகழுக்கு முத்திரை பதித்தது.

நாடோடி மன்னனை இயக்கியதுடன், இரட்டை வேடங்களில் நடித்தும் பெரும் சாதனையைச் செய்தார் எம்.ஜி.ஆர். இரண்டு லட்சம் மக்கள் கூடியிருக்க, மதுரையில் நடைபெற்ற வெற்றிவிழாவில், எம்.ஜி.ராமச்சந்திரனைப் பாராட்டி, தங்க வாள் பரிசாக அளிக்கப்பட்டது.

‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தெய்வத்தாய்’, ‘பணத் தோட்டம்’ – இப்படித் தொடர்ந்து வந்த பல படங்கள். இவரை சமூகப் படங்களின் வெற்றி நாயகனாக மாற்றின.

இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம், எம்.ஜி.ஆர்.தான் வசூல் மன்னன் என்பதைச் சந்தேகமற நிரூபித்தது. கோழை, வீரன் ஆகிய இரட்டை வேடங்களில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகராக எம்.ஜி.ஆர். ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே ஆண்டில் பி.ஆர். பந்துலுவின் அற்புதப் படைப்பாக வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ மீண்டும் எம்.ஜி.ஆரைச் சாகசப்பட வெற்றி நாயகனாக மக்கள் முன் நிறுத்தியது.

எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமான ‘சதி லீலாவதி’ படத்துக்குக் கதை எழுதிய எஸ்.எஸ்.வாசன், ஜெமினி நிறுவனம் சார்பில் தயாரித்து அளித்த வண்ணப்படம் ‘ஒளி விளக்கு’. இது எம்.ஜி.ஆரின் 100-வது படமாக அமைந்தது.

லட்சக்கணக்கன பொருட்செலவு, நேரம், உழைப்பைச் செலவழித்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய பிரமாண்டமான சித்திரம் ‘அடிமைப் பெண்’.

அவர் தயாரித்து அளித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ தமிழ்த் திரையுலகின் மற்றொரு சாதனையாக இன்றும் கருதப்படுகிறது. ‘ரிக்ஷாக்காரன்’ படம் ‘பாரத்’ விருதைப் பெற்றுத் தந்தது.

தனக்கு வரும் சோதனைகளை வென்று காட்டும் திறன் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஒரு மேடை நாடகத்தின்போது நிகழ்ந்த விபத்தில், இவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. ‘இனி இவர் எழுந்து நடமாட முடியாது’ என்று அப்போது பொதுவாகப் பேசப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர். பழைய தெம்புடன் எழுந்து, அசுர வேகத்தில் இயங்க ஆரம்பித்தார்.

1967-ல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, அவருக்குத் தெளிவாகப் பேச முடியாத நிலை உண்டாகியது.

‘இவர் சகாப்தம் முடிந்தது’ என்று பலர் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணத்தைத் தவறாக்கி, ரசிகர்களின் ஆதரவுடன் அதன் பிறகும் புதுப்புது சாதனைகளைப் புரிந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரிடம் உள்ள தனிச்சிறப்பு அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை, அவரே வென்று காட்டியதுதான்.”

– எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ‘ஆனந்த விகடன்’ வார இதழ் (29.09.2010) வெளியிட்ட கட்டுரை

நன்றி: ஆனந்த விகடன் 1988.

Comments (0)
Add Comment