முதுமைக்கு இவ்வளவு சித்திரவதைகளா?

பரண் :

சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர்களைக் கடத்துகிறார்கள். அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சாகடித்து சுவர்களுக்கு இடையில் அடுக்கிச் சிமெண்டால் பூசி மெழுகுகிறார்கள்.

இப்படிச் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்சி ஊடகங்கள் விலாவாரியாகச் சொல்லும் போது பதைபதைக்காமல் பார்க்க முடியவில்லை.

முதுமையில் உடலாலும், உள்ளத்தாலும் நைந்து போய் சொந்த உறவுகளால் கைவிடப்பட்டவர்களை யாரோ எந்தெந்த நோக்கங்களுக்கோ இரையைப் போலத் தூக்கிச் செல்கிறார்கள்.

இதை யார் தடுத்து நிறுத்துவார்கள்?

பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைக்காக ஒரு முதியோர் இல்லத்திற்குப் போய்ச் சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வந்தபிறகு எழுதிய கவிதை இது:

#
அந்த மெர்ஸி ஹோம் வராண்டா
#
தாழ்வாரத்திலிருந்து
நழுவப் போகிற
நீர்ச்சொட்டுகள் மாதிரி
காலத்தின் கனிந்திருந்த வயதுக்காரர்கள்.

வருஷங்கள்
உதிர்ந்திருந்தன உடம்புகளிலிருந்து.

பலகால வெக்கையடித்து
தோற்பரப்பெங்கும் சிலந்திச்சுருக்கங்கள்.
பேசும்பொழுதும்
கன்னமெங்கும் வயதுகள் சுருங்குகின்றன.

பாலைவனத்தில் முகமெங்கும்
வெயில் வழிய
ஒட்டகப் பிராணியைத் தூர எதிர்பார்த்தவராய்
ஒவ்வொருவரும்.

சமீபத்தில் இடி இடித்தாலும்
மரணம் கருத்த இறக்கைகளோடு
நெருக்கத்தில் படபடக்கிறது.

வார்த்தைகள் குருவி மாதிரி
எங்கோ பறந்திருந்தன அவர்களிடமிருந்து.

மிகுந்த அயர்வுடன்
திரும்பி ஞாபகம் விசிறிப் பேசும் பொழுதில்
இடையிடையே
காலைப் பரப்பினபடி எத்தனை மௌனம்?

இடையில் அழுகை நழுவுகிறது
சின்னக்குழந்தையின் அனிச்சையான சிறுநீராய்.

பழைய நாட்கள் எங்காவது
மறதியின் மடியில் புரண்டு கொண்டிருக்கலாம்.

பிஞ்சித்தீ தொடலாய்ப் பளிச்சிடுகிறது
மறதியின் அற்புதம்.

விலகுகிற போது
விரல்களைக் கோழிக் குஞ்சுப் பதவிசுடன்
பற்றிக் கொஞ்சுகின்றன
இஷ்டப்படி ரேகை எழுதின கைகள்.

உள்ளங்கையில் அவிழ்கின்றன
எத்தனையோ
வயதான பெருமூச்சுகள்.

வெளிவரும் போது புரிகிறது
அன்புக்கு இருக்கும் பசித்தன்மை.

(என்னுடைய ‘இன்னொரு விழிப்பு’ தொகுப்பிலிருந்து -மணா)

Comments (0)
Add Comment