வெற்றிவிழா கொண்டாடிய ‘பேய காணோம்’ படக்குழு!

இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ள படம் “பேய காணோம்”. தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றி விழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கோரோனா நோய்த் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள் தடைகளைக் கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களைக் கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சுருளிவேல், “பல தடைகள் வந்தன. அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம். அதற்காகத் தான் இந்த வெற்றி விழா. எங்கள் படம் நல்லதொரு நகைச்சுவை படமாக வந்துள்ளது.

இப்போது திரையரங்குகளில் சிறு படங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. விக்ரம் படத்திற்கும் என் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலை என்பது அநியாயம்.

50 ரூபாய் டிக்கெட் வைத்தால் என் படத்திற்கும் கூட்டம் வரும். இதை தயாரிப்பாளர் சங்கங்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். படத்தை கடினமாக உழைத்து உருவாக்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் செல்வ அன்பரசன் பேசும்போது, “என்னிடம் நிறைய அருமையான கதைகள் இருந்தது. ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் அலைந்தேன். கடவுள் ஆசீர்வாதமாகத் தயாரிப்பாளர் சுருளிவேல் வாய்ப்பு தந்தார். முழு சுதந்திரம் தந்தார். நான் செய்த மிகப்பெரிய தவறும் மிகப்பெரிய சரியும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியதுதான்.

எங்களைச் சுற்றி சில நல்ல உள்ளங்கள் இருந்ததால் எங்களால் படத்தை முடிக்க முடிந்தது. வடிவேலு பாணியில், இவ்வளவு அடியும் வாங்கிட்டு உசுரோட இருக்கேனே, எனக்குத்தான் இந்த கப்பு என்பது போல இவ்வளவு பிரச்சினையும் தாண்டி படத்தை முடித்ததே பெரிய சக்சஸ். அதனால் தான் இந்த வெற்றி விழாவை வைத்தோம்” என்றார்.

வாழ்க்கையில் பணத்தைக் காணோம், குழந்தையைக் காணோம், பொருளைக் காணோம், நண்பனைக் காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயைத் தேடுகிறார்கள்.

பேயை எதற்காகத் தேடுகிறார்கள் என்பதுதான் நகைச்சுவை கலந்த படத்தின் திரைக்கதை.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment