ஜுலை-1 தேசிய மருத்துவர்கள் தினம்
பழுது பார்த்தல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவற்றில் குறைகள் தோன்றும்போது பழுது பார்ப்பது இயல்பான ஒன்று.
மின்சாரம், குடிநீர், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள், குடியிருக்கும் வீடு, அதில் பொருத்தியிருக்கும் கதவுகள் ஜன்னல்கள், இரண்டு நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்திவரும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள் உட்பட எல்லாமே குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பழுது பார்க்க வேண்டிய தேவைகளைக் கொண்டவை.
மனிதர்கள் உருவாக்கிய இவை அனைத்துக்கும் பொருந்தும் விதி மனிதர்களுக்கும் பொருந்தும் தானே?!
மனிதர்களிடம் உடல் மற்றும் மனரீதியாகக் குறைகள் தோன்றும்போது, அதனைச் சரிப்படுத்தி நம் வாழ்க்கையைச் சீர்ப்படுத்துபவர் ஒருவர் உண்டு. அவரது பெயர் ‘மருத்துவர்’.
காரணம், மனிதர்களுக்கு உடல் மற்றும் மனநலக் குறைவு ஏற்படுவது எல்லா காலத்திலும் இருந்து வருகிறது.
புலம்பல் வேண்டாம்!
நிறைகள் போலவே குறைகளும் இவ்வுலகில் நீக்கமறப் பரவியிருக்கிறது. எவ்வுயிரும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
ஆனால், மனிதர்கள் மட்டுமே தமது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி மிகுந்த கவலை கொள்பவர்களாக இருக்கின்றனர் அல்லது அதனைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாதவர்களாக வாழ்கின்றனர்.
வெறுமனே வாய்விட்டு குறைகளைப் பற்றி மற்றவரிடத்தில் சொல்வது புலம்பலாகவே மட்டுமே உருமாறும். அது வேண்டாம்.
இவ்விரண்டுக்கும் நடுவே, உடல்நலக் கோளாறுகள் குறித்த சரியான அக்கறையுடன் மருத்துவரைத் தேடிச் சென்று தீர்வைப் பெறுதலே நலம் பயக்கும் வழிமுறை.
அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் உட்படப் பல்வேறு மருத்துவ முறைகளில் நம்மை அண்டும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.
ஆனாலும், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அலோபதி மட்டுமே பெரும்பாலான இந்திய மக்களைச் சென்றடைந்துள்ளது.
மாறாக, பாரம்பரிய மருத்துவ முறைகளின் சாயலில் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் உணவையும் மருந்தையும் தகுந்தவாறு உட்கொண்டு உடலைப் பராமரிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ‘மருத்துவர்’ சமூகத்தினர் நோய்களைக் குணப்படுத்தும் வகையிலும் வருமுன் காக்கும் நோக்கிலும் பல்வேறு ஆலோசனைகளையும் மருந்துகளையும் மக்களுக்கு அளித்து வந்திருக்கின்றனர்.
ஆனந்தம் பண்டிதர் உட்பட பலரது வாழ்க்கை வரலாறு, அக்காலகட்ட மருத்துவ முறைகள் குறித்த சித்திரத்தை நமக்கு காட்டுகின்றன.
இதுவே, இப்போதும் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
பாரம்பரிய மருத்துவ முறைகளையும் அலோபதி உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவங்களையும் இணைத்து ‘கூட்டு மருத்துவம்’ என்ற பெயரில் நோய்களைக் குணமாக்குவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தும் போக்கும் இன்று பெருகியிருக்கிறது.
கொரோனா காலத்தில் பல நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் கபசுர குடிநீர் போன்ற மூலிகைச்சாறுகள் கொடுக்கப்பட்டது இதற்கான சிறு உதாரணம்.
தெய்வமாகப் போற்றப்படும் மருத்துவர்கள்!
கடுமையான வலிகளாலும் நோய்களாலும் பாதிக்கப்பட்டு, இனி ஒருபோதும் பழைய நிலையை அடையவே இயலாது என்று நொந்த நிலையில் நோயாளிக்கு கலங்கரை விளக்கமாக காட்சியளிப்பவர் மருத்துவர் மட்டுமே.
தான் வணங்கும் கடவுளிடம் முறையிடுவது போல, தனக்கிருக்கும் அத்தனை துன்பங்களையும் அவர் முன்பாக வரிசையாக அடுக்கிவிடுவர் பலர்.
அதன்பின், மருத்துவர் தரும் சிகிச்சைகளால் எதிர்பார்ப்பிற்கும் மாறாக உடல் புத்துணர்வு பெற்றால் அம்மனிதரின் மனம் என்ன நினைக்கும்? இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மருத்துவம் தோன்றிய நாள் முதல் அது போன்ற கணங்களை எதிர்கொள்ளவே ஒவ்வொரு மருத்துவரும் பாடுபட்டு வருகின்றனர்.
சிகிச்சைக்கான கட்டணம் என்பது அதன்பிறகே வரும். இதுவே, மருத்துவம் என்பது தொழில் என்பதற்கும் அப்பாற்பட்டு சேவையின் கூறுகளால் நிரம்பியது என்பதை வெளிக்காட்டும்.
இன்றும் ஆசிரியர்களைப் போல, நீதிபதிகளைப் போல, மருத்துவர்களும் சாதாரண மக்களால் போற்றப்படுகின்றனர்.
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் எந்தக் கணமும் மருத்துவம் பார்க்கத் தயாராக இருக்கும் மனநிலைக்கான பரிசு அது.
அப்படிப்பட்ட மருத்துவர்களை மக்கள் தங்களை வாழ வைத்த தெய்வங்களாகவே நோக்குவார்கள்.
தேசிய மருத்துவ தினம் கொண்டாடுவோம்!
மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர் பிதன் சந்திர ராய் எனும் பி.சி.ராய் பெயரில், 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
1900களில் இவரது முயற்சியால் இந்தியாவில் பல்வேறு பெருமருத்துவமனைகள் கட்டப்பட்டதும் இவரது மருத்துவச் சேவையால் பலர் பயன்பெற்றனர் என்பதும் இதன் பின்னிருக்கும் காரணங்கள்.
இன்றும் பி.சி.ராய் போல மக்களுக்குச் சேவையாற்றுவதை முதன்மையாகக் கொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ளும் எத்தனை மாமனிதர்கள் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் அவர்களது பணியைப் போற்றுவதுமே இத்தினத்தின் நோக்கம்.
நோய்த்தொற்று குறித்த அச்சம் முழுதாக நீங்காத இச்சூழலில், இதுவரையிலான மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் ‘தேசிய மருத்துவ தின’த்தைக் கொண்டாடுவோம்!
– உதய் பாடகலிங்கம்