காலம் விசித்திரமானது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவருடைய மறைவில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டி வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் மறைவு குறித்தே மர்மமான பல கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை ஆணையம் வரை சென்றிருக்கிறது.
2016 செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அங்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறை எண் 2008 – ல் சிகிச்சை நடந்தது. பல நாட்கள் சிகிச்சை.
டெல்லியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் வந்து வைத்தியம் பார்த்தார்கள்.
அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று அதே மருத்துவமனையில் இறந்த பிறகு அவர் மறைந்த விதம் குறித்து ஏகப்பட்ட கேள்விகள். சாவில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வீசப்பட்டன.
அதை வைத்து வெளிப்படையான புறக்கணிப்பு அரசியல் நடந்தது. அந்தச் சந்தேகப் புகையைச் சிலர் திட்டமிட்டுத் தூவினார்கள்.
சிலருடைய வற்புறுத்தலின் பேரில் அம்மாவின் சாவில் மர்மம் இருப்பதாகத் தர்ம யுத்தம் நடத்துவதாகச் சொன்னார்கள்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜெ-வுடன் உடனிருந்து அவரைக் கவனித்துக் கொண்டவரான திருமதி. சசிகலா தான் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சையின் போதும் உடனிருந்தார்.
அவர் தான் தனது தோழிக்கான ஈமச் சடங்குகளில் துணை நின்றார். பிரதமர் மோடி வந்து ராஜாஜி ஹாலில் சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் படுத்தினார்.
அதுவரை அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்கப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகு அடுத்தடுத்து தெளிவான சுயநல அரசியல் நோக்கத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
அ.தி.மு.க. தொண்டர்களைப் பலரும் குழப்பினார்கள். சசிகலாவின் புகைப்படம் இருந்த சுவரொட்டிகளைக் கிழிக்கும் அளவுக்கும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெ-வின் உருவப் பொம்மையை ஊர்வலத்தில் எடுத்து வரும் அளவுக்கும் பிரச்சாரம் தீவிரம் அடைந்தது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் இருந்த சசிகலாவால் தன்னை இணைத்துப் பொது வெளியில் பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை.
ஜெ-வின் மறைவு குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் 2017 ல் பல கோடி செலவில் அமைக்கப்பட்டது. பல பேர் விசாரிக்கப்பட்டார்கள்.
ஆணையத்திற்குக் கூடுதல் காலக்கெடு விதிக்கப்பட்டது. அதற்கு மட்டும் இதுவரை மூன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் அரசு தரப்பில் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சந்தேகத்திற்கான செலவு இது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது விரைவில் ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறது.
இதுவரை நடந்த விசாரணையின்படி பார்த்தால், ஜெ-வின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை. முக்கியமாக சசிகலா உள்ளிட்டவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவாக வில்லை.
இந்த அறிக்கை வெளிவரும் போது, ஜெ-வின் இறப்பு குறித்து இதுவரை பொதுவெளியில் உருவாக்கி வைத்திருந்த பல முடிச்சுகள் அவிழ்ந்து உண்மை நிலை அ.தி.மு.க தொண்டர்களுக்குத் தெரிய வரலாம்.
பொய்யான புனைவை எப்படி இத்தனை காலம் உருவாக்கி ஆணையம் அமைக்கும் வரை கொண்டு போய் அதை வைத்து அரசியல் நடத்தினார்கள் என்பதெல்லாம் கூட, அறிக்கை வெளிவந்த பிறகு தெரிய வந்து விடும்.
அப்பல்லோ மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளும் அர்த்தமில்லாமல் போகலாம்.
சசிகலாவுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு வைத்திருந்த சந்தேகங்கள் மறைந்து அவர் மீது மதிப்பு அதிகரிக்கவும் காரணமாக அமையலாம்.
ஏற்கனவே பொதுக்குழு, இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சசிகலா மீண்டும் பேசு பொருள் ஆகலாம்.
அவரும் பொது மக்களைச் சந்தித்துத் தன்னைப் பற்றிய விளக்கங்களை அளிக்கலாம்.
சரியான விதத்தில் இந்தச் சந்தர்ப்பத்தை சசிகலா பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் மத்தியில் சசிகலா குறித்து இதுவரை பரப்பப்பட்ட பிம்பங்கள் மாறி, அனுதாபமான பார்வை கூட உருவாகலாம்.
சசிகலாவால் தமிழக முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட எடப்பாடி மிகக் குறுகிய காலத்தில், தன்னைப் பதவியில் அமர்த்தியவருக்கு எதிராகச் செய்த புறக்கணிப்பு அரசியலின் பின்னணி குறித்துக் கூட விவாதங்கள் எழலாம்,
ஆக, ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளிவரும் போது இந்த மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
அடிக்கடி தங்கள் கட்சியில் “ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்” என்று அ.தி.மு.க தலைவர்களால் சொல்லப்படும் தொண்டர்களுக்குத் தான் தற்போது அடுத்தடுத்து எத்தனை குழப்பங்கள்?
அ.தி.மு.க சந்திக்க இருக்கும் இன்னொரு சவால் – குறித்து நாளை பார்க்கலாம்.
– யூகி