தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகள் வைப்பது ஏன்?

தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, தமிழ் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகளை சூட்டுவது அதிகரித்திருந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால், வரி விலக்கு அளிப்பதாக அவர் அறிவித்த பிறகு, பல திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது நடந்தது. சில பேர் தூய தமிழ்ப் பெயர்களைக் கூட சூட்டினார்கள்.

அப்படி தமிழ்ப் பெயர்களை சூட்டியதால் எந்த விதத்திலும் அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் பிரச்சனை ஏற்படவில்லை.

ஆக, தமிழ்ப் பெயரை சூட்டுவதற்கும் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஒரு விதத்தில் நிரூபிக்கக் கலைஞர் எடுத்த நடவடிக்கை காரணமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் பெயர்கள் கடைசி நேர அவசரத்தில் கூட சூட்டப்பட்டு ஏமாற்றம் பெற்றிருக்கின்றன.

இதற்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், சமீபத்தில் மறுபடியும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டுவது மீண்டும் அதிகரித்திருக்கிறது.

மாஸ்டர், பீஸ்ட் இம்மாதிரியான ஆங்கில பெயர்களை சூட்டுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தமிழில் பெயர் சூட்டினால் வரி விலக்கு கிடைக்கும் என்கின்ற சலுகைகளெல்லாம் புறந்தள்ளி ஆங்கிலப் பெயர்களை சூட்டுவது தற்போது அதிகரித்திருக்கிறது.

முன்பிருந்த திமுக ஆட்சியின்போது பெயர் சூட்டுவது தொடர்பாக இருந்த நடைமுறை ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் மாற வேண்டும்?

வரி விலக்கை விட ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவது பல தயாரிப்பாளர்களுக்கு முக்கியமாகப்பட்டிருக்கிறது. பல நடிகர்களுக்கும் முக்கியமாகப்பட்டிருக்கிறது.

இதில் துரதிருஷ்டம் என்னவென்றால் ஒரு படம் ஆங்கிலத் தலைப்புடன் வணிக ரீதியான வெற்றியை பெற்று விட்டால், அதுவே தொற்று வியாதிபோன்று பரவி, அடுத்தடுத்து பல தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை சூட்டுவது தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விடும்.

சென்டிமென்ட்கள் நிறைந்த தமிழ்த் திரைப்பட உலகில் இந்தவிதமான மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒரு அம்சத்தை போல தான் இப்போதும் இருக்கின்றன.

ஏன் கலைஞர் அவர்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பாக இருந்த ஒரு நம்பிக்கை, அவர் வழிவந்த மு.க.ஸ்டாலினுக்கு தற்போது இல்லாமல் போயிற்று அல்லது கவனம் செலுத்த இயலாமல் போயிற்று.

தற்போது உள்ள நிலையே நீடித்தால் இனி தொடர்ந்து ஆங்கிலத் தலைப்புகளுடன் கூடிய தமிழ் திரைப்படங்கள் வெளிவருவதைத் தடுக்க முடியாது.

வரி விலக்கு அளிக்கப்பட்ட பிறகும் ஆங்கிலப் பெயர்களை சூட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால், அதில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்றால் பணம் கொடுத்து திரையரங்கிற்குச் செல்லும் பார்வையாளர்களை பற்றி என்ன சொல்ல முடியும்.

ஆனால், இப்படிப்பட்ட சில வினோதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.

Comments (0)
Add Comment