மீண்டும் எச்சரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தீவிரமாக தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அரசு தரப்பில் எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

தடுப்பூசி குறித்த பிரச்சாரமும், முகக் கவசம் அணிவது சம்பந்தமான உத்தரவும் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மருத்துவக் கல்லூரியிலேயே 30 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவிக் கொண்டிருப்பது தொடர்பான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

அண்மையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

முன்பு கொரோனா பரிசோதனைகள் பரவலாக செய்யப்பட்டதைப் போல தற்போது செய்யப்படவில்லை என்றாலும் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாகி இருப்பதை வெவ்வேறு செய்திகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்பதுதான் முக்கியம்.

முகக் கவசம் அணிவதை மீண்டும் இயல்பான ஒன்றாக நாம் கையாளலாம். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை ஒரு நிர்பந்தமாய் மேற்கொள்ளலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கலாம். பொதுவெளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

கொரோனா தொற்று வெவ்வேறு இடங்களில் பரவியிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அந்தப் புள்ளி விவரங்களை அரசு தரப்பில் வெளியிடலாம். இப்படியெல்லாம் நடந்தால் மட்டுமே கொரோனாவை மீண்டும் கட்டுப்படுத்த இயலும்.

தற்போது உள்ள சூழ்நிலையில், மீண்டும் உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தீவிரப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் டெல்லியிலும், மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று தாக்கம் மறுபடியும் கூடி இருக்கிறது.

புதுப்புது கட்டுப்பாடுகள் மறுபடியும் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் பல பகுதிகளிலும் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்கிற அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் பொதுவாக அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.

இந்த நிலை மாறியாக வேண்டும். எந்த விதத்திலும் கொரோனாவால் மனிதர்கள் உயிரிழப்பது மிகுந்து விடக்கூடாது.

தற்போது உயிரிழப்புகள் பெரிதாக குறிப்பிடும்படி இல்லை என்றாலும் கூட, கொரோனா தீவிரம் பெறும் பட்சத்தில் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

அதைத் தடுக்க தனிமனிதனாக அவரவர் முயற்சியே காரணமாக இருக்கும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அரசு ஒரு துணை புரியலாம், ஆனால் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு என்பதை உணர்ந்து இந்தச் சமயத்தில் நம் அவரவர் செயல்பாட்டில் அதை வெளிப்படுத்துவோம்.

-அகிலன்

Comments (0)
Add Comment