அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்கிறதா?

‘இந்துக் கட்சி’ என விமர்சிக்கப்படும் பாஜக, ஆரம்பத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே தழைத்திருந்தது. தென்மாநிலங்களில் தலைவர்கள் இருந்தார்கள்.
கட்சி அலுவலகங்கள் இருந்தன. சொல்லிக்கொள்ளும்படி தொண்டர் கூட்டம் கிடையாது.

மோடியும், அமித்ஷாவும் பாஜகவை கைப்பற்றிய பின் நிலைமை மாறியது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. புதுச்சேரியில் இன்று கூட்டணி ஆட்சி நடத்துகிறது.

தெலுங்கானாவில் பாஜகதான் இப்போது எதிர்க்கட்சி. அந்த மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ். மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது.

தமிழகத்திலும், கேரளாவிலும் சவலைக் குழந்தையாகத்தான் பாஜக காணப்படுகிறது.
கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பலமான கூட்டணியை அமைத்துக்கொண்டு கேரளவில் அசுர பலத்துடன் நிற்கின்றன.

அங்கு பாஜக, ரொம்பவும் பலவீனம். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

தமிழக நிலவரம் என்ன?

பாஜக, தமிழகத்தில் முளை விட்டபோது அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று – பாஜகவுக்கு அப்போது தமிழ்நாட்டில் ஓட்டு வங்கி கிடையாது.

இரண்டு – பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற தயக்கம்.

இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு டெபாசிட் இழந்து கொண்டிருந்தது பாஜக.

1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் முதன் முறையாக தனது கணக்கைத் தொடங்கியது பாஜக. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வேலாயுதன் வென்றார்.

அதன்பின் பாஜகவின் பரப்பளவு விரியத் தொடங்கியது. மத்தியில் பிரதமர் பதவியை பிடிக்கும் அளவுக்கு நாடு முழுமைக்கும் காவி கட்சி, தனது செல்வாக்கைப் பெருக்கி இருந்ததால், இரு கழகங்களும் தமிழகத்தில் அந்தக் கட்சியுடன் கை கோர்க்க ஆர்வம் காட்டின.

அவர்கள் உதவியுடன் – தமிழக பாஜகவினர் எம்.பி.க்கள் ஆனார்கள். மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

ஆயினும், இதுவரை தனித்து நின்று ஒரு எம்.பி.தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

அண்ணாமலை சாதிப்பரா?

கூட்டணி இல்லையேல் எம்.எல்.ஏ.க்களும் இல்லை – எம்.பி.யும் இல்லை என்ற நிலையில், ‘’வரும் தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் 25 எம்.பிக்கள் கிடைப்பார்கள்’’ என முழங்கியுள்ளார் தமிழக தலைவர் அண்ணாமலை. அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்கள் கை தட்டினார்கள்.

பத்திரிகைகளில் அண்ணாமலை படத்தோடு செய்தி வந்தது. 25 எம்.பி.க்கள் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படும் கதை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டார் அண்ணாமலை.
கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

எனினிம் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோற்றுப்போனார்.

அப்புறம் எப்படி 25 எம்.பி.க்கள் சாத்தியம்?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று பாஜக, கவுரமான வெற்றியை பெற்றுள்ளது.

மறுப்பதற்கில்லை..

இது மட்டும் போதுமா?

தமிழகத்தில் பாஜக அழுத்தமாகக் காலூன்ற வேண்டும் என்றால் தனது தளங்களை பலப்படுத்த வேண்டும். மக்களைச் சந்திக்க வேண்டும். வாக்காளர்களை ஈர்க்கும் தலைமை வேண்டும்.

ஏதாவது ஒரு திராவிடக் கட்சி பலவீனம் அடைந்தால், பாஜக லாபம் பெறலாம். இவை எதுவுமே சாத்தியமில்லாத நிலையில் 2 எம்.பி.க்களைக்கூட தனித்து நின்று பாஜக பெற முடியாது என்பதே யதார்த்தம்.

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment