அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றினாரா?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக, கொத்து கொத்தாக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இரண்டு புத்தகங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஒன்று – பொதுவான தேர்தல் அறிக்கை.
இரண்டாவது – 38 மாவட்டங்களுக்கான திட்டங்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்து விட்டது. பிரச்சார கூட்டங்களில் முழங்கியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளாரா?

அலசலாம்.

செய்தவை:
63 தலைப்புகளில் பொதுத் தேர்தல் அறிக்கை இடம் பெற்றுள்ளது. திகட்டத் திகட்ட வாக்குறுதிகள்.

செயலுக்கு வந்துள்ள முக்கிய திட்டங்கள் இவை:

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்படுவார்கள் என திமுக சொன்னது. செய்து காட்டி விட்டார்கள்.

ஆவின் பால் விலை குறைப்பு, பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீது முந்தைய அரசு தொடர்ந்த பொய் வழக்குகள் ரத்து போன்ற அறிவிப்புகளையும் திமுக நிறைவேற்றி விட்டது.

சபாஷ் போடலாம்.

மறந்தவை:

ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை திமுக மறந்து விட்டது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய அம்சங்களை மட்டும் ஞாபகப்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்றார்கள்.

மறந்த போன இந்த வாக்குறுதியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலினிடம் மக்கள் ஞாபகப்படுத்தினர்.

‘’விரைவிலேயே உத்தரவு வரும்’’ என்றார்.

ப்ச்.

மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும், ரேஷனில் வழங்கப்படும் சர்க்கரை உள்ளிட்ட எல்லா பொருட்களும் பாக்கெட்டுகளில் அளிக்கப்படும், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், தேர்தல் அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தளபதி ஊடகங்களுக்கு வழங்குவார்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் உள்ளிட்டவை திமுக அரசாங்கம் மறந்த பிரதான வாக்குறுதிகள்.

படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். (பக்கம் 93)
செய்யவில்லை.

இது குறித்து கனிமொழி எம்.பியிடம் கேட்டபோது, “அப்படி எந்த வாக்குறுதியும் நாங்கள் அளிக்கவில்லை’’ என்கிறார்.

இந்தத் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவில் கனிமொழியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்குகள் என்னாச்சு?

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என உரத்தக் குரலில் முழங்கினார்கள். நீதி மன்றங்கள் என்னாச்சு?

சில அமைச்சர்கள் வீடுகளில் பெயருக்கு ரெய்டு நடத்தி பூச்சாண்டி காட்டியதோடு சரி.
அதன் பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை சிறு துரும்பையும் அசைத்ததாகத் தெரியவில்லை.
இதன் பின்னணியில் உள்ள மர்மம் புரியவில்லை.

– பிஎம்எம்.

Comments (0)
Add Comment