‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ என்ற அறிவிப்புடனே சில திரைக்கதைகள் எழுதப்படுவதுண்டு. ‘இதுதான்.. இப்படித்தான்..’ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து திரையை நோக்கும்போது, அதற்கு எதிர்த்திசையில் பலமுறை ‘யு டர்ன்’ இடும் திரைக்கதை.
ஆங்கிலத்தில் ‘வைல்டு திங்ஸ்’ வகையறா படங்கள் இதற்கொரு உதாரணம். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ‘ட்விஸ்ட்’களுடன் கூடிய கிளாஸிக் திரில்லராக ‘வேழம்’ படத்தைத் தர முயன்றிருக்கிறார் புதுமுக இயக்குனர் சந்தீப் ஷ்யாம்.
அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா, கிட்டி, சங்கிலிமுருகன், பி.எல்.தேனப்பன், அபிஷேக் வினோத், புதுமுகம் ஷ்யாம் சுந்தர் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.
அருமையான ஒளிப்பதிவு, பின்னணி இசை என்றமைந்திருக்கும் தொழில்நுட்பக் கூட்டணி உதவியுடன் நல்ல ‘த்ரில்’ அனுபவத்தை தந்திருக்கிறாரா இயக்குனர்?
தகிக்கும் வேதனை!
அசோக் (அசோக் செல்வன்), லீனா (ஐஸ்வர்யா) இருவரும் காதலர்கள். ஊட்டி செல்லும் மலைப்பாதையில் பயணிக்கும்போது, ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்குகிறது. இதில் லீனா இறந்துவிட, அசோக் மட்டும் உயிர் பிழைக்கிறார்.
அன்று முதல் தனது காதலியைக் கொன்றவர்களைத் தேடத் தொடங்குகிறார். தன்னை அடித்தவர்களில் ஒருவன் பேசியது மட்டும் அவரது நினைவுத் தடத்தில் பதிந்திருக்கிறது. இது அவரது வாழ்வையே புரட்டிப் போடுகிறது. எவ்வித சுக துக்கங்களுக்கும் ஆட்படாத வெறுமையை அவருக்குள் விதைக்கிறது.
நண்பன் மற்றும் அவரது காதலி மூலமாக, அசோக்குக்கு அறிமுகமாகிறார் ப்ரீத்தி (ஜனனி). அவர் ஒரு எழுத்தாளர்.
இறந்துபோன காதலி லீனா குறித்து ப்ரீத்தி கேட்கும்போது முதலில் கோபப்படும் அசோக், பின்னர் மெதுவாக மனம் திறக்கிறார். அதேநேரத்தில், அசோக்கிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார் ப்ரீத்தி. ஆனால், அசோக்கின் மனதில் லீனாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கும் எண்ணம் மட்டுமே இருக்கிறது.
இந்த நிலையில், தற்செயலாக தன்னைத் தாக்கியவர்களில் ஒருவனைக் காண்கிறார் அசோக். அதன்பின் என்ன செய்கிறார் என்பதைச் சொல்கிறது மீதிப்பாதி.
முதல் பாதி முழுக்க லீனாவின் மரணமும், அவர் மீதான அசோக்கின் காதலுமே சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதியில், தனக்கு வலிகளைத் தந்தவர்களைத் தேடி ஓடுகிறார் அசோக்.
ஆனால், இரண்டாம் பாதிக்கும் முதல் பாதிக்குமான தொடர்பை இறுக்கமாக பிணைக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார் இயக்குனர்.
அசோக்கின் உள்ளத்தில் தகிக்கும் வேதனைகளும் லீனாவின் மரணத்திற்கான காரணங்களும் தொடக்கத்திலேயே விளக்கப்படாதது மிகப்பெரும் குறை. போலவே, வில்லன் தரப்புக்கும் திரைக்கதையில் போதுமான இடத்தைத் தரவில்லை.
பறிபோன வாய்ப்பு
’ட்ரிம்’ செய்த மற்றும் புதர் போன்று வளர்ந்த தாடி என்று இரு வேறு தோற்றங்களில் வருகிறார் அசோக் செல்வன். மன வேதனையைத் தாங்கி வாழ்வது, வெடிக்கும் ரவுத்திரத்தில் அலறுவது என்று தான் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார்.
மாறாக, லீனாவாக வரும் ஐஸ்வர்யாவின் முகத்தில் உயிரோட்டமே இல்லை. பயத்தையும் பதற்றத்தையும் வெளிக்காட்ட வேண்டிய சூழல் அமைந்தும் பொம்மை போல வந்து போயிருக்கிறார் படம் முழுவதும்.
அசோக்கின் காதல் கதையைக் கேட்பதைத் தவிர, இக்கதையில் ஜனனிக்குப் பெரிதாக முக்கியத்துவம் இல்லை. சங்கிலி முருகன், மராத்தி நடிகர் மோகன் அகாசே, கிட்டி போன்றோரின் இருப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
வில்லனாக காட்டப்படும் அபிஷேக் வினோத், தேனப்பன் போன்றோருக்கும் திரையில் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை.
இன்ஸ்பெக்டராக வரும் புதுமுகம் ஷ்யாம் சுந்தருக்கு கிளைமேக்ஸில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரது நடிப்பு உடனடி ஈர்ப்பை உருவாக்கவில்லை.
அவரது சகோதரர், நண்பர்களாக வருபவர்களுக்கும் போதிய வாய்ப்பில்லை.
படம் முழுக்க அசோக்செல்வன் மட்டுமே வருவது ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு திரைக்கதையில் திருப்பமானது முதல் 30 நிமிடங்களுக்குள் இடம்பெற வேண்டுமென்பது கமர்ஷியல் திரைப்படங்களுக்கான முக்கிய விதி. ஆனால், அப்படியொரு திருப்பம் இப்படத்தில் இடைவேளைக்குப் பிறகே வருகிறது.
அதேபோல, அதன்பின் தொடர்ச்சியாக வரும் திருப்பங்களும் நமக்குள் அதிர்வை உண்டாக்கும் வகையில் திரையில் அமையப் பெறவில்லை. இதனால், கிளைமேக்ஸில் அமைந்துள்ள திருப்பம் அதிர்வை உருவாக்கவில்லை.
திரைக்கதையில் காட்சிகளைக் கலைத்துப் போட்டிருந்தாலோ அல்லது அசோக் – ஐஸ்வர்யா காதல் காட்சிகளை ஆங்காங்கே சின்னச் சின்னதாகச் சொல்லியிருந்தாலோ இக்குறையைப் பெருமளவில் தவிர்த்திருக்கலாம்.
அவ்வாறு செய்யாத காரணத்தால், இறுதியாக வரும் அரை மணி நேரம் ஒரு குறும்படம் பார்ப்பதைப் போலிருக்கிறது.
ஜானு சந்தரின் பாடல்களும் பின்னணி இசையும் கேட்கும் ரகம்.
மலைப்பாங்கான பிரதேசத்தில் கதை நிகழ்வதற்கேற்ப திரையில் குளிர்மையும் இருண்மையும் நிரம்பியிருப்பது அருமை.
சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும் பலம். படத்தொகுப்பாளர் மட்டும் கதையின் மூடுக்கேற்ப திரைக்கதை அமைந்திருக்கிறதா என்று சரி பார்த்திருந்தால் ‘வேழம்’ இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.
ஒரு திரைப்படம் காகிதங்களில் எழுதப்படுவதில் தொடங்கி காட்சியாக்கம் பெற்று, அதன் இறுதி வடிவம் திரையரங்குகளை அடைவது வரை பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.
அப்படியொரு வாய்ப்பை பெற்றிருக்கிறது ‘வேழம்’. அதற்கேற்ப, பார்வையாளர்களிடம் ஈர்ப்பை உருவாக்கத் தவறியிருப்பது நாயக பாத்திரம் போன்று நம்மையும் வேதனைக்கு ஆளாக்குகிறது.
– உதய் பாடகலிங்கம்