இது அவசரக் கால அழைப்பு!

சம்பவாமி யுகே.. யுகே…

அதர்மம் அழிக்க
தர்மம் செழிக்க
வருவேன் என்று
சொன்னாயே!
வருவாயா ?
இது.. அவசர அழைப்பு..

யுகங்கள் செழிக்க
உண்மை தழைக்க
வருவேன் என்று
சொன்னாயே..
வருவாயா?
இது அவசர‌ அழைப்பு..‌.

உந்தன் பெயரால்
தானேயின்று
ஊரில் கலவரம்
நடக்கிறது.
உண்மை யிங்கு
முக்காட்டிட்டு
மூலையில் ஒளிந்து
கிடக்கிறது

புல்டோசர்கள்
உறுமும் ஓசைமில்
வீட்டின் கூரைகள்
சரிகிறது …
புல்லர்கள் ஏந்தும்
தீப்பந் தத்தால்
நாடே பற்றி
எரிகிறது…

சாதிமத மெனும்
இருதலை கொள்ளியின்
நடுவில் நாடே
தவிக்கிறது…
சரித்திர மதனை
தலை கீழாக்கி
சாதனை என்று
குவிக்கிறது..

அஸ்திவாரம்
ஆழத் தோண்டி
லிங்கம், சூலம்
எடுக்கின்றார்…
ஆண்டவனே உன்
ஆலய அமைதியை
அழித்து மனிதம்
கெடுக்கின்றார்..

அரசியல் நாடக
மேடையில் நீயும்
பகடைக் காயாய்
ஆனாயே!
சாத்தான் வேதம்
ஓதும் போது
தலைமறை வாகிப்
போனாயே!

இதுவும் கடந்து ‌
போகும் என்றே
எத்தனை காலம்
தவமிருப்போம்?
இருட்டில் ஒளியின்
கீற்றுக்காக
ஏங்கித் தனியே
விழித்திருப்போம்?

அதர்மம் அழிக்க
தர்மம் செழிக்க
வருவேன் என்று
சொன்னாயே!
வருவாயா?
இது அவசர அழைப்பு..

யுகங்கள் செழிக்க
உண்மை தழைக்க
வருவேன் என்று
சொன்னாயே..
வருவாயா?
இது அவசர‌ அழைப்பு..‌.!

– ஆதிரன்

Comments (0)
Add Comment