அறிவியலா, ஆன்மிகமா? – குழப்பத்தில் ‘மாயோன்’

புதையலைத் தேடிப் பயணம் மேற்கொள்ளும் சாகசக் கதைகள் தமிழில் குறைவு. அதற்கான செட் அமைப்பது முதல் பார்வையாளர்கள் மனதில் பிரமாண்டத்தை உருவாக்கவல்ல கதை அமையப் பெறுவது வரை அனைத்துமே சவால் நிரம்பியவை.

கடந்த சில வாரங்களாக விளம்பரங்கள், முன்னோட்டங்கள் வழியாக அப்படியொரு சாகசப்படமாக முன்னிறுத்தப்பட்டது ‘மாயோன்’. அதனாலேயே குறிப்பிட்ட அளவில் கவனத்தையும் பெற்றது.

மகாபாரதப் போரின் இறுதியில் இடம்பெற்ற கிருஷ்ணர் தொடர்பான தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?

அறிவியலா? ஆன்மிகமா?

புதுக்கோட்டை அருகிலிருக்கும் மாயோன் மலையில் (கற்பனையானது) இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவ்வட்டாரத்தில் உள்ள மாயோன் கோயிலில் கிருஷ்ண பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

அதையும் மீறி, அக்கோயிலைத் தொல்லியல் துறை கையிலெடுக்கிறது. அந்த கோயிலிலுள்ள ஒரு ரகசிய அறையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தங்க நாணயங்கள், நகைகள் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிய வருகின்றன.

தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் சான்றுகளைத் திருடி வெளிநாட்டு கும்பலொன்றிடம் விற்கும் அதிகாரி தேவராஜ் (ஹரீஷ் பேரடி) கையில் இத்தகவல்கள் கிடைக்க, தொல்லியல் நிபுணரான அர்ஜுன் மணிமாறனைக் (சிபி சத்யராஜ்) கொண்டு அவர் அதனை வெளிக்கொணர முயற்சிக்கிறார்.

ஆனால், அந்த கோயிலில் இரவு 6 மணிக்கு மேல் யாரும் செல்வதில்லை என்ற விதி கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், கோயிலில் இருக்கும் கிருஷ்ணனை மகிழ்விக்க கந்தர்வர்கள் இரவில் இசைக்கும் இசையை மனிதர்கள் கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை.

ஆன்மிகத்தில் ஈடுபாடில்லாத அர்ஜுன், இதனை அறிவியலின் துணை கொண்டு எதிர்கொள்ளத் தயாராகிறார். ஆய்வு நடக்குமிடத்தில் பணிபுரிந்துவரும் டிகே (பகவதி பெருமாள்), அஞ்சனா (தான்யா ரவிச்சந்திரன்), மதன் ஆகியோர் தேவராஜின் ஆட்கள். அவர்களும் அர்ஜுனுடன் இணைய, கோயிலில் புதையல் இருக்கிறதா என்றறியும் முயற்சிகள் தொடங்குகின்றன.

ஆனால், தொல்லியல் ஆய்வு நடக்குமிடத்தில் பொறுப்பாளராகச் செயல்படும் வாசுதேவன் (கே.எஸ்.ரவிக்குமார்) ரொம்பவும் நேர்மையானவர் என்பதால், அவருக்குத் தெரியாமல் இதனைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அர்ஜுன் குழுவினர் இருக்கின்றனர். கூடவே, அக்கோயிலை அமானுஷ்ய சக்திகள் காப்பதாகச் சொல்லப்படும் தகவல்கள் வேறு பீதியூட்டுகின்றன.

இவற்றையெல்லாம் மீறி அர்ஜுனும் அவரது குழுவினரும் ரகசிய அறையைக் கண்டறிந்தார்களா? உண்மையிலேயே அக்கோயிலில் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றனவா? வெளிநாட்டு கடத்தல் கும்பல் என்னவானது என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘மாயோன்’.

சுவாரஸ்யத்திற்கு நிறைய இடமிருக்கும் இக்கதையை முழுக்க ஆன்மிகமாகச் சொல்வதா, அறிவியல்பூர்வமாக விளக்கமளிப்பதா என்பதில் குழம்பித் தவிக்கிறது திரைக்கதை.

எல்லா தரப்பு பார்வையாளர்களையும் தியேட்டருக்கு வரவழைக்க வேண்டுமென்ற பேராசையில், இரண்டையுமே மாறி மாறித் திணித்திருப்பது மொத்தமாகக் கதையைச் சிதைத்திருக்கிறது.

பிரமாண்டத்திற்கு ‘நோ’!

சாகசங்களை வெளிக்காட்டும் திரைப்படம் என்றால், லாங் ஷாட்களும் எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்களும் அதிகமிருக்கும் என்பதை முந்தைய உதாரணங்கள் மூலம் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், ‘மாயோன்’னில் பெரும்பாலான நேரம் ‘குளோசப்’பில் முகம் காட்டுகின்றன பெரும்பான்மையான பாத்திரங்கள். இதையும் மீறி இடத்தையும் சூழலையும் காட்டும் ஷாட்களில் விஎஃப்எக்ஸ் நம்மை அச்சுறுத்துகிறது.

இது போதாதென்று முன்பாதி முழுக்க ‘ஸ்டாக் ஷாட்’கள் நிரம்பியிருக்கின்றன. செய்தி தொலைக்காட்சிகள், நிகழ்ச்சிகளிலேயே ‘ஸ்டாக் ஷாட்’ பயன்படுத்தும் வழக்கம் இல்லாமல்போய்விட்ட நாட்களில் இப்படத்தில் அதிகளவு இடம்பெற்றிருப்பது எரிச்சலை உருவாக்குகிறது.

கொஞ்சம் கூட மவுனத்திற்கும் நிதானத்திற்கும் இடமில்லாமல் ‘சர்..புர்..’ என்று நகரும் முதல் இருபது நிமிட காட்சிகள் கதையை நம் மனதில் பதிய வைப்பதில்லை.

படம் ஓடும் நேரத்தைக் குறைக்கவோ அல்லது பரபரப்பைக் கூட்டவோ ‘ஷார்ப் கட்’ உத்தியைப் படத்தொகுப்பில் பயன்படுத்தியிருக்கலாம். அதனால், கதை முழுமையாக நம் மனதில் பதிவதில்லை என்பதே உண்மை.

படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் ராம் பாண்டியன் கொண்டல்ராவ் இருவரும் இதனைக் கவனித்திருக்கலாம். அவர்களை மீறி இத்தவறு நடந்தது என்றால் அதற்கு இயக்குனரே பொறுப்பு.

கூடுதலாக பத்து நிமிடங்கள் அதிகமானாலும் பரவாயில்லை என்று தேவையான அளவுக்கு ஷாட்களை நீட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாததால் திரைக்கதையே முழுமையற்று இருப்பது போன்ற எண்ணம் உண்டாகிறது.

விஎஃப்எக்ஸ் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய இத்திரைப்படத்தில், கலை இயக்குனர் டி.பாலசுப்பிரமணியம் முடிந்த அளவுக்கு பிரமாண்டத்தை உணர்த்த முயன்றிருக்கிறார். ஆனாலும், முன்உழைப்பு சரியாகத் திட்டமிடப்படாததால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிருக்கிறது.

’ஆயிரத்தில் ஒருவன்’ போன்று தமிழ் திரைச்சூழலுக்கு மீறிய பிரமாண்டம் இல்லை என்றாலும், முற்றிலுமாக பிரமாண்டத்திற்கு ‘நோ’ சொல்லியிருப்பது கதையின் அடிப்படைத் தன்மையையே குலைக்கிறது. ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு கிளைமேக்ஸ் காட்சிகளில் ஈர்க்கிறது.

முதல் இருபது நிமிடங்கள் ஏற்படுத்திய அயர்வைக் காணாமல் போகச் செய்கிறது ‘தேடி தேடி’ பாடல். அது மட்டுமல்லாமல் மீதமுள்ள இரண்டு பாடல்களையும் எழுதி இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

படத்துடன் காணும்போது அனைத்தும் பொருத்தமானதாகத் தெரிகிறது. பின்னணி இசையில் ராஜா மிரட்டியிருக்கிறார் என்று சொல்ல ஆசைதான்.

ஆனால், காட்சியமைப்பை மீறி நிற்கும் அளவுக்கு இசையில் பிரமாண்டத்தைக் காட்டியிருக்கிறார் என்பதே உண்மை. காட்சியாக்கமும் அபாரமாக இருந்திருந்தால் இந்த வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும்.

ராஜாவுக்கு இது பாராட்டு என்றாலும், அவர் மட்டுமே படத்தைத் தாங்கியாக வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, மாரிமுத்து, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உட்பட அனைவருமே தங்கள் பங்கினை உணர்ந்து திரையில் தோன்றியிருக்கின்றனர்.

ஆனால், அத்தனை பேரின் இருப்பிலும் பார்வையாளர்கள் திருப்தியைப் பெற முடியவில்லை என்பதே உண்மை.

நழுவிப்போன வாய்ப்பு!

’மாயோன்’ தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கமே, இதன் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். ஆனால், இப்படத்தின் கதை வசனம் எழுதியவர் யார் என்ற விபரம் கடைசிவரை குறிப்பிடப்படவில்லை.

என்ன காரணமோ? வசனங்கள் ஆங்காங்கே ‘கூர்மை’யாக இருந்தாலும், இயல்பான அலுவலக உரையாடல்கள் சரியாக அமையப் பெறவில்லை.

படத்தை இயக்கியிருக்கும் கிஷோருக்கு திரைக்கதையில் எந்தளவுக்கு பங்கிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், மொத்த படமும் முடிந்தபிறகு ஒரு அருமையான ‘பேண்டஸி’ திரைப்படமாக அமைய வேண்டிய வாய்ப்பு நழுவிப்போயிருப்பதை உணர முடிகிறது.

முக்கியமாக, திரைக்கதை ‘ட்ரீட்மெண்ட்’டில் மேலோங்கி நிற்க வேண்டியது ஆன்மிகமா அறிவியலா என்பதில் தடுமாறியிருக்கிறார்.

இரண்டுமே முக்கியம் என்று சொல்ல முயன்றிருந்தால், ஆங்காங்கே தொக்கி நிற்கும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கலாம்.

அது நிகழாமல் போயிருப்பதால், அரைகுறை முயற்சியாகவே தோற்றமளிக்கிறது ‘மாயோன்’.

ராமாயண, மகாபாரத இதிகாசக் கதைகள் பற்றிய ஆர்வம் குன்றியிருக்கும் இந்நாட்களில் அவற்றைத் தெரிந்தவர்களும் அடுத்த தலைமுறைக்கு கடத்த முயல்பவர்களும் மட்டுமே இப்படத்தைக் காண ஆர்வம் காண்பிப்பார்கள். மற்றவர்களுக்கு, இது மற்றுமொரு தமிழ் திரைப்படம் தான்..!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment