பாலியல் துன்புறுத்தலிலிருந்து பள்ளிக் குழந்தைகளைக் காக்க புதுத் திட்டம்!

பள்ளிக்குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம், கோவை மாவட்ட போலீஸ் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன், “பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி தான்,’புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம்.

ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு கூட்டம் நடத்தப்படும். அவர்களுக்கு பயிற்சி பெற்ற பெண் காவல்துறையினர், குழந்தை நல அலுவலர்கள் பயிற்சி அளிப்பர்.

குழந்தைகளுக்கான பிரச்னைகள் என்ன, பாலியல் தொல்லை நடப்பது தெரிந்தால் எப்படி காவல்துறையிடம் அணுகி தீர்வு காண்பது என்று ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாவட்டத்தில் செயல்படும் 997 பள்ளிகளிலும் குழந்தைகள் விழிப்புணர்வு அடையும் வகையில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.

முதலில், 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு அடிப்படையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். ‘குட் டச்’, ‘பேட் டச்’ என்ன, எது தவறு என்பதை உணர்வது எப்படி, தவறாக யாரேனும் நடந்தால் யாரிடம் புகார் செய்வது என்ற அடிப்படை விவரங்கள் சொல்லித்தரப்படும்.

10 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு, இணையத்தில் எது நல்லது, எது கெட்டது, நல்ல அணுகுமுறை, தவறான அணுகுமுறை பற்றி விளக்கம் அளிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான எந்த வழக்குகள் எங்கு பதிவாகின என்ற அடிப்படையில், ‘ஹாட் ஸ்பாட்’ கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்குள்ள பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் இந்த விழிப்புணர்வு பயிற்சி தொடங்கும்” எனக் கூறினார்.

– நன்றி தினமலர்

Comments (0)
Add Comment