அதிமுகவில் அடுத்தது என்ன?

அண்மையில் அதிமுக பொதுக்குழு பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சகாக்களுடன் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்.

முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் முன்பு பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளுமே காலாவதி ஆகி விட்டன என்று சொல்லியிருக்கிறார்.

இரு தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்து நிகழப் போவது என்ன என்பதுதான் தொண்டர்கள் தரப்பில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நடந்த களேபரங்களை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

1988 எட்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதை அன்றைக்கு இருந்த காங்கிரசும் அதிமுகவும் வெளிநடப்பு செய்ததன் விளைவாக சட்டசபையில் பெரும் களேபரம் நடந்தது. மோதல்கள் நடந்தன. பெரும் பதற்றம் உருவாகிற்று.

அதனுடைய விளைவாக ஜானகி அம்மையாரின் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு பிறகு இரு அணிகளாக பிரிந்ததனால் அன்றைய காங்கிரஸ் அரசால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

பிறகு ஜா-ஜே என்று புதிய சின்னங்களான இரட்டைப் புறா, சேவல் சின்னங்களில் இரு அணிகளும் போட்டியிட்டு குறைவான இடங்களைப் பெற முடிந்தது. தனித்து இரு அணிகளாகப் பிரிந்தனுடைய பலன் திமுகவிற்கு போய் சேர்ந்தது. திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது.

அதன்பிறகே ஜானகி அம்மையாரின் பெருந்தன்மையினால் ஜா-ஜே அணிகள் ஒன்று சேர்ந்தன. மீண்டும் அதிமுக பலம் பெற்றது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியிலும் அடுத்தடுத்து அமர முடிந்தது. இது அதிமுகவின் கடந்த கால வரலாறு.

அதிமுகவின் கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்திக் கொள்கிறவர்கள் தற்போது அதே அதிமுகவில் நடந்து கொண்டிருக்கும் பல பிரிவுகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

தற்போது உள்ள ஒரு சூழ்நிலையில் எடப்பாடி தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், ஓபிஎஸ் தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், தற்போதைக்கு திருமதி.சசிகலா தலைமையில் ஒரு அணி ஒரு தனிப் பிரிவாகவும் வெவ்வேறு பிரிவுகளை சந்திக்கக்கூடிய நிலையில் இருக்கின்றது இன்றைய அதிமுக.

கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த பல பொதுக்குழு முடிவுகள் தற்போது அவர்களாலேயே காலாவதியாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார்கள்.

தற்போது ஒருங்கிணைப்பாளராக கட்சி பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை அந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, காலாவதி ஆனதாக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படிப் பிளவுபட்ட நிலையில் அதிமுக நகர்ந்து கொண்டிருப்பது எதை நோக்கி? தேர்தல் ஆணையத்தில் ஒருவேளை புகார் தெரிவிக்கப்பட்டால் என்ன நடக்கும்? அதிமுக என்ற சின்னம் முடக்கப்படுவது தான் உடனடியான ஒரு பின்விளைவாக இருக்கும்.

அதனால் அதிமுக என்கின்ற ஒரு இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்படும். ஏற்கனவே 2019-ல் டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்று உறுதிப்படுத்தியது.

இடையில் 2017-ல் ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஏறத்தாழ 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் கூட அது ஒரு விதிவிலக்கான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்திருக்கிறது. தற்போது மேலும் பிளவுபட வாய்ப்பு இருக்கக் கூடிய நிலையில் இன்னும் சில நெருக்கடிகளை அதிமுக சந்திக்க நேரிடலாம்.

அதிமுகவில் உள்ள முன்னணி நிர்வாகிகள் எந்தப் பக்கம் எந்தத் திசையில் செல்வார்கள் என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது.

பாஜக தரப்புக்கோ, திமுக தரப்புக்கோ சில நிர்வாகிகள் இடம்பெயர்ந்து செல்லலாம். அப்படிப்பட்ட ஒரு நிலையை அதிமுக உருவாக்குவது தொண்டர்கள் மத்தியிலும் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். தொண்டர்களும் வெவ்வேறு இதரக் கட்சிகளின் ஆதரவாளர்களாக மாறலாம்.

ஒரு பொன்விழா கண்ட மாபெரும் இயக்கத்தின் நிகழ்காலம் தற்போது பல்வேறு கேள்விகளுடன் இன்றைக்கு பெரும் குழப்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாறுவதற்கு கட்சித் தலைமை என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்க வேண்டும்? என்பதை இனி வருங்காலம் தான் உறுதிப்படுத்தும்.

காலாவதி என்ற வார்த்தை மறுபடியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் புண்ணியத்தில் தற்போது அரசியல் உலகில் புழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

மருந்துகளுக்கும் சில பொருட்களுக்கும் காலாவதி ஆகக்கூடிய ஒரு காலத்தை குறிப்பிட்டிருப்பார்கள். தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அதிமுகவிலும் பொருத்திப் பார்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம்.

அவர் என்ன சொல்லி இருக்கிறார்?

பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அதிமுகவில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற பதவிகள் காலாவதி ஆகிவிட்டன என்று சொல்லி இருக்கிறார்.

இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தையும் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டென்று ஒரு முடிவெடுத்து பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று சி.வி.சண்முகம் அறிவித்திருப்பதைப் பார்த்தால் இதே இணை ஒருங்கிணைப்பாளரும் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டிருப்பதால்தான் சிலபேர் ராஜ்யசபா உறுப்பினர் ஆவது வரை நடந்து இருக்கிறது.

இதை அதிமுகவில் முன்பிருந்த புகழேந்தி சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்படி காலாவதி ஆகிவிட்ட பொறுப்பில் இருந்தவர்கள் கையெழுத்திட்டு அதன் மூலமாக உருவான பதவிகள் எப்படி காலாவதி ஆகாமல் போகும்?

ஆக பல்வேறு சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறது காலாவதி என்கின்ற இன்றைக்கு புழங்கிக் கொண்டிருக்கின்ற இந்த ஒற்றைச் சொல்.

பார்ப்போம்… அடுத்து எதெல்லாம் காலாவதி ஆகப் போகிறது என்பதை அதிமுகவின் அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • யூகி
Comments (0)
Add Comment