பிரபலங்களின் அந்தரங்கம் மீடியாக்களின் விற்பனைச் சரக்கா?

பிரபலமானவர்கள் என்றாலே அவர்களுடைய இருட்டான ஒரு பகுதியை ருசியுடன் கண்டுபிடித்து, மிகைப்படுத்திய குரலில் ஆரவாரிப்பது இப்போது மக்கள் தொடர்புச் சாதனங்களின் ஒரு கூறாக மாறிவிட்டிருக்கிறது.

அவர்களது அந்தரங்க வாழ்க்கை இவர்களது சந்தை வியாபாரத்திற்கான, எப்படியாவது வியாபாரப் போட்டியில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான, விற்பனைச் சரக்கு ஆகிவிடுகிறது.

பிரபலமானவர்களின் ஒழுங்கீனத்தை ஆதரிக்கிற தொனியில் இதைச் சொல்லவில்லை என்றாலும், அந்த ஒழுங்கீனங்களைச் சரக்காக்கி விலை பேசுவதற்கு மீடியாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இவற்றை மோப்பம் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் மீடியாவின் தலைசிறந்த பணி என்றால், சென்னையில் மஞ்சள் மயமாகப் பத்திரிகை நடத்தி, அந்தக் காலத் திரை பிரலங்கள் பலரைப் பற்றிப் பரபரப்பாக எழுதி, சென்னை சாலையில் ரிக்சாவில் சென்று கொண்டிருக்கும்போதே தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த லட்சுமி காந்தன் தான் இவர்களது ருசியான அளவுகோலின்படி துணிச்சலான பத்திரிகையாளர்.

பிரபலங்களும் நம்மைப்போல, நம்முடைய ஒரு பகுதியாக இருந்தவர்கள் தானே!
இவர்களை வித்தியாசப்படுத்தி பிரபலம் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தியது எது?

அவர்களைத் திரும்பத் திரும்ப ஊக்கப்படுத்தி, சரிந்த தருணங்களில் கூட விழுந்த ரணங்களையே பார்த்துக் கொண்டிராமல், நிமிர வைத்தது அவர்களுடைய கனவுகள் தான்.

அவர்களுடைய கனவுகளின் அந்தரங்கத் தன்மையை, அதன் மானசீகமான எல்லையை எந்த அளவுக்கு அவர்கள் தொட்டு இருக்கிறார்கள் என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அவர்களது கனவு தான் அவர்களுடைய வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறது. பிடிவாதமான உழைப்பின் மூலம் நகர வைத்திருக்கிறது.

அந்தப் பாதை ‘கனவின் பாதை’.

அதில் எவ்வளவு குறுக்கீடுகள், சிராய்ப்புகள், அவமானங்கள், ஏளனப் பேச்சுகள் எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதைப் பொறுமையுடனும், விவேகத்துடனும், நம்பிக்கையுடனும் கடந்த விதம் தான் முக்கியமானது.

இதை அவர்களே விவரிக்கிறபோது ஆத்மார்த்தமான அந்தப் பேச்சு – எதிரே இருக்கிறவர்களின் மனதில் சிறு பொறி மாதிரி கனன்று தெறித்து விழுந்து மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது.

இந்தத் தொடருக்காகப் பல பிரபலமானவர்களைச் சந்தித்த சில தருணங்கள் உற்சாகமும், நெகிழ்வும் கொண்டவை.

குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்,

பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர் கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜமுகம்,

ஜோதிடர்கள் தன்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று கிரக சாஸ்திரப்படி சொன்னாலும், மெல்லிய சிறகால் வருடுகிற மாதிரியான இளகிய குரலுடன் சென்னைக்கு வந்து தன்னுடைய வாழ்க்கையின் திசையைத் தானே தீர்மானித்துக் கொண்ட பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் பாடிக் காண்பித்த பாடல்கள்,

முந்திரிக்காடு சூழ்ந்த பகுதிகளில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து அவமானங்கள் பிடரியில் திரும்பத் திரும்ப வலுவாக அடித்தாலும் அதைமீறி ஜெயித்ததைச் சொல்கையில் தங்கர்பச்சானின் பேச்சில் இருந்த ஆவேசம்,

பெண்மை குழைந்த முகத்துடன் பிறந்து , சமூகப் புறக்கணிப்பை மீறித் திமிறித் துடித்துப் பரதத்தின் மூலம் தன் அழுத்தமான முகத்தைக் காண்பித்துக் கொண்ட நர்த்தகி நட்ராஜ் ஆடிக் காண்பித்த சில நடன அசைவுகள்,

இப்படி நம்பிக்கையை இழக்காமல் இவா்கள் போராடி ஒரு இடத்திற்கு வந்து சேர்வதற்கு வந்த விதத்தைப் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ரொம்பவும் பசுமையானவை.
அந்த அனுபவத்தின் நிறைவை எழுத்திற்குள் அடைப்பது சிரமம்தான்.

இருந்தாலும், செம்மண் தளத்தில் ஓட்டப்பந்தயத்ததில் மூச்சிறைக்க ஓடி வருகிறவனின் விரிந்த புஜபலம், கிண்ணென்று அதிரும் கால் தசைகள், உடம்பு முழுக்கக் கசகசத்துப் படர்ந்த வியர்வையின் ஈரம் என்று ஓட்டத்திற்குப் பின்னணியான இந்தக் காட்சிகளை ஒரு நெருக்கமான பார்வையில் காண்பிக்கிற முயற்சியே இந்தத் தொடர்.

இந்தத் தொடரிலிருந்து ஏதாவது நம்பிக்கையான ஒருவரி படிக்கும்போது, பார்வையிலிருந்து ஒரு திசு மாதிரி நழுவி உட்புகுந்து மேலும் செயலாற்றத் தூண்டுதலாக இருந்தாலே போதும், அதுவே இந்தத் தொடருக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருக்கும்.’’

– மணா எழுதிய- ‘கனவின் பாதை’ நூலுக்கான முன்னுரை.

Comments (0)
Add Comment