ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாவல் அளவுக்கு கதை தேவையில்லை, சிறுகதை போதும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அவ்வாறு திரையில் சொல்லப்படும் சிறு கதை மக்கள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
இயக்குனர் சீனு ராமசாமியின் முதல் படமான ‘கூடல்நகர்’ தொடங்கி ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களைப் பார்க்கும்போது நல்ல சிறுகதையாகவோ அல்லது சிறுகதைத் தொகுப்பாகவோ தோன்றும்.
அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாமனிதன்’ படமும் அந்த வரிசையில் இடம்பெற்றிருக்கிறதா?
ஒரு சாதாரண கதை!
தேனி அருகிலுள்ள பண்ணைபுரத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி). அவரது மனைவி சாவித்திரி (காயத்ரி). இவர்களுக்கு ஒரு மகன், மகள்.
மனைவி மக்கள் அமையும் முன்னரே குடும்பத்திற்கென ஒரு வீட்டை கட்டியவர் ராதாகிருஷ்ணன். அப்படி எதையும் திட்டமிட்டு செய்யும் அவர், திடீரென்று ஒருநாள் ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதிக்கிறார்.
புதிதாக ஊருக்கு வந்த மாதவனை (ஷாஜி) நம்பி, அதுநாள் வரை பழகிய மக்களிடம் அட்வான்ஸ் பணம் வாங்குகிறார்.
பணத்தை எடுத்துக்கொண்டு மாதவன் கம்பி நீட்ட, அதுவரை காத்த மானமும் மதிப்பும் போய்விட்டதே என்று ஊரைவிட்டு ஓடுகிறார் ராதாகிருஷ்ணன்.
சாவித்திரி மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் தந்தை மீது வெறுப்பு மேலிடுகிறது. ராதாகிருஷ்ணனின் நண்பர் இஸ்மாயில் (குரு சோமசுந்தரம்) செய்த உதவியால் குழந்தைகள் இருவரும் பள்ளி, கல்லூரியில் பயில்கின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் ராதாகிருஷ்ணன் கேரளாவில் இருக்கும் விவரம் தெரிய வருகிறது. அதன்பின், அவரது குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்று சொல்கிறது ‘மாமனிதன்’.
வழக்கமாக யூடியூப் வீடியோக்களில், தொலைக்காட்சித் தொடர்களில், பழைய திரைப்படங்களில் பார்த்த காட்சிகள், கதை என்றாலும், கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் ஒருவரது வாழ்வை நேரில் பார்ப்பது போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
யதார்த்தமான பாத்திரங்கள்!
மலையாள திரைப்படங்களை பார்க்கும்போது, ‘என்னம்மா யதார்த்தமா எடுத்திருக்காங்க’ என்று சொல்வது பலரது வழக்கமாயிருக்கிறது. அதே யதார்த்தத்தை தமிழில் காண்பிக்கும்போது ‘சீரியல் மாதிரில்லா இருக்கு’ என்று சொல்வதும் உண்டு.
இவ்விரண்டுக்கும் நடுவே, சமீபகாலமாகத் தமிழ் சினிமா தவிர்த்த ஒரு யதார்த்த உலகைக் கண்ணில் காண்பித்திருக்கிறார் சீனு ராமசாமி.
ஆட்டோ ஓட்டுநராக வரும் விஜய் சேதுபதி, இயக்குனரின் வார்ப்புக்கேற்ப தன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காயத்ரியிடம் கெஞ்சுவதாகட்டும், குரு சோமசுந்தரத்திடம் பதறுவதாகட்டும், இறுதியில் தன்னைக் கிண்டலடிக்கும் சாதுக்களிடம் பவ்யமாகப் பேசுவதாகட்டும், அவர் ஸ்கோர் செய்வதற்குப் படத்தில் போதுமான இடங்கள் வாய்த்திருக்கின்றன.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே வகையறா பாத்திரம். ஆனால், சட்டென்று ரசிகர்கள் மனதைத் தொடும் விதத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி.
குரு சோமசுந்தரம், இரண்டொரு காட்சிகளில் வரும் கஞ்சா கருப்பு, கேரளாவில் உடன் பணிபுரிபவர்களாக வரும் ஷரவண சக்தி, மணிகண்டன் மற்றும் ரியல் எஸ்டேட் மாதவனாக வரும் ஷாஜி அனைவரும் கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிவது ஆச்சர்யம்.
மறைந்த கே.பி.ஏ.சி.லலிதா நடித்தது சிறு பாத்திரம் என்றாலும், தனக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜூவல் மேரி, அவரது மகளாக வரும் அனிகா இடம்பெறும் காட்சிகள் ‘‘டெம்ப்ளேட்’ என்றாலும், பார்க்கும்போது எரிச்சல் வருவதில்லை.
ஒரு டஜன் பாத்திரங்கள், நான்கைந்து களங்கள், ஒவ்வொரு காட்சியிலும் மேலிடும் வெவ்வேறு உணர்ச்சிகள் என்றிருப்பதற்கு ஏற்ப அழகாய் அழகை உள்வாங்கியிருக்கிறது எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு. நறுக்கு தெறித்தாற்போல தொடங்கி முடியும் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறது ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு.
’அப்பன் தோத்த ஊர்ல புள்ளை ஜெயிக்குறது சாதாரண விஷயமில்ல’, ‘அடுத்தவன் வாய்ப்பை பறிச்சு நாம வாழணும்னு நினைக்கறது தொழில் தர்மமில்ல’ என்பது போன்ற வசனங்கள் அரிதாக இடம்பெறுகின்றன என்றாலும், யதார்த்தமான உரையாடல்களால் நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சீனு ராமசாமி.
ஆனால், குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபரையும் அவரது குடும்பத்தினரையும் போலீஸார் நடத்தும் விதம் மட்டுமே திரைக்கதையில் ‘செயற்கையாக’ தென்படுகிறது.
வசனங்களில் அது தொடர்பான கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தந்தாலும், அதனைத் தவறவிடுபவர்களுக்கு படம் யதார்த்தத்தில் இருந்து விலகியதாகத் தோன்றலாம்.
இளையராஜா – யுவன்சங்கர் ராஜா காம்பினேஷன் இசையில் பாடல்கள் மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. இந்த காம்போவோடு கைகோர்த்ததற்காகவே இயக்குனரிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் கை குலுக்கலாம்..
மீண்டும் ‘ராஜா’ங்கம்!
‘ஆண் பாவம்’ உட்பட பல சுப்பர்ஹிட் கமர்ஷியல் திரைப்படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைக்கு மாபெரும் இடமுண்டு.
வெறுமனே சீரியஸான, கல்ட் அந்தஸ்தை பெறுகிற படங்கள் மட்டுமல்லாமல் மிகச்சாதாரணமான ஜனரஞ்சக படத்திற்கும் அற்புதமான பங்களிப்பைத் தந்திருப்பார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தகைய அனுபவத்தைத் தாங்கியிருக்கிறது ‘மாமனிதன்’.
காதுகளை மூடிக்கொண்டும், திறந்துவைத்தும் படத்தைப் பார்க்கிறபோது அந்த வித்தியாசம் நன்கு தெரிகிறது.
அந்த வகையில் பல நூறு வாத்தியங்களை ஒன்றிணைத்தால்தான் ‘நல்ல பின்னணி இசை’யைத் தர முடியும் என்ற நம்பிக்கையை ‘ஜஸ்ட் லைக் தட்’ நொறுக்கியிருக்கிறார் ராஜா.
இதில் இணைந்து பணியாற்றியிருப்பது, யுவனிடமும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்குமென்று நம்பலாம்.
பெரிதாகத் திருப்பங்கள் ஏதுமில்லாத, மிகச்சிறிய ஓடையின் பயணம் போன்றிருக்கிற திரைக்கதையோடு பொருத்தமான ஒளிப்பதிவும் கச்சிதமான படத்தொகுப்பும் காட்சிகளின் உணர்வுகளைச் சட்டென்று கட்த்துகிற பின்னணி இசையும் அவசியம்.
அதனை வாய்க்கப் பெற்றிருக்கும் சீனு ராமசாமி, எளிமையான வாழ்வியலை உதறுகிற காலகட்டத்தில் ஒரு அற்புதமான படைப்பைத் தந்திருக்கிறார்.
எந்தவொரு பார்வையாளரும் இப்படம் முடியும்போது, குடும்பத்திற்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் சரித்திர நாயகன் தான் என்ற எண்ணத்தை உணரலாம்.
அதுவே, இயக்குனரின் நோக்கமாகவும் இருக்கக் கூடும். இது போன்ற திரைப்படங்கள் பரவலான மக்களைச் சென்றடையும்போது, எளிமையான வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் எத்தனையோ நெஞ்சங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்!
உதய் பாடகலிங்கம்