இரட்டை இலை மீண்டும் முடக்கப்படுமா?

ஓ.பி.எஸ்சின் கடைசி அஸ்திரம்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்கி கட்சிக்கு ஒற்றைத் தலைமையைக் கொண்டுவரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடந்த மூன்று மாதங்களாகவே செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில் ஓபிஎஸ் கடந்த மார்ச் மாதம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது சசிகலாவுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். சசிகலாவை ஏகத்துக்கும் புகழ்ந்தார். இது எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அதன் பின் ஓபிஎஸ் மகனான மக்களவை உறுப்பினர் ரவீந்திர நாத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இது எடப்பாடியின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது.

அப்போதே, ஓபிஸ்சை ஓரம்கட்ட முடிவு செய்து தனது ஆதரவாளர்கள் மூலம் ஒற்றைத் தலைமை முழக்கத்தை எழுப்ப வைத்தார். இதன் கிளைமாக்ஸ் தான் நேற்று நடந்த பொதுக்குழு.

நடந்தது என்ன?

பொதுக்குழுக் கூட்டத்துக்கு எடப்பாடி வந்தபோது ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். ஓபிஎஸ் வந்தபோது அவருக்கு எதிராக எடப்பாடி ஆட்கள் முழக்கமிட்டனர்.

கட்சியின் அவைத்தலைவராக தேர்வான தமிழ் மகன் உசேன் பேச்சு மட்டும் மெச்சும்படி இருந்தது.

’’எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கியதும், நான் பார்த்த அரசு வேலையை, அதாவது நான் ஓட்டிக்கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி விட்டு எம்ஜிஆருக்கு ஆதரவளிக்கும் வகையில் 93 எம்ஜிஆர் மன்றங்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் காலை பிடித்துக் கதறி அழுதேன். அதன் பின்னர் எம்ஜிஆருடன் சத்யா ஸ்டுடியோ போனேன்.

’’யாரெல்லாம் நான் கட்சி தொடங்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?’’ என எம்ஜிஆர் கேட்டார். 11 பேர் கையெழுத்திட்டனர். அதில், 4-வதாக ரத்தத்தால் கையெழுத்து போட்டவன் நான்’’ என நெகிழ வைத்தார் உசேன்.

இந்தநிலையில் தான் நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. அப்போது நடந்த அமளியால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

அடுத்து என்ன?

பொதுக்குழு முடிந்த நிலையில் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிட உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வாகும் பட்சத்தில் இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.

இதற்கிடையே இருவருக்கும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக பாஜக தேசியச் செயலாளர் ரவியும், தமிழக தலைவர் அண்ணாமலையும் நேற்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சை சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எடுபடுமா என்பது போகப்போக தெரியும்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment