சமகால கல்விச் சிந்தனைகள்: 5 / உமா மகேஸ்வரி
உலகெங்கிலும் உள்ள கல்வியில் சிறந்த நாடுகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நமது தமிழ்நாட்டின் கல்வி குறித்துப் பேசும்போது, அந்நாடுகள் பின்பற்றும் பொருண்மைகளில் முக்கியமானது ‘தாய்மொழிவழிக் கல்வி’ என்பதை மறந்துவிடுகிறோம்.
வீட்டின் மொழியையும் பள்ளியில் கற்பிக்கப்படும் மொழியையும் இணைப்பதுதான் தாய்மொழிவழிக் கல்வி என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோமா என்பதை நம்மிடமே
கேட்டுக் கொள்ளலாம்.
தாய்மொழிவழிக் கல்வி ஒன்றினால்தான், பள்ளிகள் குழந்தையை முழுமையான ஆளுமைமிக்க மனிதர்களாக உருவாக்க இயலும் என்பதை ஏன் நடைமுறைப்படுத்தத் தயங்குகிறோம்?
மொழியினை குழந்தை முழுமையாக பகுத்துணரும் வரையில் கல்விமொழி தாய் மொழியிலேயே இருத்தல்வேண்டும் (UNESCO 1953) என்று யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளாக இயங்குவதால் பெற்றோர்களின் சிந்தனை, ஆங்கிலவழியில் படித்தால்தான் தம் குழந்தைகளுக்கு எதிர்காலம் இருக்கும் என்று முழுமையாக நம்புகின்றனர்.
மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கும்போதே எனது குழந்தைைக்கு ஆங்கிலவழிதான் வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.
விளைவு அரசுப் பள்ளிகளில் தற்போது இங்கொன்றும் அங்கொன்றுமாக தமிழ்வழி வகுப்புகள் இயங்கும் பள்ளிகளைத் தேடவேண்டியுள்ளது.
இரு மொழிகளிலும் திறமையற்ற மாணவர் சமுதாயத்தையே கடந்த பத்தாண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை உருவாக்கிவருகிறது.
அதில் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் என்ற வேறுபாடுகளெல்லாம் கிடையாது.
எல்லா பள்ளிக் குழந்தைகளும் தங்களுக்கு தமிழ் வராது, பிடிக்காது என்பதைப் பெருமையாகக் கூறுகின்றனர்.
காரணம், ஒரு பாடம் மட்டுமே தமிழில், அதாவது மொழிப்பாடத் தமிழ் படிக்கின்றனர். மற்ற நான்கு பாடங்களும் ஆங்கிலத்தில் படிப்பதால் இந்த சிக்கல்.
ஆனால், குழந்தைகளிடம் பேசிப் பார்த்தால் தங்களுக்கு ஆங்கிலவழியில் படிப்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதாகவே கூறி வருந்துகின்றனர். விளைவு, மொழிப் பாடங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்ப் பாடங்களைப் படிக்கவே தடுமாறுகின்றனர்.
கல்விசார் ஆய்வுகள் நடத்தும் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள் தமிழ் வாசிப்பில் மாணவர்கள் பின்னடைவு என முடிவுகளை வெளியிடுகின்றன. இந்நிலை மாறவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் முதல் 5 வகுப்புகள் வரையாவது தாய் மொழிவழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இங்கு தாய்மொழிக் கல்வி என்பது தமிழ்மொழிதான் என்பதை அறிவோம் .
பிறகு குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க தமிழ்வழி, ஆங்கிலவழி என உயர் வகுப்புகளைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்கலாமே தவிர, முடிவுகள் குழந்தைகளால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். பெற்றோர் தலையீடு முடிவுகளில் தவிர்க்கப்பட வேண்டும் பெற்றோர்களைவிட குழந்தைகள் மிகவும் அற்புதமாக சிந்திக்கின்றனர்.
சிந்தனைகள் ஒரு மனிதனுக்கு தங்குதடையின்றி நிகழ்வது தாய்மொழியில் மட்டுமே என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
எனில் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்விக்குக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்களையும் அதை கண்டும் காணாமலும் நகர்ந்துபோகும் கல்வித்துறையின் அலட்சியப் போக்கையும் என்ன செய்வது?
குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றுக்கொள்ளவும், தொலைநோக்குச் சிந்தனைகளைப் பெற்று விரிந்த அனுபவங்களைப் பெறவும், சுதந்திரமான கற்றல் சூழ்நிலையை அனுபவிக்கும் தருணங்களும் தாய்மொழிவழிக் கல்வியால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து பின்பற்றுவதே எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
(தொடரும்…)
சு. உமாமகேஸ்வரி