மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உருக்கும்
மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே சமூகவலைதளமான பேஸ்புக் பக்கம் மூலம் உரையாற்றினார்.
அதில், நமது எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன ஆனது? அவர்கள் எங்கு சென்றார்கள் அல்லது எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்று நான் பேச விரும்பவில்லை என்றும், எனது உடல்நலம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக நான் கடந்த சில மாதங்களாக மக்களை சந்திக்கவில்லை என்பது உண்மை. ஆனால், தற்போது நான் மக்களைச் சந்திக்க தொடங்கிவிட்டேன் என்றும் பேசினார்.
நான் முதலமைச்சராகத் தொடர எதாவது ஒரு எம்.எல்.ஏ. விரும்பவில்லையென்றாலும் நான் எனது வீட்டிற்குச் செல்ல தயார் என்று கூறிய உத்தவ் தாக்கரே, எனக்கு எதிராக அவர்கள் எதாவது கூறுவதாக இருந்தால், அதை ஏன் குஜராத்தில் இருந்து கூறவேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, அவர்கள் மும்பை வந்து அதை என் முகத்திற்கு முன்பாகக் கூற வேண்டும் என்றும், நான் எனது ராஜினாமா கடிதத்தை எனது எம்.எல்.ஏ.க்களிடம் கொடுக்க தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.
எனது கட்சித் தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகவும் நான் தயாராக உள்ளேன் என்றும், ஆனால், அதை எனது கட்சித் தொண்டர்கள் கூறவேண்டும் எனவும், அப்படி அவர்கள் கூறினால், நான் முதலமைச்சர் பதவியில் இருந்தும் விலக தயார் என்றும் உத்தவ் தாக்கரே உருக்கமாகக் கூறினார்.