ஜூன் – 23, சர்வதேச விதவைகள் தினம்
பெண்கள் என்றாலே சவால்களை சந்தித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. சாஸ்திரம், சம்பிரதாயங்கள் எல்லாம் ஆண்களை விடவும் பெண்களுக்கே அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் என்றால் சமுதாயத்தில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் தேதியான இன்று சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
விதவைகள் என்றாலே சமுதாயத்திலும் சரி குடும்பத்திலும் சரி பாரபட்சம் காட்டப்படுகிறது அவர்களின் நிலை, நிலைப்பாடு, சமூகக் கட்டுப்பாடுகள், உணர்வு ரீதியான பாதிப்பு, பொருளாதார சவால்கள், வாழ்வாதார சிக்கல்களை எல்லோரும் புரிந்துகொள்வதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
முதன் முதலாக தி லூம்பா பவுண்டேஷன் சார்பாக 2005 ஆம் ஆண்டில், ஜூன் 23 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு, ஜூன் 23 ஆம் தேதி அன்றைய தினம் திருமதி புஷ்பவதி லூம்பா விதவையான நாள்.
அதாவது [தி லூம்பா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அன்னை] அவர் விதவையான நாளை நினைவு கூரும் விதமாக ஜூன் 23 ஆம் தேதி நாளை விதவைகள் தினமாக அனுசரித்து தி லூம்பா அறக்கட்டளையால் இந்த நாள் நிறுவப்பட்டது.
2010 ஆம் ஆண்டு விதவைகள் சூழ்நிலை குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கம் தி லூம்பா அறக்கட்டளை நடத்தியது.
அதில் அவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதவைகள் படும் துயரங்கள் பற்றி “கண்ணுக்குப் புலப்படாத, மறக்கப்பட்ட இன்னலுற்றோர்” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
விதவைகள் படும் துயரங்கள் பற்றி உலக அளவில் பேசப்பட்டு ஒன்று கூடி விவாதிக்கப்பட்டது. பல நாடுகளில் இருக்கும் விதவைகள் படும் இன்னல்கள் குறித்து ஐ.நா சபையில் விவாதங்கள் நடத்தப்பட்டன.
இதன் விளைவாக 21, டிசம்பர் 2010 ஆம் நாள் காபூன் அதிபர், பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஐ.நா பொது சபை. ஜூன் 23 ஆம் தேதி ‘சர்வதேச விதவைகள் தினம்’ அனுசரிக்கப்படும் என்ற தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியது.
மேலும் அந்தந்த நாட்டில் இருக்கும் விதவைகள் வாழ்வாதாரம், சமூக சூழ்நிலை, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதன் நோக்கமே ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக கணவனை இழந்த பெண்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அரசு உதவ முன்வரவேண்டும் என்பதுதான்.
அந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வீட்டில் ஒரு மூலையில் அமர வைத்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
சக பெண்கள் அவர்களை புரிந்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு அடிமையை போல் அந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
இன்னும் சொல்லப்போனால் மொட்டை அடித்து வெள்ளை துணி உடுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு என்று எந்த விருப்பமும் இருக்க கூடாது மற்றவர்கள் கூறுவதற்கு அவர்கள் தலையாட்ட வேண்டும்.
உடன்கட்டை ஏறுதல், அதாவது கணவன் இறந்தவுடன் அவருடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
இந்தக் கொடுமைகள் எல்லாம் மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. மறுமணம், படிப்பு, வேலை, சமூக அந்தஸ்து ஆகியவை எல்லாம் தற்கால வாழ்க்கையில் பெண்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கக் காரணம்.
இப்போதும் ஒரு சில இடங்களின் விதவை பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு உணர்வு உண்டு,அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
அவர்களை ஒதுக்காதீர்கள். எந்த நல்ல காரியமாக இருந்தால் என்ன? சபிக்கப்பட்டவர்களா விதவைகள்? இல்லை ஆண் எப்போதும் விதவன் ஆவதில்லை ஏன்? கைம்பெண் ஆவது போல் ஏன் ஆண்கள் ஆவதில்லை? பெண்களுக்கு மட்டும் எதற்கு இந்தப் பாகுபாடு?
மாற்றுங்கள் உங்கள் எண்ணங்களை. இறப்பு என்பது இயற்கை. அதில் ஏன் பாகுபாடு? பூ, பொட்டு என்பது பிறப்பில் இருந்து வருவது. இடையில் வந்தது கணவன் என்ற உறவு மட்டுமே. ஆகவே எண்ணங்களை மாற்றுங்கள். மறுமணம் என்பது தேவை உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, நண்பனாக இருப்பதற்கு தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆண்களைப் போல பெண்களுக்கும் உணர்வுகள், விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை உணர வேண்டும். விதவைகளை சபிக்கப்பட்டவர்கள் போல் பார்க்காதீர்கள். பாலினப் பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் உணர்வுகள் ஒன்றுதான் என்பதை இந்த நாளில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
-யாழினி சோமு