O2 – வேடிக்கையாகப் பார்க்கலாம், விபத்தாக அல்ல!

இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் த்ரில்லர் என்று சில தமிழ் திரைப்படங்கள் உண்டு. அப்படியொரு விளிம்பில் ரசிகர்களை அமர வைக்க பரபரப்பான திரைக்கதை வேண்டும்.

நயன்தாரா நடித்துள்ள O2வும் அந்த வரிசையில் இடம்பெற வேண்டியது. எதிர்பாராத வகையில் அப்படியொரு வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது.

மூச்சு முட்டும் பயணம்!

ஆக்சிஜனை இயற்கையாக சுவாசிக்க முடியாதபடி தீவிரமான பாதிப்புக்குள்ளான 5 வயது மகன் வீராவை (ரித்விக்) வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறார் பார்வதி (நயன்தாரா). கணவரைப் போலவே நுரையீரல் பாதிப்பினால் மகனையும் இழந்துவிடக் கூடாது என்றிருக்கிறார்.

அறுவைச்சிகிச்சை மூலமாக வீராவைக் குணப்படுத்தும் வாய்ப்பு கிடைக்க, கொச்சியில் இருக்கும் மருத்துவமனையில் மகனைச் சேர்க்க தயாராகிறார் பார்வதி. இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் சகோதரர் (சரா).

செய்யாத தவறுக்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த கைதி (ஹலோ கந்தசாமி), அள்ளக்கையுடன் கொச்சி செல்லும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ (ஆர்.என்.ஆர்.மனோகர்), தந்தையுடன் (ஜாபர் இடுக்கி) பயணிக்கும் இளம்பெண், அவரைக் காதலிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் (ரிஷிகாந்த்), மகளின் படிப்புக்காக முதலாளியிடம் வட்டிக்கு கடன் வாங்கத் தயாராக இருக்கும் ஆம்னி பஸ் டிரைவர் (முருகதாஸ்) மற்றும் ஒரு முரட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பரத் நீலகண்டன்) உட்பட சிலருடன் வீராவும் பார்வதியும் கொச்சிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

செல்லும் வழியில் ட்ராபிக் ஜாம் ஏற்பட, முக்கால்வாசி பேர் வேறு பேருந்துக்கு மாற்றப்படுகின்றனர். மேலே சொன்னவர்கள் மட்டும் கொச்சிக்கு மாற்றுப்பாதையில் பயணிக்கின்றனர். வழியில் பெருமழை பொழிய, மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொள்கிறது பேருந்து. மண் குவியலுக்குள் சிக்குகிறது.

வீராவைப் போலவே, வெளியிலிருந்து ஆக்சிஜன் வந்தாக வேண்டுமென்ற கட்டாயத்தில் பார்வதியும் மற்றவர்களும் மாட்டிக்கொள்கின்றனர். உயிருக்கு ஆபத்து எனும் சூழலில் ஒருவரையொருவர் காப்பாற்றினார்களா அல்லது மோதிக்கொண்டார்களா? உரிய நேரத்தில் வீராவை மருத்துவமனையில் சேர்க்க முடிந்ததா? தன் உயிரைக் கொடுத்தாவது மகனைக் காக்க வேண்டுமென்ற பார்வதியின் நோக்கம் நிறைவேறியதா? நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அரசுத்தரப்பில் எத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்விகளுக்கு விலாவாரியாக விடை தருகிறது ‘O2’.

அரணாக நயன்தாரா!

நேற்றுதான் ‘காஸ்மெட்டிக்’ அறுவைச்சிகிச்சை செய்துகொண்டேன் என்பது போன்ற தோற்றத்திலேயே படம் முழுக்க வந்துபோகிறார் நயன்தாரா. சில ஷாட்களில் மட்டும் ‘புஷ்டி’யாக தோன்றுவது திருஷ்டி கழிப்பு. ஆனாலும், ரித்விக்கின் ஒற்றை பெற்றோர் என்று சொல்லும் வண்ணம் அவரது நடிப்பு அமைந்திருப்பது சிறப்பு. படத்திற்கான அரணாக விளங்குவது அவர் மட்டுமே!

பயம், பதற்றம், ஆக்ரோஷம் என்று உணர்வுகளில் நயன் பின்னியெடுத்தாலும், பேருந்துக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை ‘ஜஸ்ட் லைக் தட்’ அவர் விளக்கும் காட்சி எடுபடவில்லை. அதனை பார்வையாளர்கள் ஏற்கும் வகையில் திரைக்கதையில் ‘முன் தயார்படுத்தல்’ எதுவுமில்லாதது மைனஸ்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் மிரட்டியிருக்கிறார். ஆனால், ரித்விக்கை அவர் குறிவைப்பது இயல்பாக இல்லை. அதனால், அவரது உறுமல்கள் தெலுங்கு பட வில்லன் ரேஞ்சில் நின்றுவிடுகிறது.

ஹலோ கந்தசாமி, ரிஷிகாந்த், ஜாபர் இடுக்கி, அவரது மகளாக வருபவர், ’ஆடுகளம்’ முருகதாஸ், மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர் என்று அனைவரும் பதற்றத்தைப் பார்வையாளர்களான நமக்கு கடத்துவதில் வெற்றியைச் சுவைத்திருக்கின்றனர்.

மீட்புப்படை அதிகாரியாக வரும் லேனாவுக்கோ, அவருடன் வருபவர்களுக்கோ படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அதனாலேயே, பின்பாதியில் ‘அறம்’ பட நயன்தாரா அளவுக்கு அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய ’பெர்பார்மன்ஸ்’ வாய்ப்பு ‘மிஸ்’ஸாகியிருக்கிறது.

இவர்களனைவரையும் தாண்டி குட்டிப்பையன் ‘ரித்விக்’கின் நடிப்பு பாந்தமாக அப்பாத்திரத்துடன் பொருந்திப் போகிறது. ‘ரித்து ராக்ஸி’ல் அசத்தும் அவரது குறும்பு இதில் இல்லை என்றாலும், அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருப்பது அருமை.

தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் செல்வா ஆர்கேவின் படத்தொகுப்பும் அந்த பேருந்துக்குள் நாமே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

விஷால் சந்திரசேகரின் ஒற்றைப் பாடலும் சரி, பின்னணி இசையும் சரி, காட்சிகளுடன் பொருந்தி நிற்கின்றன. கலை ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருக்கும் என்.சதீஷ்குமாரின் உழைப்பு சில இடங்களில் செயற்கையாகத் தெரிந்தாலும், பல இடங்களில் வெறுமை ஏற்படாமல் காக்கிறது.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜிஎஸ் விக்னேஷ். வித்தியாசமான கதைக்களத்தைக் கையிலெடுத்தும் சரிவர அதற்கேற்ப திரைக்கதை எழுதாததால் நல்ல குழுவும் பெரும் உழைப்பும் அமைந்தும் வெற்றியைத் தவற விட்டிருக்கிறார்.

பலவீனமான திரைக்கதை!

நிலச்சரிவுக்குள் பேருந்து சிக்கிக்கொள்வதையும் ரித்விக்கின் பாத்திரத்தையும் ஒன்றாக இணைத்திருக்கும் விக்னேஷின் பார்வை அருமை. ஆனால், அதைத் தாண்டி திரைக்கதையில் திருப்பங்கள் என்று எதுவுமே இல்லை.

பேருந்துக்குள் மின்சாரம் தடைபடுவதோ, அதனை ரித்விக் பாத்திரம் சரி செய்வதோ, பரத் நீலகண்டனின் விநோதமான குணாதிசயம் மற்றவர்களுக்குத் தெரிய வருவதோ, நிலச்சரிவுக்குள் பேருந்து சிக்குவதோ, தடைகளைத் தாண்டி பேருந்துக்குள் உட்புகும் ஆக்சிஜன் பறி போவதோ எவ்வித பில்டப்பும் இன்றி சொல்லப்பட்டிருப்பது ஒட்டுமொத்த திரைக்கதையின் போக்கையும் சப்பென்று ஆக்கியிருக்கிறது.

பேருந்து மண்ணுக்குள் புதையுண்டிருக்கிறது எனும் உண்மையை அறியுமிடம் கூட போதுமான அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதெல்லாமே திரைக்கதையை எழுத்தளவிலேயே பலவீனமாக காட்டிவிடுகிறது. ஆதலால் அவை காட்சிகளாக விரியும்போது நமக்குள் உணர்வெழுச்சி ஏற்படுவதில்லை. இதனாலேயே, ஒட்டுமொத்த படத்தையும் ஒரு விபத்தை வேடிக்கை பார்க்கும் உணர்விலேயே கடந்து வர வேண்டியிருக்கிறது.

முக்கியமாக, தாய் சென்டிமெண்டை தாங்கி நிற்கும் ஹலோ கந்தசாமியின் பாத்திரம் அம்போவென பாதியிலேயே கைவிடப்படுவது அதுவரையிருந்த நமது எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கி விடுகிறது. இதையெல்லாம் கவனமாகத் தவிர்த்து முன்கதையைச் செறிவாக்கி பேருந்துக்குள் சிக்கிக்கொண்டவர்களின் பதற்றத்தை நாமும் உணரும்படி செய்திருந்தால் ‘O2’ கொண்டாடப்பட்டிருக்கும்!

– உதய்.பா

Comments (0)
Add Comment