– ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கவலை
தமிழகத்தில் நடந்து முடிந்த பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின்படி, 9.12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், தமிழில் திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா மட்டும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆங்கிலத்தில் 45; கணிதத்தில் 2,186; அறிவியலில் 3,841; சமூக அறிவியலில் 1,009 பேர் 100க்கு 100 என சென்டம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் அதிகபட்சமாக, கணிதத்தில் 9.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்வு எழுதிய 4.60 லட்சம் மாணவர்களில், 60 ஆயிரம் பேரும்; 4.52 லட்சம் மாணவியரில், 23 ஆயிரம் பேரும் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை. பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
அதனால், தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்து விடாமல் இருக்க, விடைத்தாள் திருத்தும் பணிகளை நடுநிலையுடன் மேற்கொள்ளுமாறு, ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, ஓரளவுக்கு கணித வினாக்களுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்கியதால், தேர்ச்சி விகிதம் 90.89 சதவீதத்தை எட்டியது.
இந்த நடுநிலையையும் தாண்டி, 9.11 சதவீதம் பேரால் கணிதத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அடுத்தபடியாக சமூக அறிவியலில் 8.14 சதவீதம்; அறிவியலில் 6.33 சதவீதம்; ஆங்கிலத்தில், 3.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் கட்டாயத் தாளாக உள்ளது.
இந்நிலையில், 5.16 சதவீதம் பேர்; அதாவது 37 ஆயிரம் மாணவர்கள்; 10 ஆயிரம் மாணவியர் என 47 ஆயிரம் பேர் தாய்மொழியாகிய தமிழில் தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கவலையடையச்செய்துள்ளது.